September 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வரலாற்றை வளைக்க முடியாது என்பதே
கடந்த கால வரலாறு

மதுக்கூர் இராமலிங்கம்
சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கப்பட்டுள்ளார். உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் இவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது டெலிபிராம்ப்டர் வேலை செய்யாமல் மக்கர் செய்ததைத் தொடர்ந்து இவர் பேச முடியாமல் தவித்ததை இந்தப் பட்டியலில் அவர் சேர்த்துக் கொண்டாலும் நாம் ஆச்சரியப்பட வேண்டாம்,
பிரம்மகுமாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியப் பாரம்பரியம் பெண்களைப் போற்றி முக்கியத்துவம் அளித்துவருகிறது என்றும், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் வணங்கும் நாடு நம்முடையது என்றும் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவை இந்தப் பெண்களின் காவலர் நிறைவேற்றி இருக்கலாமே? பெண்கள் தெய்வமாக காலண்டரில் தொங்கிக் கொண்டிருந்தால் போதும், அரசியல் அதிகாரம் தேவையில்லை என்பதுதான் சங்பரிவாரத்தின் கருத்து. கிராமப்புறப் பெண்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருப்பது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம். ஆனால் அந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது. 100 நாள் என்பதை 200 நாள் திட்டமாக மாற்ற வேண்டும் என்ற மக்களின் குரல் மோடியின் காதில் ஏன் விழுவதில்லை? பெண்கள் சக்தி பெற வேண்டும் என்று வாயளவில் வாழ்த்தினால் போதுமா?
2018-ம் ஆண்டு சுதந்திரதின உரையின்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுவார்கள் என்று மோடி உறுதியளித்தார். ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
பிரதமர் தன்னுடைய உரையில் ‘உரிமைகளைப் பற்றி பேசுவது சில சூழ்நிலைகளில் சரியாக இருக்கலாம். ஆனால் கடமையின் தீபத்தை அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்றி வைக்கவேண்டும்’ என்று கீதாபதேசம் செய்துள்ளார். அனைவரும் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்தக் கடமையின் பலன் ஒருசில கார்ப்பரேட் முதலாளிகளின் கஜானாவை நிரப்புவதற்கு மட்டும் பயன்படக்கூடாது. அனைத்துப் பகுதி மக்களுக்கும் சென்றுசேர வேண்டும். ஆனால் கடமை தீபத்தின் ஒளி இங்கே ஒருசில முதலாளிகளின் வீட்டு விளக்காக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் முதலாளிகள் நலச்சட்டங்களாக மாறி, போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அடிமைத்தனத்தில் நமது சமூகம் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். பிரிட்டிஷாரிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சிகள் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து போராடி விடுதலையை சாத்தியமாக்கினர். ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு இந்தியாவின் வரலாற்றையே திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கத்தினரின் பங்களிப்பை மறைத்து இந்துத்துவா நோக்கில் இந்திய வரலாற்றை திரித்தும், திருத்தியும் எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்கிற பெயரில் விடுதலைப் போராட்ட காலத்தில் அன்னியர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்தவர்களை புனிதர்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அனைத்துப் பகுதி மக்களின் வீரஞ்செறிந்த பங்களிப்பு போற்றப்பட வேண்டும். ஆனால் பாஜக அரசு குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படுகிறது என்பது குடியரசுதின அணிவகுப்பில் தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியுள்ளது.
தமிழகம் தயாரித்திருந்த ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் ஆகியோரது திருவுருவங்கள் இடம்பெற்றிருந்தன.
வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும் மானத்தோடு வாழ்ந்தவர்கள். அந்நியர் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கேட்க மறுத்தவர்கள். அவர்களை எதிர்த்துப் போராடி மாண்டவர்கள். இந்திய அளவில் கொண்டாடப்பட வேண்டியவர்கள். வ.உ.சி. வணிகர் என்பதால் அவரை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டார்களாம். அவர் வெறும் வாய் வணிகர் அல்ல. மேலைக் கடல் முழுவதும் சுதேசிக் கப்பலை ஓட்டிக்காட்டி பிரிட்டிஷாரை நடுங்க வைத்தவர். மகாகவி பாரதியை தெரியாது என்பது பாரத தேசத்தையே தெரியாது என்று கூறுவதற்கு ஒப்பானது. விடுதலைப் போராட்ட காலத்தில் பாரதி அளவுக்கு வீறு கொண்டு பாடிய பெருங்கவிஞன் வேறு யாரும் இல்லை. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அமைத்த குழு ஊர்தியை நிராகரித்திருப்பது இந்திய வரலாற்றிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நிச்சயம் ஊறு விளைவிக்கக்கூடியது. ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் அணிவகுப்பில் இடம் பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது நம் வரவேற்புக்கும் பாராட்டிற்கும் உரியது.
கேரள அரசின் ஊர்தியில் இடம்பெற்றிருந்த நாராயண குருவுக்கும், குடியரசு தின அணிவகுப்பில் இடமில்லை. மேற்குவங்கம் உருவாக்கிய ஊர்தியில் இடம்பெற்றிருந்த மகத்தான நேதாஜி, தேசிய கீதத்தை இயற்றித்தந்த ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை. ஏனென்று கேட்டால் கொரோனா கட்டுப்பாடு என்று கூறுகிறார்கள். இவர்களது படத்தை எடுத்து வந்தால் கொரோனா கோபித்துக் கொள்ளுமா? ஊர்திகள் தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டன என சப்பைக்கட்டு கட்டுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதுதான் இவர்கள் வகுக்கும் தேச பக்தர் என்பதற்கான தகுதியாக இருக்கும் போலும்!
குடியரசு தினம் என்பதே தேசத்தின் ஒருமைப்பாட்டை பறைசாற்றுவதுதான். ஆனால் ஒன்றிய அரசின் நடவடிக்கை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. வரலாற்றை திரித்து எழுதிவிட்டதாக இன்று சிலர் திருப்தி கொள்ளலாம். ஆனால் மண்ணில் விழுந்த விதை போல வரலாறு வெடித்து வெளியே வந்து தழைக்கும் என்பதே கடந்த கால வரலாறு.
(94422 02726 – [email protected])

Spread the love