September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வாயைக் கட்டி மூக்கைக் கட்டி..

டாக்டர் ஜி. ராமானுஜம்
நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்வதுபோல் நானும் கொரோனா பாசிட்டிவ் ஆன கதை இது.
பரீட்சித் என்ற மன்னன் கதை எல்லோருக்கும் தெரியும். பாம்பால்தான் அவனுக்கு மரணம் என்று முனிவர் சபித்ததால் ஏழுகடல், ஏழுமலை தாண்டி உயரமான ஒரு மாளிகையில் அமர்ந்திருந்தான். அப்படியும் ஒரு குட்டிப் பூநாகம் தீண்டி அவன் உயிரை விட்டுவிட்டதாக புராணம் கூறுகிறது. அது போல் எட்டடுக்கு மாளிகையில் ஏறி இருந்தாலும், எலிவேட்டர் வழியாகவோ லிஃப்ட் வழியாகவோ கொரோனா நம்மை வந்து தாக்கி விடுகிறது. அப்படி இருப்பவர்களுக்கே இதுதான் கதி என்றால் என்னைப்போல் அன்றாடம் நோயர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு..??
மருத்துவமனைகளில் கொரோனா நோயர்களுக்கும் கொரோனா அல்லாத நோயர்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன. ஆனாலும் `அது மீசை வச்சா சந்திரன் மீசை இல்லை என்றால் இந்திரன்’ என்பது போல்தான் கோவிட்டுக்கும் கோவிட் அல்லாத நோயர்களுக்கும் உள்ள வித்தியாசம். அதுபோல் சில நோயர்களிடம் கால் மணி நேரம் பேசி முடித்தபின் வேற ஏதாவது பிரச்சனை இருக்கா என்று கேட்டபின்பு, மெதுவாக `ரெண்டு நாளாக் காய்ச்சல் டாக்டர், இப்பதான் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என வந்துது டாக்டர்..’ என்பார்கள். ஆகவே கொரோனா தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் டெமாக்கிளஸின் கத்தி போலத்தான்.
ஆகவே ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கோ சீனாவில் தும்ம ஆரம்பித்த ஒருவரிடமிருந்து தொடங்கிய ஒரு துளி பெருவெள்ளமாய்ப் பரவியதன் மூலம் அடியேனுக்கும் கொரோனா கிருமி வந்து குடியேறியது. மாஸ்க்கால் வாயைக்கட்டி மூக்கைக்கட்டி இருந்தாலும் வந்துவிடுகிறது. கொரோனா வந்தால் அதுவே நமது வாயையும் மூக்கையும் கட்டி விடும். அதாவது ருசியும் மணமும் தெரியவே தெரியாது. நாவே அடக்கம் ஆனது போல் ஆனாலும் சிலசமயம் நாவடக்கம் இல்லாமல் போய்விடும். என் மனைவி என்னிடம் `ஒரு வாரமா சாப்பாடு ருசி மணமே தெரியலை’ என்றதற்கு `எனக்குப் பதினைஞ்சு வருஷமா அப்படித்தான் இருக்கு’ எனச் சொல்லி சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டேன்.
எனக்கு ஒரே ஒரு பயம்தான். வீட்டு வாசலில் கொஞ்சம் பெரிதாகக் கோலம் போட்டாலே வீட்டில் விசேஷமா .. செலவுக்கு நாங்க பெர்சனல் லோன் தருகிறோம் என வந்துவிடுவார்கள். கொரோனா பாசிட்டிவ் சர்டிஃபிகேட்டை மட்டும் காட்டுங்கள். லோன் தருகிறோம் என வந்து விடுவார்களோ என. நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
தில்லு முல்லு திரைப்படத்தில் வரும் வசனம்..
“அவருக்கு சிபாரிசு என்றாலே பிடிக்காது. கெட் அவுட்னு அனுப்பிடுவான்.”
“நீங்க சிபாரிசு செஞ்சாக் கூடவா?”
“ப்ளீஸ் கெட் அவுட்!’ என்பான்.. எனக்காக!”
கொரோனாவும் அப்படித்தான். தடுப்பூசி போடவில்லை என்றால் புரட்டி எடுத்துவிடும். தடுப்பூசி போட்டால் கொஞ்சம் மரியாதையாகப் புரட்டிப் போடும். ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்ததால் `பிழைச்சுப் போ!’ என ரெண்டு தட்டு தட்டிவிட்டுச் சென்றது. கொரோனா பாசிட்டிவ் ஆன காலத்தில் கிடைத்த பதினான்கு நாள் தனிமையில் செய்ய வேண்டிய சில லட்சியங்கள் வைத்திருந்தேன்.
1. நன்கு சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.
2. போரும் அமைதியும் நாவலைப் படிக்க வேண்டும்.
3. சிக்மண்ட் ஃப்ராய்டைப் பற்றித் தமிழில் எழுத வேண்டும்.
4. கம்ப ராமாயணத்தில் பாதியைப் படிக்க வேண்டும்.
5. ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அனைத்தையும் படிக்க வேண்டும்.
6. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிசஸைப் படிக்க வேண்டும்.
இந்த லிஸ்டில் உள்ள கடைசி ஐந்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்பது மன நிறைவைத் தருகிறது. ஒரு விஷயம் நடந்து விடுமோ நடந்துவிடுமோ என ரொம்பவே கற்பனை செய்து கொண்டிருப்போம். ஆனால் அது நிஜமாகவே நடக்கும்போது நாம் வேறு ஒரு மாதிரி உணர்வுகளுக்கு ஆளாவோம். நிஜம் மனிதனைக் கொல்வதைவிடக் கற்பனை அதிகம் கொல்லும். கொரோனாவும் அப்படித்தான். நம்பிக்கையோடு இருப்போம். இதைவிடக் கொடிய தொற்று வந்தாலும் வாழ்க்கை போய்க் கொண்டேதான் இருக்கும். மனிதர்கள் வலிமையானவர்கள்.
உதாரணத்துக்கு..
வான்பொய்ப்பினும் தான்பொய்க்கா மலைத்தலை காவிரிபோல் கொரோனா சுனாமி என என்ன வந்தாலும் நமது புதிய ஆசிரியன் ஆசிரியர் ராஜு சார் கடமை ஆற்றுவார். இந்த மாதம் என்னிடம் கட்டுரை கேட்டு போன் செய்தார்.
சார்! எனக்கு மற்றும் எங்க வீட்டில் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்றேன்.
அடடே! சரி.. அது போகட்டும்.. இந்த மாதம் கட்டுரை வந்துவிடும் இல்லையா.. என்றார்.
வந்துவிட்டது!
(9443321004 [email protected])

Spread the love