May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

(வி)வேகம்

செல்வகதிரவன்
“டூவீலர்ல போறவன்க படு வேகத்தில போறான்க..”
“பயம்ங்கிறது கொஞ்சம் கூட இந்தப் பயல்களுக்கு கெடையாது..”
“எல்லாம் இந்த டீன் ஏஜ் பசங்கதான்.. மூணு பேரு நாலு பேர்னு ஏறிக்கிட்டுப் பறக்கிறான்க..”
“அவுன்க போறதப் பாத்து நாமதான் பதற வேண்டி இருக்கு..”
தமது வீட்டு வழியாக டூவீலர்களில் அதிவேகமாக போவோர் பற்றி இப்படி அண்டை வீட்டாரிடம் தினந்தோறும் புலம்பினார் பலராமன்.
அது நந்தவனம் தெரு. நாற்பத்தி ஏழு வீடுகளை உள்ளடக்கிய தெரு. நடுத்தர குடும்பத்தினரே பெரும்பாலும் இங்கு வசிக்கிறார்கள். பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பு நான்கு நபர்களிடம் மட்டுமே இரு சக்கர வாகனங்கள் இருந்தன. இன்றோ, இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகள் தெருவில் இல்லை என்று மாறிப் போயிற்று.
நந்தவனம் தெருவின் தொடக்கம் குறுகலான பகுதி. தெருவின் மையத்தில் பிள்ளையார் கோயில் இருப்பதால் இந்த ஏரியா மட்டும் குறுகலாய் இருந்தது. இரண்டு மூன்று வீடுகள் கடந்ததும் வீதி விசாலமாகக் காட்சி தரும். அந்தப்பக்கம் வேகமாக டூவீலர்களை ஓட்டலாம். ஆனால் அதே வேகத்தில் தெருவின் ஆரம்பத்திற்கு வரும்போது இரண்டு மூன்று வாகனங்கள் எதிர்பாராதவிதமாக எதிரே வந்து விட்டால் வாகன ஓட்டிகள் திணறித்தான் போவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே வேகத்தில் வாகனத்தை ஓட்டும் தருணங்களில் வீடுகளின் வாசற்புறம் அதிரும். வாகனத்தில் அவர்கள் ஒலி எழுப்பும்போது நம் காதுகள் கனக்கும்.
“ஏய்.. வண்டிய நிப்பாட்டு”
இரண்டு வாலிபர்களுடன் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் பலராமன்.
“என்ன? எதுக்காக வண்டிய நிறுத்தச் சொன்னீங்க?”
“ஏம்ப்பா.. வண்டிய எதுக்கு இவ்வளவு வேகமாக ஓட்டுற? அதுவும் பின்னாடி ரெண்டு பேர ஒக்கார வச்சுக்கிட்டு..? சின்னப் பிள்ளைங்க வயசானவுங்க நடமாடுற எடத்தில கொஞ்சம் மெதுவாத்தான் போனா என்னப்பா..?”
“மெதுவாக போறதுக்கு எதுக்கு டூவீலர்ல போகணும்.. சைக்கிள்லயே போலாமே..?”
வண்டியை ஓட்டி வந்தவன் சொன்னதைக் கேட்டு பின்னால் இருந்தவர்கள் சத்தமாய்ச் சிரித்தார்கள்
“என்ன நீ.. யாரும் அடிபட்டிருவாங்க, மெதுவாப் போன்னு சீரியசாச் சொல்லிக்கிட்டு இருக்கேன். அது புரியாம கிண்டலடிக்கிற..? பின்னாடி ஒக்காந்திருக்கிறவங்க நக்கலா சிரிக்கிறாங்க..?
“பத்து வருஷமா டூவீலர்.. அதுவும் கியர் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் சின்ன ஆக்ஸிடெண்ட் கூட ஆனதில்ல. யார் மேலயும் இடிச்சதும் இல்ல.. ஒருத்தர ஒரசினதில்ல தெரியுமா..?”
“இதுவரைக்கும் மோதல சரி.. இனிமேயும் மோத மாட்டேன்னு சொல்ல முடியுமா..? யார் மேலயாவது மோதித் தள்ளிட்டு பத்து வருஷமா வண்டி ஓட்டுறேன்.. இப்பத்தான் மோதினேன்னு சொல்ல முடியுமா?”
“யார் மேலயாவது மோதின பெறகு பேசுங்க.. இப்ப ஆளவிடுங்க.. ரிடையர்டு ஆகிட்டாலே நம்ம பெருசுங்க பேசாம இருக்காதுங்க.. என்னத்தையாவது வெவகாரத்த வெலைக்கி வாங்கிட்டு இருக்கிறதே இதுகளோட வேல”
பலராமனின் பதிலுக்குக் காத்திராமல் அவர்கள் சிட்டாய்ப் பறந்தார்கள்.
இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட பலராமனின் மனம் இடந்தரவில்லை. இதற்கு முடிவு கட்ட, அண்டை வீட்டாருடன் ஆலோசனையில் இறங்கினார்.
“பசங்க யாருன்னு வெசாரிச்சு.. அவன்க பேரண்ட்ஸ்கிட்ட பேசுவோம். இந்த எடத்தில ஸ்லோவாப் போகச் சொல்வோம். இல்ல போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவோம்..”
“ஒவ்வொரு வீட்டுலயும் போயி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா..? போலீஸ் புகார் தேவையான்னு பாத்துக்குங்க..”
“அப்பறம் என்ன செய்யலாம்..?”
“இதுக்கு நெரந்தரத் தீர்வு.. பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போயி.. விபரமா எடுத்துச் சொல்லி.. பிள்ளையார் கோயில் முகப்பு ஓரத்தில ஒண்ணு.. பின்பக்கத்தில ஓரமா ஒண்ணு ரெண்டு ஸ்பீட்பிரேக்கர் போட்டாச்சுன்னா வேகமாக ஓட்டிட்டு வர்றவன்க தானா வேகத்தக் கொறச்சிடுவாங்கல்ல..?”
“சூப்பர் ஐடியா! இன்னைக்கே பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போயி பெட்டிஷன் கொடுத்து விஷயத்த வெளக்குவோம்..”
பணி ஓய்வு பெற்ற நான்கைந்து முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு பேரூராட்சி அலுவலகம் போனார் பலராமன். நிர்வாக அலுவலரைப் பார்த்து மனுவைக் கொடுத்தார்கள். வேகத்தடை போட வேண்டிய அவசியத்தை விளக்கினார்கள். சீக்கிரம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் நிர்வாக அலுவலர். நம்பிக்கையோடு திரும்பினர் பலராமன் குழுவினர். நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கே நாட்களில் இரண்டு வேகத்தடைகள் சுமாரான உயரத்தில் அமைக்கப்பட்டன.
அன்று வழக்கம்போல் அந்த மூன்று இளைஞர்களும் பைக்கில் வேகமாக வந்தார்கள். வேகத்தடையைக் கவனிக்கவில்லை. அதில் வேகமாக ஏற.. பேலன்ஸ் தவறி வண்டி சாய.. மூவரும் தரையில் விழுந்தனர். விழுந்ததால் ஏற்பட்ட அடியில் எவராலும் எழுந்திருக்க முடியவில்லை.
சத்தம் கேட்டு வீட்டுக்குள் வேலையில் இருந்த பலராமன் வெளியில் வந்தார். நிலைமையை உணர்ந்ததும் ஆட்டோ வரவழைத்து அடுத்த வீட்டுக்காரர் உதவியுடன் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அவர்களிடம் அலைபேசி நம்பர் வாங்கி வீடுகளுக்கு ஃபோன் பண்ணினார். அவரவர்களின் பெற்றோர்கள் வந்தனர். பலராமனுக்கு நன்றி தெரிவித்தனர். பிறகு நண்பருடன் வீடு திரும்பினார் பலராமன்.
“ஒங்ககிட்ட அன்னக்கி அவ்வளவு திமிராப் பேசினாங்க. இவன்களுக்கு இந்தளவுக்கு நாம உதவி பண்ணி இருக்கணுமா? விழுந்த எடத்தில இருந்தே அவனவன் வீட்டுக்குப் ஃபோன் பண்ணிட்டுப் பேசாம இருந்திருக்கணும்..” என்றார் உடன் வந்த நண்பர்.
“அப்பிடிச் செய்றது சரி இல்ல சார்.. அவன்க எளமை வேகத்தில வார்த்தய வாரி வீசிட்டான்க. நாமளும் அதே மாதிரி வேகமா நடக்காம விவேகமா நடக்கிறதுதான் நம்ம வயசுக்குண்டான பக்குவம், கௌரவம், பெருந்தன்மை எல்லாம்” என்றார் பலராமன்.
பலராமனின் பதில் அடுத்த வீட்டுக்காரரின் மனதைத் தொட்டது. அவர் மறுப்பேதும் சொல்லவில்லை.
(99445 09530 – [email protected])

Spread the love