June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2…(பொய் மனிதனின் கதை தொடர்கிறது)

அடுத்து “சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது.

லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும் போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி.

”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1-ம் தேதி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “ என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது.

சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக் குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில் இருந்தது.

ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச் சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார்.

ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள்”, ‘மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.

“பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும்” என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்.

அந்த கேள்விக்கு “நான் பிரதமராக நினைத்ததே இல்லை. ஆனால் பள்ளியில் லீடராகும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்று புன்னகைத்துக் கொண்டே உண்மை பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறார்?

ஆனால் பதவிக்கும், அதிகாரத்துக்கும் எப்போதும் ஆசைப்படாதவராய், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் தன்னைத் தேடி வந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவராய் காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நினைத்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை.

ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையானவராய், நேர்மையானவராய் செயல்படுவதன் மூலமே தன்னை அவ்வாறு நிலைநாட்ட ஒருவர் முயற்சிக்க வேண்டும். வெறும் வாய் வார்த்தைகளாலேயே தன் பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கம்தான் உண்மையில் அல்பத்தனமானது. உண்மைக்கு மாறாக தன்னை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பது அருவருப்பானது,.

அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது தேசத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்து கொண்டு, அவரை அண்ணாந்து பார்க்கும் குழந்தைகளிடமா அப்பட்டமாகப் பொய் சொல்வது?

”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக் கொன்றான். அதை அவன் பின்னால் இருந்து ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தது” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருதடவை பகிர்ந்த ஜென் கவிதையை நினைக்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு உணர்வை மோடியின் இந்தப் பொய் தந்தது.

2014-ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான சேட்டன் பகத், 2021 மே மாதத்தில் என்.டி.டிவியில் ”மோடியின் பிம்பத்திற்கு இப்போது ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று சொன்னார். மோடியின் தொடர்ந்த பொய்களும், புரட்டுகளும் தந்த அச்சம், அந்த எழுத்தாளரை அப்படி பேச வைத்தது.

பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார் மோடி என்பது தெரிகிறது. பேசும் ஒவ்வொரு விஷயத்திலும் பொய்கள் நிறைந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது. ‘அவருக்கு அதுதான் வேலை’ என அலட்சியமாய் கடந்து சென்று விடுகிறோம். கிண்டல் செய்கிறோம். கேலி பேசுகிறோம். அவருக்கு வரலாறு தெரியாது, விஞ்ஞானம் தெரியாது என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

Spread the love