May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஸ்ரீ குட்டியின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்


சிதம்பரம் இரவிச்சந்திரன்

சமீபத்தில் ஒரு வயது நிரம்பிய ஸ்ரீ குட்டி என்ற குட்டி யானை, அரிசி மற்றும் ராகியால் செய்யப்பட்ட கேக்கை வெட்டி வித்தியாசமான முறையில் தன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது. கேரளா திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் இந்த வினோதமான பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இது ஒரு யானையின் பிறந்தநாள் என்பது மட்டும் இதன் சிறப்பு இல்லை. 2019 நவம்பரில், கொல்லம் மாவட்டத்தில், தென்மலா எஸ்டேட்டிற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் மோசமான காயங்கள், புண்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் ஸ்ரீ குட்டி வனத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்து ஒரு மாதமே ஆன ஸ்ரீ குட்டி ஆற்றுவெள்ளத்தால் அதன் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து அடித்து வரப்பட்டது. திருவனந்தபுரத்திற்கு 30 கி.மீ தொலைவில் உள்ள கொட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துவரப்பட்டது. ஸ்ரீ குட்டி உயிர் பிழைப்பதற்கு 40 சத வாய்ப்பு மட்டுமே இருந்ததாக வனத்துறைச் சரகர் என்.எம்.வி.சதீஷ் கூறினார். ஆரம்பத்தில் குளுக்கோஸ், லாக்டோஜன் ஆகியவை கலந்த உணவு வழங்கப்பட்டு, வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, வைட்டமின் பி மற்றும் ராகி கலந்த உணவு கொடுக்கப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து அதன் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பு பெறுகிறது. அரிசி, ராகியால் செய்யப்பட்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அரிசி, ராகி ஆகியவை யானைகளுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் உணவு. இந்தக் கொண்டாட்டத்தில் மூன்றரை வயதான கண்ணன் என்ற குட்டி யானை முதல் 78 வயதான சோமன் வரை 15 யானைகள் அணிவகுத்து நின்று பங்கேற்றன. இந்தக் கொண்டாட்டத்திற்காக, மையத்தில் ஒரு வனப்பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று துணை வனத்துறை அதிகாரி வி.எஸ்.ரஞ்சித்குமார் கூறினார்.. ஸ்ரீ குட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும், யானைப் பிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் என்னே பரிதாபம்! குட்டி யானைகளுக்கு ஏற்படும் ஹர்பிஸ் என்ற வைரஸ் நோய் தாக்கி ஸ்ரீ குட்டி சமீபத்தில் மரணமடைந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
(73390 89961 – [email protected])

Spread the love