September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

21-ம் நூற்றாண்டுக்கான கழிப்பறை

புதிதாக வர இருக்கும் கழிப்பறைகள் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டவை.. சிறந்த பொறியியல் நுணுக்கத்தோடு தயாரிக்கப்பட்டவை.. திடக் கழிவுகளிலிருந்து சாம்பலைத் தவிர வேறெதையும் உருவாக்காத  நம்பிக்கைக்குரிய வேதியியல் வினைகள் கொண்டவை.. சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குடிநீராகப் பயன்படுத்த முடியாதே தவிர, பிற வகைகளில் மறுபயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றித் தரக்கூடியவை.. இப்படி பலவகைகளில் தனித்துவம் மிக்க வசதிகள் கொண்டவை. இந்தப் பல்நோக்கு மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கழிப்பறைகள் எதிர்காலத்திற்கானவை என பிஎம்ஜிஎஃப் நம்பிக்கை தெரிவிக்கிறது. கோயம்புத்தூரிலும் தென்ஆப்பிரிக்காவின் டர்பனிலும் புதியவகை முன்மாதிரி கழிப்பறைகள் மீது பரிசோதனை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலிஃபோர்னியா பொறியியல் நிறுவனம்(கால்டெக்), தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் கழிப்பறைகளின் உள்ளே செயல்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கின்றன. சில தயாரிப்புகள் உடனேயே செயல்படும் நிலையில் உள்ளன. எராம் சயின்டிபிக் என்ற கழிப்பறை தயாரிக்கும் நிறுவனத்துடன் கால்டெக் செய்துகொண்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கை புதிய தொழில்நுட்பத்தை பெரிய அளவில் மக்களிடையே கொண்டுசெல்ல உதவும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறைகளின் சிறப்பு என்னவெனில் அவை எதையுமே வெளியேற்றா என்பதுதான்! கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? திரவக் கழிவுகளை அவை ஃபிளஷ் செய்வதற்கான நீராகவும் திடக்கழிவுகளை பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் சிறு உருண்டைகள் அல்லது சாம்பல் ஆகவும் மாற்றிவிடுகின்றன. மிகப் பெரிய அளவில் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் மலிவான மாடல்களை உருவாக்குவதில்தான் இத்திட்டத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஹெல்ப்ளிங் நிறுவனம் 500 டாலர்கள் செலவில் ஒரு மாடலை உருவாக்கியிருக்கிறது. இந்தப் புதிய கழிப்பறைகள் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, மலக் கசடுகளைச் சுத்திகரிக்கும் ஆலைகளுக்கான ஆம்னி செயலிகளை (faecal sludge treatment plants-FSTP) தயாரிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த வெளியேற்றம் இல்லா செயலிகள் கழிப்பறைத் தொட்டிகளிலிருந்து எடுக்கப்படும் மலக் கசடுகள் ஆறுகள், ஏரிகள், பண்ணைகள், திறந்த வெளிகள் போன்ற இடங்களில் கொண்டுபோய்க் கொட்டப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும். கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி தொழிலாளர்கள் இறப்பதையும் இந்த கழிப்பறைகள் தடுக்கும். நகரங்களில் சேரும் கழிவுகளைச் சுத்திகரிப்பதில் இந்தியாவின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 847 சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இந்த ஆலைகளை முழுப் பயன்பாட்டிற்குக் கொணர்ந்து விட்டு, அவற்றில் மலக் கசடுகளைக் கையாளக்கூடிய ஆம்னி செயலிகளைப் பொருத்தி மீட்டுருவாக்கம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாதிரி ஒரு முன்னேறிய மாநிலத்தில் கூட 30 சத நகரக் கழிவுகளே சுத்திகரிக்கப்படுகின்றன என்கிறார் பிஎம்ஜிஎஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான இயக்குநர் அல்கேஷ் வாத்வானி. மறுபுறம், 3500 சிறு நகரங்களில் கழிவுகளைச் சுத்திகரிப்பதென்பது அறவே இல்லை. ஆனாலும் நம்பிக்கைக் கீற்றுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. 115 மலக்கசடு சுத்திகரிப்பு ஆலைகள் தேவை என ஒடிசா அரசு அறிவித்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் இதில் முன்கை எடுத்து 33 ஆலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழ்நாடு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து  48 ஆலைகளை நிர்மாணிக்கப் போவதாகவும் மலக்கசடு சுத்திகரிப்பு பிரச்சனையின் 80 சதத்தை 200 கோடி ரூபாய் செலவில்  சமாளித்து விட முடியும் என்றும் அறிவித்திருக்கிறது. சிறு நகரங்களைப் பொறுத்த அளவில், இரண்டு மூன்று நகரங்கள் இணைந்து ஆலை அமைப்பதற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றி யோசிக்கலாம்.

பில் கேட்ஸ் முன்வைத்திருக்கும் இந்த சமூகப் பயன்பாட்டிற்கான திட்டம் நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நம் நாட்டின் ஸ்வச் பாரத் திட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் குடிமகளுக்கும் கழிப்பறை கிடைப்பதை உறுதிப்படுத்த இந்த நவீன திட்டத்தை அமுல்படுத்தினால் ஒரு புதிய இந்தியா உண்மையிலேயே பிறந்துவிட்டதாக நாமெல்லாம் மகிழ்ச்சியடையலாம்.

Spread the love