June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வருமுன் தீர்ப்போம் !

டாக்டர் ஜி. ராமானுஜம்


முக்கியமான கிரிக்கெட் மாட்ச்! டிவியைப் போடுகிறீர்கள். புள்ளி புள்ளியாய்த் தெரிகிறது. ஒரு திரைப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடித்த என்னத்த கன்னய்யாவுக்கு சாலை தெரிவதுபோல் தொலைக்காட்சி மசமசவெனத் தெரிகிறது. ‘வரும்…ஆனால் வராது’ என்பதுபோல் குத்து மதிப்பாகத்தான் மேட்சைப் பார்க்கிறீர்கள். மேட்சில் ஜெயித்தது இந்தியா என நினைத்து மகிழ்ச்சியுடன் தூங்கப் போகிறீர்கள். மறுநாள் காலை செய்தித்தாளைப் பார்த்ததும்தான் ஜெயித்தது பாகிஸ்தான் எனத் தெரிந்து கொள்கிறீர்கள். உடனே கோபத்தோடு கேபிள் டிவிக்காரருக்குப் போன் போடுகிறீர்கள். அவர் ஒரு மணி நேரம் கழித்து வந்து டிவியைப் போட்டால் பிரதமர் அல்லது முதல்வர் வரும் போது இருக்கும் சாலை போல் துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று தெரிகிறது. மணிரத்னம் படம் கூட வெளிச்சமாகத் தெரிகிறது. இப்போது கேபிள் டிவிக்காரரைப் பார்த்து அசடுவழிந்தபடியே ‘ஹி ஹி.. அஞ்சு நிமிஷத்துக்கு முந்தி கூட நல்லாவே தெரியலியே’ என்போம் அல்லவா? அதுபோல் பல சந்தர்ப்பங்களில் நடக்கும்.


மழை கொட்டிக் கொண்டிருக்கும். பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதும் சட்டென்று சித்திரை மாத வெயில் அடிக்கும். சிலசமயம் மழையை நிறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கிறார்களோ என்று கூட ஐயப்பட வைக்கும்.
‘பெய்யும் பெருமழையும் நிற்க ஒரேவழி
பள்ளிக்கு லீவு விடல்’

எனக் குறள் வெண்பாவே எழுத வைப்பார்கள். இன்னும் சில சமயம் ‘ரெட் அலர்ட்’ என எச்சரிக்கை செய்வார்கள். அதன்பின் வானம் பிளீச்சிங் பவுடர் போட்டுத் துடைத்தாற்போல் பளிச் என்று ஆகி விடும். ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கைக்காக பிரெட் பாக்கெட்கள், மெழுகுவர்த்திகள் என எனக்குத் தெரிந்த ஒருவர் வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டார். ஆனால் மழையோ மின் தடையோ இல்லை. பிரெட் பாக்கெட்டுகளை எல்லாம் கூட பிரெட் தோசை, பிரெட் ஆம்லெட், பிரெட் அல்வா எனப் பண்ணிச் சாப்பிட்டுவிட்டார்.ஆனால் மெழுகுவர்த்திகளை என்ன செய்வது? வேறுவழியில்லாமல் பக்கத்தில் உள்ள மாதா கோவிலுக்கு மானியமாகக் கொடுத்துவிட்டார்.
நண்பர் ஒருவரது பைக் நடுவழியில் நின்றுவிட்டது. நான்கு கிலோமீட்டர் உருட்டியபடியே வந்து ஒர்க்ஷாப் வந்து மெக்கானிக்கிடம் சொன்னால், அவர் வந்து லேசாகத் தொட்டவுடன் வண்டி சட்டென்று ஸ்டார்ட் ஆனது.


மருத்துவ உலகில் சில சமயங்களில் இது போல நடக்கும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். நடுராத்திரி 12 மணிக்குக் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பிக்கும். தந்தை, தாய், அண்டை அயலார் எல்லாம் அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்த என்னென்னவோ முயற்சி செய்து பார்ப்பார்கள். எதற்கும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தாது. உடனே பதறிப் போய் அவசர அவசரமாக ஆட்டோ, ஆம்புலன்ஸ் எனப் பிடித்து ஆஸ்பத்திரி அவசரப் பிரிவுக்கு வருவார்கள். உடனே மருத்துவரை வரச் சொல்லுங்கள் எனச் சொல்லிப் பதறுவார்கள். ஆனால் மருத்துவர் வந்த அந்தக் கணம் முதல் அக்குழந்தை குதூகலமாக அமுல் விளம்பரத்தில் வரும் குழந்தைபோல் சிரிக்க ஆரம்பித்து மருத்துவரின் ஸ்டெதெஸ்கோப்பை இழுத்து விளையாட ஆரம்பிக்கும். அதைவிடக் காமெடி “இவ்வளவு நேரம் கதறிகிட்டிருந்துச்சு சார். இப்ப சிரிக்குது. ஏய்! கொஞ்சம் அழு!” என்று சொல்லி அக்குழந்தையின் தந்தை அதைக் கிள்ளி வேறு விடுவார்.


இதேபோல் ஒருமுறை என்னை அவசரமாக ஒரு மருத்துவமனைக்கு ஒரு நோயரைப் பார்க்க வருமாறு அழைத்தனர். அந்த மருத்துவமனை வாசலில் நுழையும்போதே குறட்டைச் சத்தம் ஒன்று பலமாகக் கேட்டது. நான் பார்க்க வேண்டிய நோயர்தான் அவர். சாம தான பேத தண்ட முறைகளை எல்லாம் பிரயோகித்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அவரது கணவர் அசடு வழிந்தபடியே சொன்னார் “அஞ்சு மாசமாத் தூக்கமே வரலைன்னுதான் அட்மிட் பண்ணோம் சார். அதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டோம். அரை மணி நேரத்துக்கு முந்திவரை முழிச்சிட்டிருந்தா. இப்பதான் நல்லாத் தூங்கிட்டா” என.


சில சமயங்களில் நாம் எதுவும் செய்யாமலேயே பிரச்சனைகள், தானே சரியாகிவிடும். சில நோய்கள் கூட அப்படித்தான். அதனால்தான் நல்ல மருத்துவர் என்பவர், நோய் தானே குணமடைவதற்கு முன்பே சரியான காலத்தில் சிகிச்சை அளித்து பெயரைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பார்கள்.


‘வருமுன் காப்போம்’ என்பது போல் சிலரை நாம் உதவிக்கு அழைத்து அவர்கள் வருவதற்கு முன்பே தீர்ந்துவிடும்.
(9443321004 – [email protected])

Spread the love