September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சி.அ.முருகன், திருவண்ணாமலை.


1) நீட் தேர்வு, புதிய வேளாண் சட்டங்கள், சி.ஏ.ஏ.-இவற்றுக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானங்கள் மட்டுமே பயனளிக்குமா?


தமிழக அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டமன்றத் தீர்மானங்கள் முதல் படி. ஏற்கனவே தமிழக முதல்வர் பிரதமரைச் சந்தித்து விரிவான கோரிக்கை மனு அளித்துள்ளார். மோடி அரசைப் பொறுத்தவரை எதிர்க் கட்சிகளின் கருத்து, மக்கள் மற்றும் ஊடகங்கள் கருத்து, சமூகப் போராளிகள் கருத்து எல்லாமே கால் தூசுக்கு நிகர்தான். நாடு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப சட்டப் போராட்டம், களப் போராட்டம், தேர்தல் களத்தில் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை.. எனப் பல காரணிகள் தேவை. விடாமல் முயன்றால் சட்டமன்றத் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவது சாத்தியமே.


2)தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதேன்?


புதிய ஆளுநர் ஆர்.என். ரவி நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியபோது எதேச்சதிகாரமாக நடந்து கொண்டதால் எதிர்ப்புகளுக்கு ஆளானவர். இந்திய உளவுத் துறையில் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே மோடி அரசு அவரை இங்கே அனுப்பியிருக்கிறது என்ற ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இங்கே பொறுப்பேற்றதும் “அரசியல் சட்டத்தின்படி செயல்படுவேன்.. தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று அவர் பேட்டி கொடுத்திருக்கிறார். ‘முழு ஒத்துழைப்பு’ என்றால் என்ன என்று பார்க்கத்தானே போகிறோம்?


எஸ்.விஸ்வநாதன், மதுரை-10


அடுத்த வருடம் வரக்கூடிய உ.பி. மாநிலத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜகவினரும் சொல்கிறார்கள்.. அகிலேஷ் யாதவும் சொல்கிறார். எதை நம்புவது..?


இவர்கள் சொல்வதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. தேர்தலில் அகிலேஷ், மாயாவதி, காங்கிரஸ் எல்லாரும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அரசியல் கட்சிகளின் ஈகோ அவர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்கிறது. மோடியே திரும்ப வரட்டும், மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.. நமக்கு நம் சுயகவுரவம்தான் பெரிது என்று எதிர்க்கட்சிகள் நினைக்கும்வரை நம் நாட்டிற்கு விடுதலை இல்லை.


ஹரிணி, மேற்கு தாம்பரம்


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10 அன்று மட்டுமே. ஆனால் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களிலும் பேரணி நடத்த பாஜகவினர் முதலில் திட்டமிருந்தாலும் கடைசியில் அலுவலகங்களில் பூஜையோடு நிறுத்திக் கொண்டார்கள் போல் இருக்கிறதே..?


எல்லா மதத் திருவிழாக்களையும் மாநிலங்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே அறிவித்துவிட்ட பிறகு தமிழக பாஜகவுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. சில சமயங்களில் பாஜக தலைமை ஒன்றைச் சொல்லும், ஆனால் அக்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே மீறுவார்கள். நல்ல வேளை இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. பாவம், கலவரம் ஏதும் நடக்காததால் மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் ஏமாந்து போயிருப்பார்!


வி.சேகர், ஆரணி


எங்கள் கட்சியில் யாரும் நிரந்தர முதல்வர் ஆக இருக்க மாட்டார்கள் என்கிறாரே கமல்ஹாசன்..?
கமல்ஹாசன் நடிப்பில் மட்டும் அல்ல..ஜோக் அடிப்பதிலும் கில்லாடி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான்!


மாலதி சுப்பிரமணியன், சென்னை-51


ராபியா என்ற இளம் பெண்ணை டெல்லியில் ரவுடிகள் படுகொலை செய்திருக்கின்றரே.. இந்தக் கொடுமைகள் எப்போதுதான் நிற்கும்..?


டெல்லி மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர் இருபத்தொரு வயதே நிரம்பிய ராபியா. அலுவலகத்தில் நடைபெறும் அராஜகங்களுக்கும் அநியாயங்களுக்கும் துணை போகாத நேர்மையான காவல் துறை அதிகாரி. இந்த ஒரே காரணத்திற்காக நான்கு பேர் கொண்ட காம மிருகங்கள் ராபியாவின் உடலை சின்னாபின்னமாக்கி துவம்சம் செய்துள்ளனர். அவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். நம் இஸ்லாமிய சகோதரி ராபியாவிற்கு கண்ணீர் அஞ்சலி.


அரவிந்தன், கோவை.


பொன்மொழி ஒன்று சொல்லுங்களேன்!
மரம்…/ அமைதியைத்தான் / விரும்புகிறது.
ஆனால்…/ காற்று அதை / அனுமதிப்பதில்லை.

  • மாவோ
Spread the love