May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 15 பதிவு…

சமூகநீதியை இலக்காகக் கொண்ட தொழில்நுட்பப் புரட்சிகள்

கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன? குறிப்பாக, பரந்துபட்ட அளவில் சமூகப் பயன் தரும் தொழில்நுட்பச் சாதனைகள் என்ன என்று இந்த நூலில் டில்லிபாபு அற்புதமாக விவரிக்கிறார். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, பொதுப் போக்குவரத்துப் புரட்சி, பாதுகாப்புத் துறைப் புரட்சி போன்ற முக்கியத் தொழில்நுட்ப புரட்சிகளின் உதவியோடுதான் எல்லா அவலங்களையும் ஓரளவேனும் ஒழிக்க முடிந்துள்ளது என இந்த நூலில் விவரிக்கிறார். வெறும் அறிவியல் தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டு முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தட்டையாகக் கூறாமல் வளர்ச்சித் திட்டங்களின் பின்புலமாக விளங்கிய சமூகநீதி சார்ந்த அரசியல் உறுதி குறித்தும் ‘அரசியல்-அறிவியல் புரட்சிகள்’ எனும் முதல் இயலில் விவரிக்கிறார். இந்தப் புரட்சிகளில் இந்திய அறிவியலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்தும் விவரித்துத் தற்சார்புக் கொள்கை எப்படி நம்மை இதுவரை வழிநடத்தியது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

வாசிக்கத் தூண்டும் நடை இந்த நூலின் தனிச்சிறப்பு. பொதுவாக, அறிவியல் நூல்கள் என்றாலே பாடப் புத்தகம்போல இருக்கும் என்ற கருத்தை உடைத்து, சிறுகதைகளைப் படிப்பதுபோன்ற உணர்வை இந்த நூல் தருகிறது. ‘வந்தேண்டா பால்காரன்…’, ‘உணவதிகாரம்’ போன்ற தலைப்புகள் ஈர்க்கின்றன.

‘பிறந்து வளரும்போது திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்திய நான்… இரண்டு அரசுப் பள்ளிகளில் உயிரிக் கழிப்பறைகளை அமைத்திருக்கிறேன் என்பதில் மனநிறைவடைகிறேன்’ என்று கூறும் அறிவியலர் டில்லிபாபுவின் சமூகப் பார்வைதான் இந்த நூலின் அடிநாதம். நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுவதோடு, நமது எதிர்காலக் கவனம் சமூகப் பயன் நோக்கி இருக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.

-பிப்ரவரி 12, 2022 தமிழ் இந்துவில் வி.டில்லிபாபு எழுதிய சுதந்திர இந்தியாவின் பாரியியல் புரட்சிகள் என்ற நூல் அறிமுகக் கட்டுரையில் த.வி. வெங்கடேஸ்வரன் எழுதியதிலிருந்து…

——————————————————————————-

நம் கேள்வி… சங்பரிவாரத்தினருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்? வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொள்பவர்களிடம் எதை எடுத்துச் சொல்ல முடியும்?

Spread the love