June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 ஜனவரி 13 பதிவு…

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக ஞெகிழி ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஞெகிழிப் பைக்கு மாற்றாகத் துணிப்பையைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் ‘மஞ்சப் பை இயக்கம்’ திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ‘மஞ்சள் பை’ இயக்கத்தைத் தொடங்கியவர் மதுரையைச் சேர்ந்த கௌரி. இவரும் இவருடைய கணவர் கிருஷ்ணனும் சேர்ந்து இதைச் செயல்படுத்திவருகிறார்கள்.

இயற்கைக்குத் திரும்புவோம்!

கௌரி, கிருஷ்ணன் இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவர்கள். 2014இல் இவர்களுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நேரம் மூச்சிரைப்பு அதிகமானது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது ஞெகிழியை எரிப்பதால் உருவாகும் நச்சு காற்றில் கலப்பது தெரியவந்தது. காற்று மாசு குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியோரையும் பாலூட்டும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிப்பதாகத் தெரிந்துகொண்டார்கள். அதன் பின் ஞெகிழியின் சீர்கேடுகள் குறித்த தேடலில் இறங்கினார்கள்.

அதிக ஞெகிழி பயன்பாட்டால் காற்று மட்டுமல்ல, மண்ணும் மலடாகிறது; அவை மக்குவதும் இல்லை என்பது புரிய, முதல்கட்டமாக ஞெகிழிப் பை பயன்பாட்டைக் குறைப்பது என முடிவெடுத்தனர். அவற்றுக்கு மாற்றாகத் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க நினைத்தவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘ஐந்திணை விழா’வில் ஞெகிழி பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பிறகு முதல்கட்டமாக 200 துணிப்பைகளைத் தைத்து வாங்கி விற்பனை செய்தனர்.

“இதற்காகவே என் வேலையை விட்டுவிட்டேன். 2014 இறுதியில் இந்தத் துணிப்பை திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். மதுரையில் துணிப்பை உற்பத்தியாளர்கள் அதிகம் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்குக் குடியேறினோம். துணிப்பைகள் நீடித்து உழைக்கும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கும் தன்மை கொண்டவை என்பதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்” என்று சொல்லும் கௌரி, ‘யெல்லோ பேக்’ (theyellowbag.org) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

 “நாங்கள் எடுத்து வைத்திருப்பது மிகச் சிறிய அடிதான். மாற்றவும் சீர்படுத்தவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக துணியிலான நாப்கின்களைப் பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கூடுமானவரைக்கும் இயற்கைக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்தலாம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு அவசியம். வீட்டைத் தாண்டி வெளியே வந்தால்தான் பார்வையும் சிந்தனையும் விசாலமடையும். அது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கௌரி.

(2022 ஜனவரி 2 தமிழ் இந்து “பெண் இன்று” இணைப்பில் பிரதிமா எழுதிய கட்டுரையிலிருந்து)

Spread the love