January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வேலூர்ப் புரட்சி 1806

ஆசிரியர் : பேரா. கா.அ.மணிக்குமார்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் (9677778863) – விலை: ரூ.325/-
இந்திய வரலாற்று நூல்கள் எல்லாம் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857-ல் கான்பூர், லக்னோ, டில்லி, ஆக்ரா ஆகிய நகரங்களில் நடந்த ‘சிப்பாய்களின் எழுச்சி’ என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் இதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வேலூர் நகரில் 1806-ல் சிப்பாய்களின் எழுச்சி நடைபெற்றுள்ளது. வரலாற்றில் முக்கியத்துவம் பெறாது போன வேலூர்ப் புரட்சி பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டு பல தகவல்களையும் திரட்டி உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் பேராசிரியர் கா.அ.மணிக்குமார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியரான மணிக்குமார் 19,20ஆம் நூற்றாண்டுத் தமிழகச் சமூக,பொருளாதார வரலாற்றில் முக்கிய ஆய்வுகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் குழுவின் தலைவராகவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (ஏயுடி) தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நூலகம், ஸ்காட்லாந்து தேசிய நூலகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், இந்திய தேசிய ஆவணக் காப்பகம் போன்றவற்றிலிருந்து திரட்டிய தரவுகளிலிருந்து ‘வேலூர்ப் புரட்சி 1806’ என்ற அரிய நூலை எழுதியுள்ளார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வேலூர் கோட்டையில் 1806இல் ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணிக்கு வெடித்தது வேலூர்ப் புரட்சி. பல சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியிருந்த ஐநூறுக்கும் மேலான இந்திய வீரர்கள் தளைகளை உடைத்தெறிந்து விடுதலை பெற வேண்டி எழுந்த இந்த எழுச்சி வேலூர்க் கலகம், கிளர்ச்சி. புரட்சி என்று பலவாறு அழைக்கப்படுகிறது. நள்ளிரவில் நடந்த இப் புரட்சியை மறுநாள் காலை பத்து மணிக்கு ஆங்கிலேய ராணுவ அதிகாரி ராபர்ட் கில்லஸ்பி ஆர்காட்டிலிருந்து குதிரைப் படையுடன் வந்து கொடூர மாகப் போரிட்டு அடக்கினான். கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் வசமாகியது. பிடிபட்ட இந்திய வீரர்கள் தூக்கிலிடப் பட்டும், பீரங்கியின் வாயில் கட்டப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப் பட்டனர். வேலூர் கோட்டை குறித்த விளக்கங்கள், கிளர்ச்சிக்கான காரணங் கள், அதன் விளைவுகள் பற்றியெல் லாம் இந்நூல் ஆய்வு செய்கிறது. வேலூர்ப் புரட்சி 1857இன் சிப்பாய்க் கலகத்திற்கு முன்னோட்டமாய் இருந் ததை சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுபோன்று மறந்தும்,மறைந்தும்போன வரலாற்றுச் சுவடுகளை ஆய்ந்தறிந்து பேரா.மணிக் குமார் நல்கிடுவார் என்று நம்புவோம். இன்றைய ஆட்சியாளர்கள் இந்திய வரலாற்றைத் திரித்தும், திருத்தியும் சிதைத்து வரும் இவ்வேளையில் மணிக்குமார் போன்ற வரலாற்றாளர்கள் தங்கள் ஆய்வின் வழி உண்மை வரலாற்றை வழங்கிட வேண்டிய கட்டாயமும் உள்ளது.
-பேரா. பெ.விஜயகுமார்.

Spread the love