September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆசிரியர் தின சிறப்பிதழ் போல அமைந்திருந்தது இம்மாத புதிய ஆசிரியன் இதழ் அட்டை கார்ட்டூனில் தொடங்கியது சிரிப்பு வெடி. அ.குமரேசன் ஆன்லைன் கிளாஸில் வாணவெடி. செல்வகதிரவனின் பூ மத்தாப்பு. சரவெடியாக உமாவின் கோரிக்கைப் பட்டியல். கலசமாகப் பொங்கி சிரிக்க வைத்தது டாக்டர் எறிந்த ஜாவலின் புதுவெடி. தன் இல்லத் திருமண ஏற்பாட்டுக்கிடையிலும் சோழ. நாகராஜன் பலத்த சத்தத்தோடு வெடிக்கும் நாட்டுவெடிகளைத் தொடர்ந்து வெடித்துள்ளார். மொத்தத்தில் சூப்பராக அமைந்த இதழ். வாழ்த்துகள்
ஆர். ஜெயராமன், புதுச்சேரி (தற்போது பெல்லாவியில்)


“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போல் செயின்” என்னும் குறளை வியாபாரம் செய்வதில் நாணயம் வேண்டும் என்று இளநீர் விற்கும் பார்வதியை பேசவைத்துள்ளார், செல்வகதிரவன். மேலும், ‘கெட்ட வழிகளில் சம்பாதித்த பொருள் பயன்படாது’ என்னும் கருத்தைச் சொல்லும் “அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” என்ற குறளை பார்வதி மூலம் நமக்குக் கூறிய செல்வகதிரவன் ஆற்றல் பெரிது. மேலும், வன்முறை வளரக்கூடாது என்று அந்தப் பெண் வியாபாரி மூலம் சொல்ல வைத்ததும், மற்ற வியாபாரிகள் பதில் சொல்லமுடியாத அளவிற்கு தன்னுடைய கருத்தை முன்வைத்த திறமையையும் நாங்கள் வியக்கின்றோம்.
-மாணவர்கள் அகல்யா, கண்மணி, மாரிஸ்வரி, சுவேதா, கிஷேர், யோகிதா, மகாலட்சுமி, முகிலன் (அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்)


‘அமெரிக்காவின் யதேச்சதிகாரப் போக்கினை கட்டுப்படுத்தும் அளவுக்கு ஐ.நா. வலுப்பெற வேண்டும்’ என்பது ஆசிரியர் குழுவின் எதிர்பார்ப்பு மட்டுமன்று. எங்களைப் போன்றோரின் எதிர்பார்ப்பும் அதுவே. மதுக்கூர் இராமலிங்கம் ‘சொன்னதும் – சொல்லாமல் விட்டதும்’ கட்டுரையில் நிறைய சொல்லியிருக்கிறார். செல்வகதிரவனின் ‘இளநீர் கடையில்’ – சிறப்பு. ‘உறவுக்காரரைவிட நண்பர்கள் மீது அதிக மதிப்பு வைப்பதால்தான் அந்த நட்பில் விரிசல் ஏற்படும்போது மனிதர்கள் அதிக தவிப்புக்கும் உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்’ என்ற எஸ்.வி.வி.யின் வரிகள் நிதர்சனம். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தைப் பார்த்தபோதே, இது நிச்சயம் புதிய ஆசிரியனின் விமர்சனப் பகுதியில் இடம்பெற வேண்டிய ஒன்று என்ற எங்களின் எதிர்பார்ப்பை சோழ.நாகராஜன் நன்றாகவே பூர்த்தி செய்துள்ளார். சகாயராஜாவின் ‘இப்போது சத்தமில்லை’ கவிதை – உருக்கம். உமாவின் ‘கோரிக்கைப் பட்டியல்’ – செம. இணையத்திலும் புதிய ஆசிரியன் இதழ்- வரவேற்கிறோம்.
சி.அ.முருகன், திருவண்ணாமலை.


அகவிலைப்படி விஷயத்தில், நிதிநிலையைக் கருத்தில் கொண்டு சில மாதங்கள் பொறுத்திருங்கள் என்று நிதியமைச்சர் சொல்லியிருந்தால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும் என்ற ராஜகுருவின் பதில் மெய்யான வார்த்தைகள். நிதியமைச்சரின் வார்த்தைகள்தான் அவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தின.
வி.சகாயராஜா, திண்டுக்கல்

Spread the love