September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

விடுபட்டு விலகிடும் கால்கள்

ம. மணிமாறன்


பெரும் பாறைகள் தடைக்கற்களாகி வழிமறித்து நிற்கின்றன. கரும் பாறையை அகற்றிட வலுமிக்க மனம் தேவைப்படுகிறது. எல்லாம் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும்போது ஒரு துளிர்ச்செடி மேலேறிடாதா எனும் ஏக்கம் தவியாய் தவித்தலைகிறது. ஏதாவது செய்து யாவற்றையும் சரி செய்து விட வேண்டும் எனும் துடிப்பு மனதில் நிறைந்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு கருப்பு இருட்டை வெறித்துக் கிடப்பது?
இதோ மாணவர்கள் வரிசை அலையென வந்து சேரத் துவங்கிவிட்டது. ஏதாவது ஒன்றின் மீதான காத்திருப்பின் வாசல் திறக்கிறபோது மனம் அடையும் கொண்டாட்டமும் களிப்பும் வார்த்தைகளுக்குள் அடங்காதவை. வறண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளிகளாகவே மாணவ மாணவியரின் வருகை பெரும் உற்சாகத்தை தந்தது. பேசிக் கொண்டனர், சிரித்துக் கிடந்தனர். இதில் ஆசிரியர்களும் விலக்கில்லை.


உற்சாகம் ததும்பிக்கிடந்தது முதல்நாள் வகுப்பறை. ஒருவிதத்தில் பார்த்தால் முதன்முதலாக ஆசிரியராக பணியில் சேர்ந்த முதல் நாளைப் போலான பரவசம் மனதெங்கும் நிறைந்திருந்தது. எல்லாமும் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் துவங்கும்வரை மட்டுமே. வகுப்புகள் துவங்கிய நொடியிலேயே வெளிப்படையாக தெரியத் துவங்கியது. மிக எளிதான பத்து வருடக் கல்வியின் வழியாக பெற்ற அடிப்படைத் திறன்கள் கூட கைவசமாகவில்லை மாணவர்களுக்கு. வெறும் ஐநூறு நாட்களுக்குள் இத்தனை பெரிய அழிமானம் நிகழ்த்திடும் தந்திரம் நிறைந்திருக்கும் என்பதை நம்பிட கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் இதுதான் நிஜம். நெஞ்சை வதைக்கும் நிஜத்தை எதிர்கொள்ள முடியாது தடுமாறுகிறது இருவரின் உளமும். இவ்வளவு பின்தங்கியிருப்போம் என எவரும் நினைத்திருக்கவில்லை. மகிழ்ச்சி பரவிய நொடியிலேயே குமிழ்நுரையென உடைந்து விட்டால்?.. எல்லாம் நிலைகுலைந்து போகத்தானே செய்யும்?
காணொளியில் பேசினோம். ஆன்லைனில் கற்றுக் கொடுத்தோம். நமக்கே கைவர காலம் பிடித்த எல்லா தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி கற்பித்தோம். இனி எல்லாம் எளிதுதான் என்று நம்பியவர்களை ஏமாற்றியது காலம். சட்டென ஒரு புள்ளியில் எல்லாம் உடைந்து நொறுங்கத் துவங்கியது.


நாம் விட்டதில் இருந்து துவங்கி விடலாம் என்று நினைத்திருந்த எல்லோருக்கும் காலம் வேறு ஒரு பதிலை தனக்குள் பொத்தி வைத்திருந்தது. சலனமற்ற பேரமைதியில் உறைந்து கிடந்தன வகுப்பறைகள். உரையாடல் அற்றுப் போய் வெற்றுப் பொம்மைகளாக மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருந்தனர். மனதை அறுக்கும் அந்த மௌனம் சகிக்க முடியாததாக இருந்தது. எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. வகுப்பறைகளை நிறைத்திருக்கும் பேரமைதியை உடைத்து நொறுக்கும் வழிவகை தெரியாது தடுமாறத் துவங்கியிருக்கின்றனர் ஆசிரியர்கள்.
ஒரு அக்கறை மிகு சமூகத்தின் மனசாட்சியாக கல்விக்கூடங்களை வளர்த்தெடுப்பதில் நிகழ்ந்திருக்கும் துயரத்தை அகற்றிட வழிதான் என்ன?..தூசிபடிந்து கிடந்த இருக்கைகளும், ஒட்டடைகள் படிந்திருக்கும் சுவர்களும் நம்மை வெறித்து நின்றன. அவற்றை அகற்றி சிறிது வெளிச்சம் படிந்திட்டால் போதுமானது என்றே யாவரும் நம்பினோம். குருவி கட்டியிருந்த கூடுகளை மெதுவாக அகற்றியபோது வகுப்பறைகள் அழகாகின. மாணவ மாணவியர் வந்து விட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என உறுதிபட நம்பினோம். ஆனால் வெறும் இருப்பு மட்டுமே போதுமானதில்லையே? இயக்கமற்ற இருப்பினால் எந்த விளைவுகளையும் நிகழ்த்திட முடியாதே? புதிய திட்டமிடல் தேவைப்படுகிறது என்பது உண்மை.


மொழியிலும் கணிதத்திலும் அடிப்படைத்திறன்களை மேம்படுத்திட பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அதற்கென புதிய புத்தகங்கள் உருவாக்கிடும் முயற்சி கூட தேவைப்படலாம். மாணவர்களால் தங்களுடைய பதினொன்றாம் வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இரண்டே இரண்டு எழுத்துக்களின் சேர்ப்பில் உருவான ஊர் எனும் சொல்லைக்கூட அவர்களால் வாசிக்க முடியவில்லை. கணக்கினை கசப்பு மாத்திரைக்கு உவமை சொல்லிச் சொல்லி அச்சத்தை ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். திசைதப்பிய ஆடுகளைப் போல மாணவர்கள் திருகி முறுகுகின்றனர். மாணவர்களின் உற்சாகமான வருகை அப்படியே நீடிக்கவில்லை. பலரும் விலகி வேறுதிசை நோக்கி போகின்றனர்.


நொய்மையில் கிடக்கும் குடும்பங்கள் தங்களுக்கிட்ட கடமையை நிறைவேற்றிட குழந்தைத் தொழிலாளிகளாக, சிறு குறு தொழிற்சாலை ஊழியர்களாக உருமாறியிருந்தனர். முதலில் எவருக்கும் அதில் பெரும் விருப்பம் இல்லை. ஆனால் அங்கு போனபிறகு அவர்களின் கைகளுக்குள் பணம் சுழலத் துவங்கியது. பணத்தின் மீதான ஈர்ப்பும்,கல்விக் கூடங்களின் வறண்ட சூழலும் மாணவ மாணவியரை ஒரு இரட்டைப் பாதை கொண்ட தெருவில் நிறுத்தியிருக்கிறது. அவர்கள் எந்தப்பாதையில் நகரப்போகிறார்கள்.. அல்லது எந்தப் பாதையில் அவர்களை நகர்த்திட வேண்டும் என்பதே எல்லோர் முன்பும் உள்ள மிக முக்கியமான கேள்வி.


‘அதெல்லாம் எம் பையன் ஆன்லைனிலேயே சூப்பரா படிச்சிட்டான். அடுத்து டெஸ்ட்டுக்கு தயார் செய்யணும், பிறகு நீட், ஜெ.ஈ.ஈ.க்கு படிக்கணும்’ எனத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் எலைட் பெற்றோர்களால் இந்த எளிய கள யதார்த்தத்தை ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது. கல்வியில் மிகப் பெரிய பேதத்தை உருவாக்கி நிலைப்படுத்திட துடித்தலையும் கல்வி வியாபாரிகள் இந்த சூழலை மிக மோசமாகக் கையாளத் துவங்கினர். பலரையும் எந்தக் கேள்வியும் இன்றி பணியில் இருந்து விடுவித்தனர். ஊதிய வெட்டு, ஊதிய நிறுத்தம் ஆகியவற்றை எந்த முறைமைகளுக்குள்ளும் அடங்காமல் அமுல்படுத்தினர். கேள்வி கேட்டவர்களிடம் ‘நீங்கள் தேவையில்லை எங்களுக்கு, ஒரு லேப்டாப் போதும்.

மெட்டீரியல்கள் குவிந்து கிடக்கிறது. வேறு வேலை இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்’ என சட்டென ஒருபுள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்களை நிறுத்திட அவர்கள் தயங்கவேயில்லை. அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தெறித்து ஓடுகிறார்கள். சுயநிதிப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் துரத்தியடிக்கப்படுகின்றனர். அடுத்த நாளின் குடும்பச் செலவிற்காக காய்கறி வண்டி தள்ளிச் செல்லும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களும், என்னதான் செய்ய என்று தெரியாமல் ஓட்டல்களில் சர்வராகிப் போன மாணவர்களுமே நம் காலத்தின் துரதிஷ்டமான அடையாளங்கள் ஆகியிருக்கின்றனர். இப்படியே கடந்து போய்விட முடியாதுதானே..?. ஏதாவது செய்ய வேண்டுமே..ஆம், செய்துதான் ஆகவேண்டும்.


(9443620183 – [email protected])

Spread the love