September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வருடா வருடம் வரும்!

டாக்டர் ஜி. ராமானுஜம்
எனக்குத் தெரிந்த ஒருவர் எல்லா விஷயங்களுக்கும் அலுத்துக் கொள்வார். அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரைப் பற்றி ‘மாசா மாசம் வாடகை கேக்கறாரு’ எனக் குறைப்பட்டுக் கொண்டார். அவரைப் போல் எனக்கும் சிலசமயம் என்ன இது வருடாவருடம் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என அலுத்துக் கொள்ளத் தோன்றும். காரணம் புத்தாண்டினால் அல்ல. கொஞ்சம் கூட மாறாமல் பல வருடங்களாக அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் (நான்கு மீண்டும்களுக்கே சலிப்பு வருகிறதல்லவா?). செய்வதால்தான். மன்னிக்கவும்.. செய்வதால் மட்டும் அல்ல. சில சமயம் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் செய்யாமல் விடுவதால்!
புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் டிசம்பர் 31 அன்று இரவு கமல்ஹாஸன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தொலைக்காட்சியில் சகலகலா வல்லவன் திரைப்படத்தில் வரும் ‘இளமை இதோ! இதோ!’ பாடலைப் போடவில்லை என்றால் சாமிகுத்தம் ஆகிவிடும். இந்த வருடம்கூட கிண்டலாக மீம்ஸ் போட்டார்கள்.. பெட்ரோல் விலை உயர்வால் கமல்ஹாஸன் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பைக்கை எடுக்காமல் நடந்து வருவார் என. அந்தப் படத்திலேயே ‘கட்டைவண்டி கட்டைவண்டி’ என்ற பாடலும் பிரபலம். அதிலேயே வரலாம்!
அது போன்றே புத்தாண்டுக்கு டெலிபோன் டைரக்டரியில் இருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்து அனுப்புவது. இதற்கு எல்லாம் பதிலளித்து முடிப்பதற்குள் பொங்கல் வாழ்த்துகள் வர ஆரம்பித்து விடும்! இப்படித்தான் ஒருமுறை எல்லா மெசெஜ்களுக்கும் கூhயமே லடிர ! றiளா லடிர வாந ளயஅந ! எனப் பதிலளித்துக் கொண்டிருந்தேன். உங்கள் டேட்டா முடிவடைகிறது. ரீசார்ஜ் செய்யவும் என பி.எஸ்.என்.எல்-லிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்கும் கூhயமே லடிர ! றiளா லடிர வாந ளயஅந ! எனப் பதிலளித்து விட்டேன்.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே நாம் பரபரப்பாகிச் செய்வது காலெண்டர்கள், டைரிகள் வாங்கி வைப்பதுதான். மருந்துக்கடை, மளிகைக்கடை தொடங்கி மயானம் வரை நமக்குத் தெரிந்த எல்லா இடங்கள், கடைகளிலும் அடித்துச் சண்டை போட்டு மன்த்லி காலெண்டர்கள், டெய்லி ஷீட் காலெண்டர்கள் வாங்கி விடுவார்கள். அத்தனை காலெண்டர்களையும் மாட்ட ஆணிகள் அடித்தால் சுவர் சல்லடை மாதிரி ஆகிவிடும். அப்படிப் போராடி வாங்கிய மன்த்லி காலெண்டர் தாளை மாதம் ஒரு தடவை மாற்றுவது சிலர் மட்டுமே. வருடத்துக்குப் பன்னிரண்டு முறையே செய்ய வேண்டிய காலெண்டர் தாளையே மாற்றாமல் இருக்கும்போது வருடத்தில் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்கள் கிழிக்க வேண்டிய டெய்லி ஷீட்டைக் கிழிப்போமா? இப்படி நான்கைந்து டெய்லி ஷீட் காலெண்டர்கள் வாங்கிவந்த ஒருவரது மனைவி அவரிடம் ‘இதையெல்லாம் கரெக்டா தினமும் யாரு கிழிப்பார்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அவர் நான் கிழிப்பேன் என்றார். பதிலுக்கு அவர் மனைவி ‘கிழிச்சீங்க!’ என்றார்.
அதே கதி அதோ கதிதான் டைரிகளுக்கும். புதுச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளை போல் டைரி எழுதி அதை ஆவணப்படுத்தி வருங்கால வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருப்பதுபோல் டைரிகளை வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டு பின்னர் ஒரு வாரம் கூட எழுதாமல் அப்படியே வைத்திருப்போரது குழந்தைகளுக்கு அவை அடுத்த வருடம் ரஃப் நோட்டாக மாறும். எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. எப்படியும் பத்து நாட்களுக்கு மேல் எழுதப் போவதில்லை. ஆகவே ஜனவரி மாதம் பத்து நாட்கள் மட்டும் இருக்கிற மாதிரி டயரி ஒன்று தயார் செய்தால் தயாரிப்புச் செலவும் மிச்சமாகும். விலையையும் குறைக்கலாம்.
அடுத்ததாகச் செய்வது தீர்மானங்கள் எடுத்துக் கொள்வது. ஜிம்முக்கு ஒழுங்காகப் போய் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஒரு தீர்மானம். அதுவும் முதல் 7 நாட்களே நடக்கும்! ஒரு மாதம் கழித்து ஜிம்முக்குப் போய் மிச்சப் பணத்தைக் கழித்துக்கொண்டு திரும்பக் கொடுக்குமாறு சண்டை போடுபவர்களும் உண்டு.
வருடாவருடம் தவறாமல் இதையெல்லாம் செய்வதாகத் தீர்மானம் போட்டுக் கொள்கிறோம்.ஆனால் செய்வதே இல்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஏதேனும் ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமானால் புத்தாண்டு அன்று அந்த வருடம் முழுதும் அச்செயலைத் தினமும் தவறாமல் இன்னும் அதிகமாகச் செய்வதாகத் தீர்மானம் எடுத்துக் கொண்டால் நான்கு நாட்களுக்குப் பிறகு அச்செயலைச் செய்யவே மாட்டோம். அதாவது புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைத்தால் ‘இந்த வருடம் இன்னும் அதிகமாகத் தினமும் சிகரெட் குடிக்க வேண்டும்’ எனத் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நான்கு நாட்களுக்குப் பின் சிகரெட் பக்கமே போகமாட்டோம்… சிம்பிள்!
நானும் இந்த ஆண்டு ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன். மாதாமாதம் பத்தாம் தேதிக்கு முன்பே புதிய ஆசிரியன் இதழுக்குக் கட்டுரை அனுப்ப வேண்டும்.. ஆசிரியர் ராஜு சார் போன் செய்து என்னைக் கேட்கும் நிலைக்கு வைக்கக் கூடாது என. என்னது? ‘கட்டுரை எழுதப் போவதில்லை எனத் தீர்மானம் செய்து கொண்டால் வாசகர்கள் மகிழ்வார்களே..’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
(9443321004 – [email protected] )

Spread the love