September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நம்பிக்கைப் பிடிகயிறு (தொடர்ச்சி)

ம. மணிமாறன்
வரலாறு நெடுக நாம் எத்தனை இடர்களை கடந்து மேலேறி வந்திருக்கிறோம்! துயரத்தின் சாம்பல்தானே மனிதகுல வளர்ச்சியின் வேராக நிலமெங்கும் பதிந்திருக்கிறது.. விழுவதும், பின் எழுவதுமாக காலம் முழுக்க காயங்களையும் வலிகளையும் கடந்தே வந்திருக்கிறோம். போர்கள், வெள்ளம், வறட்சி, பஞ்சம், தொற்று என அழிவின் துயரங்களை அடுக்கி மாளாதே.. தாதுவருசப் பஞ்சத்தின் கதைகளை எழுதிஎழுதித் தீர்க்க முடியவில்லையே நம்மால்..

காற்றைக் குடித்து உயிர் வாழும் வித்தையைக் கற்றால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்பதே பஞ்சகாலத்தின் நம்பிக்கைச் சொல்லாக இருந்திருக்கிறது. சமகாலத்தில் வீசும் காற்றிலும் கூட மனித உயிர்களைக் குடிக்கும் விஷம் பரவிக்கிடக்கிறது எனும் அச்சம் பெருகிட அடங்கிக் கிடக்கிறோம். ஒன்று, இரண்டு, மூன்று என எண்கள் நோய்க்கிருமிகளைக் குறித்த எச்சரிக்கை குறியீடாக உருமாறியிருக்கிறது. உருமாறி, உருமாறி சிதைக்கும் கிருமியாட்டத்தில் தடுமாறிக்கிடக்கிறது நம் நிலம். இப்படியே இருந்துவிட முடியாது. ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். எங்கிருந்து துவக்குவது?….எதையும் கல்வியின் வழியாகத்தானே துவக்கியாக வேண்டும்.. நிகழும் சூழல் அதற்கு உகந்ததாக இருக்கிறதா?

பள்ளிக்கூட வளாகங்கள் வெறுமையில் மிதக்கின்றன. ஓடி, ஆடித் திரிந்த மாணவர்கள் அற்ற பள்ளிக்கூடங்களைக் காணச் சகிக்கவில்லை.. பள்ளிக்கூட மணிகள் பயனற்று வெறும் காற்றில் ஆடுகின்றன..இங்கிருந்து கிளம்பிப் போனவர்கள் இனி வருவார்களா?.

“எங்கே பிள்ளைகள்..பிள்ளைகள் எங்கே.. எங்கிருக்கிறார்கள்? ஏன் வர மறுக்கிறார்கள்..அவர்களை வரவைப்பது எப்படி.”..என்பதே இனியான நாட்களின் மிக முக்கியமான உரையாடலாக மாறப் போகிறது.. காலம் பல கசப்பான சொற்களை எச்சமாக விட்டுச் செல்கிறது. இந்தக்காலத்தின் சொற்கள் ஊரடங்கு..தளர்வு, தடுப்பூசி, மட்டுமல்ல. ஆன்லைன் கிளாஸ் என்பதும்தான்.. இது ஊரடங்கு காலத்தின் அதிமுக்கியமான சொல்..எல்லோருக்கும் கல்வி எனும் நம் அடிப்படை உரிமையின் மீது வீசப்பட்ட கூர் ஆயுதம்தான் இந்த ஆன்லைன் கிளாஸ் எனும் சொற்பதம்..நான் இங்கே சொல்ல வருவது ஆன்லைன் கிளாஸின் சாதக பாதகங்களை அல்ல..

இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அது ஒரு இருபாலர் படிக்கும் அரசுப்பள்ளி. +2 தேர்விற்குத் தயாரான மாணவர்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி.. மாணவர்களும், மாணவியரும் வண்ண உடைகள் சூழ மகிழ்ந்திருந்தனர்.. வாழ்த்துகள், ஆசிகள், பிரார்த்தனைகள், பாராட்டுக்கள் என களைகட்டியது பள்ளிக்கூட வளாகம்.. எல்லாம் முடிந்து கலைந்த பிறகு உற்சாக மிகுதியில் ஒரு மாணவன், தான் கொண்டுவந்திருந்த செல்ஃபோனில் நண்பர்களோடு போட்டோ எடுக்கத்துவங்கினான்.
சிரித்து மகிழ்ந்து மாணவர்களும் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. ஒழுக்க மேனேஜராக தன்னைப் பாவித்துக் கொண்டு பள்ளிவளாகமே தன் கண்பார்வையில்தான் இயங்குகிறது என நம்பிக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் பார்வையில் படும்வரை. தற்செயலாக அவர் கண்ணில் பட்டுவிட்டது. அவ்வளவுதான்.. அந்த செல்ஃபோனைப் பாய்ந்து பிடுங்கினார். நாலு அஞ்சு அடி, கர்ண கொடூரமான வசவுகள் என நிலைமை தலைகீழாகியது.

“ஏண்டா முட்டாப்பயலே, என்னல செய்யிற..கேர்ள்ஸ போட்டோ எடுத்திருக்கியா? அறிவில்ல?”..”சார், இல்ல சார்..பசங்களாத்தான் எடுத்திருக்கோம். வேணும்னா நீங்களே ஓப்பன் பண்ணி பாருங்க சார்”

“நீ செய்வ.. ஆமா அந்த ஆட்டோக்காரன் மகந்தானடா நீயி. உனக்கு எப்பிடி செல்ஃபோனு?”..”சார் பிளீஸ் சார், அதக் குடுத்துருங்க, அது என்னோடதில்ல சார். பிரண்டுட்ட வாங்கிட்டு வந்தேன். சார் சார்.. இனிமே கொண்டு வரமாட்டேன்..”

கெஞ்சிக்கூத்தாடும் மாணவனின் எந்தக் குரலும் அந்த ஆசிரியரின் காதினை எட்டவில்லை. நேராக நடந்து தலைமையாசிரியரிடம் ஆக்ரோஷமாகச் சொல்லியபடி ஃபோனை அவரிடம் ஒப்படைத்துவிட்டார். சார், பிளீஸ் சார் என பின்னாலேயே சென்ற அந்த மாணவன் திகைத்து நின்றுவிட்டான்.

“வாங்க சார்..படிக்கிற பிள்ளை ஸ்கூலுக்கு செல்ஃபோன் கொண்டு வந்திருக்கீங்க,சொல்லுங்க சார். தப்பா இல்லியா”..அவனுக்கு பகீர் என்றது. இப்பிடித்தான் தலைமையாசிரியர் கோபம் அதிகமாகிவிட்டால் வார்த்தைக்கு வார்த்தை சார், சார் என்பார்.”இனி செய்யமாட்டேன். இந்த ஒரு தடவை எக்ஸ்கியூஸ் குடுங்க ப்ளீஸ்”..”ஏண்டா எத்தனை தடவை பிரேயர் மீட்டிங்கில படிச்சுப்படிச்சு சொல்லிருக்கேன்.. செல்ஃபோன் கொண்டு வரக்கூடாது. கொண்டுவந்தா அவ்வளவுதான்.. டீ.சி.குடுத்துருவேன்னு.. நீ அதையும் மீறி கொண்டு வந்திருக்க, நாளைக்கு காலையில உங்க அப்பாவக் கூட்டிட்டு வந்து வாங்கீக்கோ..அப்பத்தான் உங்க அப்பாவுக்கும் புத்திவரும். பள்ளிக்கூடப் பிள்ளைக்கு செல்ஃபோன் எதுக்குன்னு அவருக்கும் தெரியணுமில்ல..”

சார், சார்.. என கெஞ்சத் துவங்கினான். “எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா தோல உரிச்சிருவாரு சார். இது பிரண்டோடது சார். இந்த ஒருதடவை மன்னிங்க சார்.”..

இந்த சம்பவம் கற்காலத்தில் நடந்ததில்லை. மூன்று வருடத்திற்கு முந்தைய சம்பவம்தான். இதே போலான சம்பவங்கள் அநேகமாக எல்லா பள்ளிக் கூடங்களிலும் நடந்தவைதான்.

அப்படியே உங்கள் மனதின் திரையை நிகழ்காலத்தில் கொண்டு வந்து நிறுத்துங்கள். காலம் எப்படி தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை உணரமுடியும். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் அவசியம். சொல்றது காதில விழுதா.. அதே தலைமையாசிரியர் மாணவனின் பெற்றோரிடம் விடாமல் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்..!

எல்லோரும் ஸ்மார்ட் ஃபோன் வேணும்னு வீட்டை நச்சரிக்கத் துவங்கியது போன வருடத்தின் கதை…ஸ்மார்ட் ஃபோன் வாங்க முடியாததால் புரோட்டாக் கடைக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் தங்கப்பாண்டியை பலருக்கும் தெரியாது. ஸ்மார்ட் ஃபோன் கடன உடன வாங்கி வாங்கியாச்சு. ஆனா கிளாஸ் அட்டெண்ட் பண்ணணும்னா டேட்டா வேணுமில்ல, அதுக்கு என்ன செய்ய..நீ படிச்சது போதும், நீயும் லோடுமேனாத்தான் ஆகணுங்கிறது உன்னோட தலைவிதி போல.

நாளையிலிருந்து கிளம்பு.. என ஒரு வருடமாக உதிரிப் பாட்டாளிகளாக ஆகிவிட்ட நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியரின் துயரத்தை எப்படிக் களைய…எல்லாம் சரியாகி வகுப்பறைகள் திறந்தாலும் கூட ஒரு பெரிய சமூக சவாலை ஆசிரியர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தங்கப்பாண்டிகளும், செல்லையாக்களும் திரும்புவார்களா?…காலம்தான் பதிலுரைக்கும். காத்திருப்போம் நல்ல பதிலுக்காக.. நம்பிக்கையுடன்.

(9443620183 – [email protected])
(தொடரும்)

Spread the love