June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

” வேறு நிறைவேறு”

டாக்டர் ஜி. ராமானுஜம்
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பார். செந்தில் அங்கு வேலைக்குச் சேர்ந்திருப்பார். சுத்தப்படுத்துவதாக நினைத்து ஸ்வீட்களில் எல்லாம் பூச்சி மருந்தை அடித்து விடுவார் செந்தில். அதை வாங்கிச் சென்று சாப்பிட்ட இருவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுவார்கள். கடையைத் துவம்சம் செய்ய ஒரு பெருங்கூட்டமே திரண்டு வரும்.
அதைப் பார்த்த கவுண்டமணி கடைக்கு ஸ்வீட் வாங்கத்தான் பலரும் வருவதாக நினைத்துக் கொண்டு “ஏகப்பட்ட கூட்டம் வருது.. கடையே காலி ஆகப் போகுது! இன்னிக்குப் பார்த்து நான் ஸ்வீட் கம்மியாப் போட்டிருக்கேனே!” என்று அங்கலாய்த்துக் கொள்வார். கடைசியில் கடையை அடித்துத் துவம்சம் செய்துவிடுவார்கள்.
நிஜவாழ்க்கையிலும் இதுபோல் பலசமயங்களில் நடக்கக்கூடும்
ஒரு பெரிய தொழிலதிபர் வீட்டுக்கு இப்படித்தான் ஒரு பெரிய கும்பல் வந்தது. அவர்கள் வீட்டுப் பெண்ணைப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வருவதாகப் பேச்சு நடந்து கொண்டிருந்த சமயம் அது.
தொழிலதிபர் வீட்டில் இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களிடம் உள்ள அசையும் அசையாச் சொத்துக்களின் பெருமைகளைப் புட்டுப் புட்டு வைப்பார்கள். ரகசிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்குகளை அக்கவுண்ட் நம்பர், ஐ.எஃப்.எஸ்.சி. கோட் முதற்கொண்டு சேர்த்துச் சொல்வார்கள். பிறகுதான் தெரியும் வந்தவர்கள் வருமானவரி அதிகாரிகள் என.
எனக்குத் தெரிந்த ஒரு மருந்துக் கடையில் இப்படித்தான் ஒருவர் வந்து ஒரு வருடத்துக்கான மருந்துகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதுவும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கொடுக்கக் கூடாத மருந்துகள் சில உட்பட.
சந்தோஷமாகக் கொடுத்தார் மருந்துக் கடை ஓனர். அப்படியே “உங்க நண்பர்கள், உறவினர்களிடமும் சொல்லி இந்தக் கடையில் வாங்கச் சொல்லுங்க” என்றார். மருந்துகளை வாங்கியவரும் தன் நண்பர்கள் சிலரிடம் மருந்துக்கடையின் விலாசத்தைப் பின்கோடு முதற்கொண்டு சொல்லி சிபாரிசு செய்துள்ளார்.
அப்படித் தெரிந்து கொண்டு வந்த ஒருவர் பெரிய பிக் ஷாப்பர் பையோடு மருந்துக் கடைக்கு வந்து ‘ஒரு வருடத்துக்கு மருந்துகள் கொடுப்பீர்களா? அதுவும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல்?’ எனக் கேட்க தாராளமாகத் தருவேன். பில் எல்லாம் போடாமல் தருகிறேன். 10 பர்சென்ட் கம்மியான விலையில் என மகிழ்ச்சியாகச் சொன்னார். பிறகுதான் தெரிந்தது வந்தவர் மருந்துக் கட்டுப்பாடு ஆய்வாளர் என. அபராதம் விதித்துக் கடும் எச்சரிக்கையோடு சில நாட்கள் கடைக்கும் சீல் வைத்து விட்டார் அந்த ஆய்வாளர்.
சில நாட்களுக்கு முன் டீக்கடையில் காஃபி குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய பஸ் நிறைய ஆட்கள். ஏதோ கல்யாண வீடு போல. டீக்கடை முன் வந்து நின்றது.
உடனே டீ மாஸ்டர் பரபரப்பானார். பாத்திரங்களைக் கழுவும் ஆளிடம் ‘சீக்கிரம் ஒரு பதினைஞ்சு இருவது டம்ளரைக் கழுவு!’என உத்தரவுகளைப் பிறப்பித்தபடியே நாலைந்து பால் பாக்கெட்களை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். கல்லாவில் இருப்பவரும் நோட்டுக்களை எல்லாம் எண்ணி ரெடி ஆனார். பஸ்சில் இருந்து டிரைவர் மட்டுமே இறங்கி வந்து மாஸ்டரிடம் அருகில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தின் பெயரைச் சொல்லி அதற்கு வழியை விசாரித்துவிட்டு பஸ்சைக் கிளப்பிச் சென்றுவிட்டார்.
ஒரு முறை நான் க்ளினிக் வாசலில் நுழையும்போது அதிசயமாகப் பயங்கரக் கூட்டம். பதினைந்து இருபது பேர்களாவது அமர்ந்திருப்பார்கள். உள்ளே நுழைந்த என்னை வந்திருந்தவர்களில் ஒருவர் முறைத்துப் பார்த்து “என்ன அவசரம்? நாங்கெல்லாம் உங்களுக்கு முன்னாலேயே வந்து வெயிட் பண்றோம்ல.?” என்றார். அவரிடம் நான்தான் டாக்டர் என்பதை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். ‘திடீரென நாம் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனோம், இனிமேல் தினமும் இப்படி இருந்தால் சமாளிக்க புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டுமே’ என்றெல்லாம் நினைத்து சிஸ்டரை அழைத்து,
“சிஸ்டர் ! என்ன ரொம்ப கூட்டமா இருக்கு?. டோக்கன்படி ஒவ்வொரு பேஷண்டா உள்ள அனுப்புங்க. நான் முந்தி நீ முந்தின்னு யாரும் சண்டை போடக் கூடாது. வெளியே போகும்போது ஒருத்தரையும் மிஸ் பண்ணாம ஃபீஸை வாங்கிடுங்க.!” என்றேன். அதற்கு என் க்ளினிக்கில் பணியாற்றும் பெண் அமைதியாகப் பதிலளித்தார்..”வந்திருக்கிறது ஒரே ஒரு பேஷண்ட்தான் டாக்டர். மீதி இருபது பேரும் கூட வந்திருக்கறவங்க!!” என்றார்.
சிலசமயம் கட்டப்பஞ்சாயத்து கேஸ்களில் இதுபோல் பஸ் பிடித்தெல்லாம் வருவார்கள். அதிலும் புதிதாகத் திருமணம் ஆன தம்பதியரிடையே பிரச்சனை என்றால் கல்யாணப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றவர்கள், பெறாதவர்கள் என அனைவரும் வந்து விடுவார்கள். அது போல் வந்த கோஷ்டி அது. ஃபீஸ் கேட்கும்போது சரியாக அனைவருமே டீ குடிக்கச் சென்றுவிட்டார்கள். என்னைவிட அருகில் இருந்த டீக்கடைக்காரர் அன்று அதிகம் சம்பாதித்துவிட்டார்.
புதிய ஆசிரியன் ஆசிரியர் ராஜு சாரும் ஒருமுறை பத்திரிகையின் சந்தா விபரங்களை தொலைபேசி எண்ணோடு ஒரு வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து கொண்டார். அடுத்த நிமிடத்திலிருந்து அவருக்கு வரிசையாகச் சில ஃபோன் கால்கள் வந்தன. அவரும் ஆர்வமாக அழைத்தவர்களிடம் ” ஆண்டுச் சந்தாவா? ஆயுள் சந்தாவா?” எனக் கேட்க அழைத்தவர்கள் “சார் நாங்க ஏபிசிசிஐ வங்கிலேர்ந்து பேசறோம். பெர்சனல் லோன் வேண்டுமா?” எனக் கேட்டனர்.
இப்படித்தான் நாம் நினைத்தது ஒன்றாக இருக்கும் ஆனால் நிறைவேறுவது வேறாக இருக்கும். அதனால்தான் வேறு நிறைவேறு எனப் பெயரிட்டனரோ? ( தலைப்பு வைத்த நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா?)

(9443321004 – [email protected] )

Spread the love