August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வீதியை நோக்கி…

சக.முத்துக்கண்ணன்


பள்ளிக்கு வெளியே செய்து பார்த்த கற்பித்தல் அனுபவங்கள் மறக்க முடியாதவை. கொரோனா காலத்தில் குழந்தைகளைச் சந்திக்க வீதிக்குப் போயிருந்தேன். எங்கள் பள்ளியிலிருந்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் சரவணனும் உடன் வந்திருந்தார்.
தெருவுக்கு ஒரு மாணவரை தொடர்பில் வைத்திருந்தோம். அம்மாணவர் எங்கள் வருகையை அப்பகுதி மாணவர்களுக்குத் தகவல் தந்து, வர வைத்திருப்பார். மரத்தடி, கோயில் வாசல், மொட்டை மாடி, வீட்டின் முன் முற்றம் என ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களில் நடந்தது அந்த மாலை நேரக் கூடுகை.
கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ச்சியின்றி இடைவெளி விட்டு விட்டு குறைவான நாட்களே நடந்த அச்சந்திப்புகள் புதிய பாடத்தை எனக்குச் சொல்லித் தந்திருந்தன. முக்கியமாக பெண் குழந்தைகளின் பாடு பெரும்பாடாக இருந்தது. வீட்டை விட்டு மரத்தடிக்கு பறந்து வந்தார்கள். முதல் குரலே “வேகமா பள்ளிக்கூடத்த திறங்க சார்.. வீட்டுல வேல சொல்லியே கொல்றாங்க” என்றார்கள்.


பசங்களுக்கு அந்த தொல்லை இல்லை. ‘கொரோனா வந்தாலும் எது வந்தாலும் வீதி சும்மா கிடக்கு!’ என வீட்டை விட்டு விளையாட ஓடிவிடுகிறார்கள். அண்ணனும் ஓடிவிட, தம்பியும் ஓடிவிட அவள் மட்டும் வீட்டில் ‘பொறுப்பாக’ ஏனம் விளக்கி வைக்க வேண்டும். இச்சமூகம் பெண் குழந்தைகளுக்குத்தான் கால் கொலுசு போல மறைசங்கிலியை மாட்டி, வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறது. பாதுகாப்பு என்கிற பெயரில் விளையாடக்கூட வெளியில் விடாமல் வீட்டு வேலைகளுக்கு பணிக்கப்பட்டிருந்தார்கள்.
ஒரு நாள் கதை பேச அர்ச்சனாவின் வீட்டு மொட்டைமாடியைத் தேர்ந்தெடுத்திருந்தோம்.


அந்த வாரத்தையே கதை வாரமாக ஆக்கிக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் ஒருவர் கதை சொல்ல வேண்டும். அதில் எட்டாம் வகுப்பு ஜனனி சொன்ன கதை மறக்க முடியாதது. அவள் அக்கதைக்கு ‘கையின் அழுகை’ என பெயர் வைத்திருந்தாள். அதென்ன கையின் அழுகை? அந்த கதையில் கை பேசியது. முதல் பகுதியில் எல்லாரையும் கலகலப்பாக்கிய அந்தக் கை இரண்டாம் பகுதியில் விசயத்துக்கு வந்தது. அவள் வீட்டில் 6 பேராம். சமச்சு சாப்பிட்டு முடிச்சதும் அத்தனை ஏனம் குவியுமாம். கரிச்சட்டியை தேங்கா நார் போட்டு தேச்சுத் தேச்சுக் கையெல்லாம் நோகுமாம். துணி துவைக்க, வீடுகூட்ட, அது கல்ல சீசன் என்பதால் கல்ல ஆயப் போக.. என தினமும் வேல விடுவாங்களாம்.

கையெல்லாம் வலிக்குதாம். ரெண்டு உள்ளங்கையையும் ஒண்ணு சேத்து ராத்திரி பார்த்தாளாம். அந்தக் கைகள் அவளிடம் சொல்லிச் சொல்லி அழுததாம். “என்ன வேல விடாத! என்ன வேல விடாத!” அதுதான் ‘கையின் அழுகை’. இது அவள் அழாமல் சொல்லி முடித்த கதை.


“எப்ப சார் பள்ளிக்கூடந் தொறப்பீங்க?” என்கிற குரலின் வலி, நச்சரிக்கும் வீட்டுவேலைகளில் இருந்து தப்பிக்கத் துடிக்கும் கேவல்.
பள்ளிக்கூடம் என்பது படிக்க மட்டுமா?.. இப்படியான குழந்தைகள் வீட்டிலிருந்து விடுபடவும்தான்.


சில பகுதிகளில் மட்டும் பசங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. வராத மாணவர்களின் பக்கம் இருந்த ஒரே காரணம். “அப்பாவோட வேலைக்கு போயிருந்தேன் சார்”.


மேற்குறிப்பிட்ட பாலின விசயத்தில் பெண்குழந்தைகளின் வலி என்பது மொத்த பிரச்சனைகளின் ஒரு பகுதிதான். வர்க்க அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகள்தான் பால் வேறுபாடின்றி பாதிக்கப்பட்டிருந்தார்கள்.


‘ஆட்டாங்குப்பை’ எனும் சொல்லை முதன் முதலில் வீதி வகுப்பறையில்தான் கேள்விப்பட்டேன். விக்கிரமங்கலம், அம்பாபூர், கீழநத்தம் கிராமங்களில் பல வீடுகளில் வெள்ளாடும், கோழிகளும் வளர்ப்பார்கள். இதை முதன்மைத் தொழிலாக சிலரும், இணை வருமானத்திற்காக பலரும் மேற்கொள்கிறார்கள். அவற்றைப் பராமரிக்க, கழிவுகளைச் சேகரித்துக் குவிக்க என வீட்டில் வேலை சொல்வதாக குழந்தைகளின் குற்றச்சாட்டு இருந்தது. இது அக்குழந்தைகளுக்கு புதுசு இல்லை. வழக்கமானதுதான். இருப்பினும் அன்றைய நாள் வேலை அலுப்பை மரத்தடியில் வந்து உக்கார்ந்ததும் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் இடத்திற்கே போயிருந்ததால் அவர்கள் என்னவாக இருந்தார்களோ அந்நிலையிலிருந்து தன்னை வகுப்புக்காக தயார்படுத்திக் கொள்ளும் அவகாசத்தைக் கொடுக்க முடிந்தது.


ஒரு மாணவன் எழுந்து நின்று ஆட்டாங்குப்பையைக் கூட்டிக் குவித்த கதையைச் சொன்னான். அவன் அள்ளிச் சேர்த்ததை “இம்மாங் குப்ப சார்” என்று சொன்னதும், சொல்லும்போது அவனது சின்னக் கைகளை அகல விரித்துக் காட்டியதும் காட்சியாக அப்படியே மனதில் நிற்கிறது.


எந்த இடத்திலும் பாடப் புத்தகத்தை நாங்கள் எடுக்கவே இல்லை. எதைப் பேச வேண்டும் என்பதை நாங்கள் அவ்வப்போது முடிவு செய்து கொண்டோம். அதிகபட்சம் ஒரு நோட்டும் பேனாவும் போதுமானதாக இருந்தது. அவர்களின் சூழலுக்குத் தக்கன ஒரு பேசுபொருள் அந்த இடத்தில் தானாய் மலர்ந்தது. எந்தச் சுவரும் கட்டுப்பாடும் அற்ற அந்த வெளி புதிய புரிதல்களை உண்டாக்கியிருந்தது.

நடந்து வரும்போது கூடவே ரெண்டு பசங்க வருவார்கள். இங்கிருந்து போகும்போதும் சிலர் வருவார்கள். அந்த நடையில் நான் பேசிக் கொண்டதும் கற்றதும் ஏராளம். அந்த பசங்கதான் அந்த வீதியின் அந்நாள் நிலவரத்தை நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவார்கள்.


ஒருமுறை காலனித் தெருவில் திட்டமிட்ட சந்திப்புக்கு லிஸ்டில் இருந்த சில பிள்ளைகளின் பேர்களைச் சொல்லி “இவங்கல்லாம் வரமாட்டாங்க சார்” என்றான் ஒரு பையன்.


அது அப்படியே நடந்தது. பள்ளியில் சமமாக உக்கார்ந்திருந்தாலும் வீதியின் சமமற்ற தன்மையை ஒரு சின்னப் பையனுக்கும் புரியும்படி இச்சமூகம் போதித்திருக்கிறது. இதைப் பேச, சரி செய்ய, சமமாக உக்கார வைக்கப்பட்டிருக்கும் வகுப்பறையில் இடமிருக்குமா?


இவ்வீதிச் சந்திப்புகள்தான் பள்ளி திறந்த பிறகான வகுப்பறையை சரியான கோணத்திற்கு நகர்த்தியது. அதுதான் ஒரு ஆசிரியன் வீதிக்குச் சென்றதன் பலன்.
கொரோனா போய்விட்டிருக்கலாம். நாம் வீதியை நோக்கி இன்னும் போக வேண்டியிருக்கிறது.


(9944094428-அரசுப்பள்ளி ஆசிரியர்)

Spread the love