May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வாசிப்பிற்கு திசை இல்லை…

ஆசிரியர்: பேரா.பெ.விஜயகுமார்
வெளியீடு: கருத்து=பட்டறை, 2, முதல் தளம், நாகா வளாகம், 4-வது நிறுத்தம் திருநகர், மதுரை-625 006 (கைபேசி: 98422 65884) விலை : ரூ. 150
இன்றைய சமூகச் சூழல் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. மதவாதம், சாதீயம் இவற்றைக் கடந்து தலித்துகள், பெண்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் ஆகியோரின் மீதான தாக்குதல் அதிகமாகிக்கொண்டே வருகின்ற காலகட்டம் இது. பன்மைத்துவ பண்பாட்டிற்குப் பதிலாக ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் முற்போக்கான இலக்கியப் படைப்புகளை அடையாளம் காட்டக் கூடிய பணியை பேரா.பெ.விஜயகுமார் ‘வாசிப்பிற்கு திசை இல்லை’ என்னும் நூலில் சிறப்பாகச் செய்துள்ளார்.
முதல் கட்டுரையிலேயே உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாமஸ் ஹார்டியின் ‘ஜூட் தி அப்ஸ்கியூர்’ என்ற நாவலை அருமையாக அறிமுகம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுத்தாளர்கள் குஷ்வந்த் சிங், தஸ்தவெஸ்கி, ஆன்டன் செக்காவ் என மிக சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டே செல்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் ஆகியோருடைய உலகத்தைப் பற்றி சில நாவல்கள்.. கற்பித்தலைப் பற்றி ‘பகல் கனவு’ நூல்.. மாவோயிஸ்டுகளின் போராட்டத்தைப் பற்றி ‘தோழர்களுடன் பயணம்’ என்ற நூலில் அருந்ததி ராய்.. கவிஞர் சல்மாவின் ‘மனாமியங்கள்’ என்ற நாவல்.. ‘நான் ஏன் இந்துப் பெண் இல்லை’ என்னும் வந்தனா சொனால்கர் எழுதியுள்ள நூல் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சில படைப்புகள். இவை அனைத்துமே சிறப்பான வாசிப்பனுபவத்தை நமக்கு வழங்குகின்றன. நீங்கள் வாங்கிப் படிப்பதோடு, பரவலாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேரா. ச. இராமசுந்தரம், மதுரை ( 94862 26502 )

Spread the love