June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வாசிப்பு

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்
அந்த அந்தாண்டு வெளியிடப்படும் நூல்களையே வாங்குவது எனது நடைமுறை. சென்ற ஆண்டு வெளியான நூல் பழையது என்பது என் கருத்து. அவ்வாறிருக்க 2003-ல் வெளியிடப்பட்ட ஒரு நூலைப்பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். அதனைப் படிக்க ஆவலைத் தூண்டும் விதமாக விமர்சனம் அமைந்திருந்தது. வாங்கிப் படித்தேன். அந்நூலின் பெயர் கூhநசந யசந nடி ளாடிசவஉரவள (குறுக்கு வழிகள் ஏதுமில்லை). நூலாசிரியர் ரஃபே எஸ்க்யுத் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். அமெரிக்க ஆசிரியர் விருது பெற்றவர். தனது பணி அனுபவங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். தனது குறைகளை அவர் மறைக்கவில்லை. மாணவர் நலன் என்று கருதி, தான் செயல்படுத்திய திட்டங்களின் மடத்தனத்தை அவரது முன்னாள் மாணவர்கள் சுட்டிக் காட்டியதையும் பதிவிட்டுள்ளார். நம் ஆசிரியர்களும் தம் பணி அனுபவங்களை விவரிப்பது மற்ற ஆசிரியர்களுக்கு பயன் தரும்.
தம் பணிக்காலத் தொடக்கத்தில் மாணவரது வாசிப்புத் திறனை மேம்படுத்த அவர் விரும்பினார். தான் ஒரு வாசகனாக இல்லாது மாணவரை வாசியுங்கள் என்று சொல்வது சரியல்ல என்று எண்ணி அவர் முதலில் வாசிப்பில் ஈடுபடுகின்றார். நமது ஆசிரியர்களுக்கு இது நல்லதொரு பாடமாகும். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வி பயிலும் பொழுது படித்ததே கடைசியாக இருக்கும் என்ற அவரது கூற்று நம் ஆசிரியர்களில் பெரும்பாலோர்க்கு முற்றிலும் பொருந்தும். ஒரு மாணவர் புகை பிடித்தாரென்று ஒரு ஆசிரியர் தண்டிக்க, அது தவறு என்றால் நீங்கள் ஏன் புகைபிடிக்கின்றீர்கள் என்று கேட்ட மாணவர்க்குக் கிடைத்தது அடிகளே. ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்பதை இப்படி வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளன.
கல்வி விதிகளின்படி ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் நூலகக் கட்டணம் பெறப்படுகின்றது. ஆனால் எல்லாப் பள்ளிகளிலும் நூலகர் கிடையாது. 10000 நூல்களுக்கு மேல் இருந்தால்தான் நூலகர் பணியிடம் வழங்கப்படும் என்பது விதி. நான் ஒரு சிற்றூரில் பணியாற்றிய பொழுது மேலதிகாரி முன் அறிவிப்பின்றி பள்ளிக்கு வந்தார். மாணவர்கள் நூலகத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருந்தனர். நூலகர் எங்கே என்று கேட்டார். விதிப்படி பள்ளிக்கு நூலகர் பணியிடம் கிடையாது என்று சொன்னேன். முட்டாள்தனமான விதி. நூலகப் பயன்பாடுதான் முக்கியம் என்று சொல்லி நூலகர் பணியிடம் அனுமதித்தார். அது மாத்திரமல்லது மாணவர் உட்கார்ந்து படிக்க மேஜை, நாற்காலிகள் வாங்கவும் அனுமதி கொடுத்தார். நூலகர் உள்ள மிகச் சில அரசுப் பள்ளிகளில் அது ஒன்றாயிற்று. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் என்பதைப் போல ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நூலகர் என்று விதித்திட வேண்டும். 1948 பாடத்திட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டில் குறைந்தது பாடநூல் அல்லாத ஆறு தமிழ் நூல்களும், ஆறு ஆங்கில நூல்களும் படிக்க வேண்டும். இதன் காரணமாக நிறைய மாணவர்களுக்கான நூல்கள் வெளிவந்தன. பாடநூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின் தனியார் நூல்கள் வெளியிடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இலவசப் பாடநூல் திட்டத்தால் பாடநூல் நிறுவனத்திற்கும் இலாபம் என்ற ஒன்று இல்லாது போயிற்று.
நமது தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் செய்யுளுக்கே முன்னுரிமை, பாடநூலிலும் முதலில் செய்யுள், பின்னரே உரைநடை. வினாத்தாளிலும் செய்யுள் பகுதியே முக்கிய இடம் பெறுகின்றது. இதற்கு மாறாக ஆங்கில பாடநூலில் உரைநடை
முதலிலும், செய்யுள் பகுதி பின்னரும் என்று உள்ளது. இதன் காரணமாக தமிழில் வாசிக்கும் திறன் குறைபடுகின்றது. செய்யுள் பகுதியிலும் இறை வணக்கமே தலையாய இடம் பெறுகின்றது. பல மதத்தினர் வாழும் நாடு என்பதால் பல மதங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற வேண்டியதாயிற்று. மொழித் திறனை வளர்க்கும் உரைநடைப் பகுதியின் அளவும் வீச்சும் குறைவாகவே இருக்கிறது.


புத்தகத்தின் விலை : 900/. அமேசானில் கிடைக்கும்.
(044-23620551 – [email protected])

Spread the love