September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஷாஜஹான் பற்றி ஆதாரங்கள் இல்லாத அவதூறு

எம். சலீம் பெக்
தாஜ்மஹால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச்சின்னம். உலக பாரம்பரிய தலமாக ஐ.நா.வின் கலாச்சார அமைப்பு இதை அங்கீகரித்துள்ளது. கருத்தியல், செயல்பாடு, அணுகுமுறை மற்றும் செவ்வனே கட்டி முடித்தல் ஆகிய அனைத்துக் கோணங்களின் அடிப்படையிலும் கட்டிடக் கலையின் தலைசிறந்த படைப்பாக இது விளங்குகிறது என யுனெஸ்கோ பாராட்டுகிறது. பதினேழாம் நூற்றாண்டின் இந்த அதிசயம் சித்தாந்தத்தால் இயக்கப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்குள் மீண்டும் சிக்க வைக்கப்பட்டுள்ளது. விளைவாக, வரலாறு திரிக்கப்படுகிறது.. இருளில் மூழ்கி அடிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை 2021 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தபோது கருத்தியல் சார்ந்த ஒரு கதையை உருவாக்கும் முயற்சி நடந்தது. அந்த கோவிலில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது மலர்தூவி அவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஆனால் இந்தச் செயல் முகலாயர்களை விமர்சிக்க ஒரு காரணமாகவும் மாறியது. பல செய்தி சேனல்கள் திருவாளர் மோடியை முகலாய பேரரசர் ஷாஜஹானுடன் ஒப்பிடத் துவங்கின. துப்புரவுப் பணியாளர்கள் மீது மலர் இதழ்களைப் பொழிந்து கவுரவித்த பிரதமர் போல் இல்லாமல், தாஜ்மஹாலைக் கட்டியவர்களின் கைகளை ஷாஜஹான் வெட்டிவிடச் செய்தார் என்ற செய்தி பரப்பப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின் உற்சாகம் இதனால் கரைபுரண்டது. தாஜ்மஹாலைக் கட்டிய தொழிலாளர்களின் கரங்கள் வெட்டி எறியப்பட்டன என்ற செய்தி காட்டு வெள்ளமாக சமூக ஊடகங்களிலும் பரவத் தொடங்கியது.
ஆனால் இது இட்டுக் கட்டப்பட்ட நகர்ப்புறக் கட்டுக்கதை என்பதுதான் உண்மை. ஷாஜஹான் இதைச் செய்தார் என்பதை நிறுவிட எவ்வித வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. 1960-களிலிருந்து இத்தகைய கட்டுக்கதைகள் அவ்வப்பொழுது மேலெழும்பி வருகின்றன. இந்த கட்டுக்கதை மீண்டும் தற்போது மேலெழும்பி வருவதால் வரலாற்றுப்பூர்வமான சில ஆவணங்களுக்குள் மீண்டும் உட்புகுந்து உண்மையை நிலைநிறுத்துவது அவசியமாகிறது.
ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக உருவானது தாஜ்மஹால் என்பது நாம் அறிந்த செய்தி. அது எவ்வாறு கட்டப்பட்டது என்ற தகவல்களை அறிய அரபு எழுத்துக்களில் உள்ள பல்வேறு வரலாற்று மற்றும் குரானியக் கல்வெட்டுகள் உதவுகின்றன என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. இதை நிர்மாணிப்பதற்காக கொத்தனார்கள், கல்வெட்டு செதுக்குபவர்கள், ஓவியர்கள், கைவினைஞர்கள், குவிமாடம் கட்டுபவர்கள் மற்றும் பிற கலைஞர்கள் முகலாய சாம்ராஜ்ஜியம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, மத்திய ஆசிய நாடுகள், ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டனர்.
“இந்தோ இஸ்லாமிய கட்டடக்கலையின் பாரம்பரியத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடக்கலையை தாஜ்மஹால் தாங்கி நிற்கிறது. மன்னரின் தோட்டக்கலை திட்டமிடுபவர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளும் இந்த நினைவுச் சின்னத்திற்குள் அடங்கியுள்ளது” என்று யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது,
கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமைகள் போற்றுதலுக்கு உரியவை. அவர்களின் கைவினைத்திறன் மற்றும் ஆக்கபூர்வ செயல் இந்த அற்புதத்தை நமக்கு அளித்துள்ளது. கருவாக உருவானது முதல் அடித்தளம் மற்றும் மேல் கட்டுமானம் நிறைவு வரை ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் அதனை முகலாய பிரபுக்கள் மேற்பார்வை பார்த்துள்ளனர்
கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பு இந்த நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றின என்றாலும் இந்த அளவிலான ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டடக் கலைஞர்களும் திட்டமிடுபவர்களும் இணைந்துதான் உருவாக்கியுள்ளனர். தனது ஆர்வத்திற்கும் கற்பனைத் திறனுக்கும் பொருத்தமான ஒரு வடிவத்தைக் கொடுத்ததற்காக அவர்களை ஷாஜஹான் பரிசுகள் அளித்துப் பாராட்டியிருக்கிறார். அவர்களது கைகளை அவர் வெட்டியது குறித்த செவிவழிச்செய்தி முற்றிலும் ஆதாரமற்ற ஒரு வதந்தி என்பதை ஆவணங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. ஒரு சில தலைவர்கள் இந்த கட்டுக்கதையை அவ்வப்போது கூறுவது அவர்களது அறியாமையையும் வரலாறு குறித்த புரிதல் இன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
(2022 மார்ச் 9 அன்று ஆங்கில இந்துவில் வந்த கட்டுரை)
தமிழில் : கடலூர் சுகுமாரன் (94437 28774)

Spread the love