September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 19 பதிவு… 

கொல்லும் ஏற்றத்தாழ்வு! 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளாக அம்மாநாடு நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், சிந்தனைவாதிகள், பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் என சமூகத்தை கட்டமைக்கும் பல தரப்பினரும் கலந்துகொண்டு உலகின் போக்கு குறித்து அம்மாநாட்டில் உரையாடுவார்கள்.

இந்த மாநாட்டையொட்டி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அறிக்கை வெளியாவது வழக்கம். அந்த அறிக்கை உலகின் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையைச் சுட்டிக்காட்டி, பொருளாதார கொள்கை ரீதியாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய விசயங்களை உணர்த்தும். இந்த ஆண்டு, ‘கொல்லும் ஏற்றத்தாழ்வு’ (Inequality Kills) என்ற தலைப்பில் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வெளியிட்டுள்ளது

 இந்தியாவின் நிலைமை

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா முதல் அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், தொழில்கள் முடங்கின; பலர் வேலை இழந்தனர்; பலர் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்தனர்.
கோடிக்கணக்கான மக்கள் வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டனர். முதல் அலையின் தீவிரம் குறைந்து, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் சற்று மீளத் தொடங்கியது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு கரோனா இரண்டாம் அலை வேகம் கொள்ளத் தொடங்கியது. மீண்டும் ஊரடங்கு. மீண்டும் வருவாய் இழப்பு. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய பில்லியனர்கள் சொத்துமதிப்பு இருமடங்கு அளவில் அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

மார்ச் 2020 – நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து  ரூ.53.16 லட்சம் கோடியாக  உயர்ந்துள்ளது. அதேசமயம் 4.6 கோடி இந்திய மக்கள் மிக மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 84 சதவீத குடும்பங்களின் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 102-லிருந்து 142-ஆக உயர்ந்துள்ளது என்கிறது இவ்வறிக்கை.

பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதே இந்தியாவில் வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. பில்லினர்களுக்கு தனி வரி

இந்தியாவில் உள்ள 98 பில்லினிய குடும்பங்களுக்கு 4 சதவீத சொத்துவரி விதித்தால் இரண்டு வருடங்கள் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செலவினங்களை கவனித்துக் கொள்ளலாம் அல்லது பதினேழு வருடங்களுக்கு நாட்டின் மதிய உணவு திட்டத்திற்கு அல்லது ஆறு ஆண்டுகளுக்கு சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களுக்கு செலவிடலாம்.

இதேபோல அந்த குடும்பங்களுக்கு ஒரு சதவீத சொத்து வரி விதித்தால் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கோ அல்லது இந்திய அரசின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறைக்கு ஓர் ஆண்டு நிதி அளிக்க முடியும் என்ற தகவல்களை இவ்வறிக்கை தருகிறது. மேலும் இந்த மெகா பணக்கார குடும்பங்களுக்கு வெறும் ஒரு சதவீத சொத்துவரி விரித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முடியும் என்கிறது இந்த அறிக்கை.

“நெல்லு விளைஞ்சிருக்கு, வரப்பு உள்ள மறஞ்சிருக்கு, காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்!” என்னும் நிலைமைதான் இன்னும்நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை நமக்கு உணர்த்துகிறது!

தொடர்புக்கு: [email protected]

 2022 பிப்ரவரி 14 தமிழ் இந்துவில் சுப. மீனாட்சி சுந்தரம் எழுதிய கட்டுரையிலிருந்து

Spread the love