September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வண்டிக்காரி

விக்னேஷ்
மதிய வெயில் கொஞ்சம் தணிந்திருந்தது. பல நாட்களாக திறக்கப்படாத கம்பெனியின் நிழல் அவளிடம் போவதா, இல்லையா என்று எண்ணி அரைகுறையாய் தரையில் அவளுக்கு இடம் அளித்தது. சரக்குகளை ஏற்றிக் கொண்டு குட்டியானை வண்டிகளும் மீன்பாடி வண்டிகளும் எதிரெதிர் திசைகளில் வந்து போய்க்கொண்டிருந்தன. மீன்பாடி வண்டிகளை ஓட்டி கொண்டு செல்லும் பதின்பருவ பையன்கள் சிலர் ‘நலமா?’ என்ற கேள்வியை உள்ளடக்கிய புன்னகையோடு தலையசைத்தனர். நன்கு சிரித்தபடி அவள் தன் இடது கையை மேலே தூக்கி ‘நலம்’ என பதிலளித்தாள். அவர்கள் கடந்து சென்ற பின்பும் சிறிது சிரிப்பு மிச்சம் இருந்தது முகத்தில்..
“இன்னாடி, ஒரே கொண்டாட்டமா கீர, பொண்ணு வீட்டுக்குப் போனியே, நல்ல கவனிப்போ?” என்றபடியே அருகில் வந்தாள் அஞ்சுகம். “கொண்டாட்டத்துல கீரேன், நீயும் வாயேன் சேர்ந்துகிட்டு ஆடுவோம்” என்று பார்வதி பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், ‘ஒத்த அடி அடிக்கிற, ஆடுறியா ஆயா?’ என்று சொல்லிக்கொண்டே, சின்ன தூக்கு பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்து வைத்தான் ஸ்டீபன். “அடக் கம்முனாட்டி, போட்டனா பாரு! இப்ப ஆடத்தான் கூப்பிடறாங்க பாரு, பிஸ்கெட்டு வாங்கிட்டு வந்தியா?” என்றாள்.
‘இந்தா ஆயா’ என்று பேப்பரில் அடங்கியிருந்த பட்டர் பிஸ்கட்டைத் திறந்தான். 3 கப்புகளில் டீயை ஊற்றி கொண்டிருந்தபோது, ‘ஸ்டீபனு, டேய் கிரவுண்டுக்கு போலாம் வாடா ஃபுட்பாலாட’ என்று அன்சாரியின் குரல் கேட்டவுடன், ‘ஆயா கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ஸ்டீபன் ஓடினான்.
“டீ குடிச்சிட்டுப் போடா” என்று அவள் சொன்னதைக் கேட்காமல் ஓடிவிட்டான். “பாருமா புள்ளய, டீ வாங்கிக் கொடுத்துட்டு, குடிக்காம போவுது” என்று அஞ்சுகத்திடம் வேதனையோடு சொன்னாள் பார்வதி. டீ கப்பை எடுத்து பார்வதியிடம் கொடுத்துக் கொண்டே அஞ்சுகம், “இந்த மேரியோட புள்ளைய கடைக்கு அனுப்பாதடி, அவன் அம்மா உலகத்தில் இல்லாத அக்கிரமம் நடந்துட்டதப் போல அவனைப் போட்டு அடிக்கிறா, அவனும் நீ சொன்னாதா(ன்) கடைக்குப் போறான். அவ சொன்னா போவ மாட்டேன்றான். அவனை இனிமே எதுக்கும் அனுப்பாத நீ” என்று சொல்லி முடித்தாள் அஞ்சுகம்.
கொஞ்சம் மௌனம் நிலவியது. “சரி, அதை விடு, பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வந்தியே என்னாச்சு? ” என்று அஞ்சுகமே ஆரம்பித்தாள்.
பார்வதி முகத்தில் அப்போது சிரிப்பு இல்லை. “அட என்னான்னு கேட்னுகிறனே, ஏதாச்சும் சொல்றாளானு பாரேன்!”என்று சலித்துக் கொண்டாள் அஞ்சுகம் .
“அத்த இன்னானுடி சொல்றது? நீ வரதுக்கு முன்ன அதத்தான் யோசிச்சினு இருந்தேன். அந்த வண்டிக்காரப் பசங்க பாசமா சிரிச்சிட்டு போனானுங்க, நானும் சிரிச்சேன். நீ என்னமோ கொண்டாட்டத்துல கொண்டுபோய் சேர்த்துட்ட!”. என்று சொன்ன பார்வதியை அஞ்சுகம் சிறிது குற்ற உணர்ச்சி கலந்த பார்வையோடு பார்த்தாள்.
சிறிய இடைவெளிக்குப்பின் அஞ்சுகம், “இன்னாடி, அவ புருஷன் திரும்பவும் குடிச்சிட்டு உம் பொண்ண அடிச்சி கிடிச்சி வெச்சிட்டானா?” என்று கேட்டாள். “அந்த நாய்க்கு வேற என்ன வேலை இருக்க போவுது? அவள அடிச்சது மட்டும் இல்லாம அவ பிள்ளையையும் அடிச்சுருக்கான்” என்கிறாள் பார்வதி.
“யாரு நம்ம ராகினியவா? அவளுக்கு என்னாடி பத்து வயசு கூட இருக்காது. அவள எதுக்கு அடிச்சானாம்?” என்று ஆதங்கம் பொங்கக் கேட்டாள் அஞ்சுகம். ” மீனா வட்டிகாரங்களுக்கு கொடுக்க வெச்சிருந்த காசை எடுக்கப் போனான். முடியாதுன்னதுக்கு அவள அடிச்சான். அம்மா அடி வாங்குறத பார்க்க முடியாம புள்ள குறுக்க போயிருக்கா. அவளையும் முடிய புடிச்சு தள்ளிவுட்ருக்கான் அந்த நாயி. பாவோம்! குழந்தைக்கு தலைல மூணு தையல்” என்று சொல்லி முடித்தாள் பார்வதி.
“அட படுபாவிப் பய, அவன் சாவு சும்மா வராது. சோறு தண்ணி இல்லாம, அனாதை பொணமாதான் சாவான்” என்று சாபமிட்டு முடித்த அஞ்சுகம் “குழந்தை இப்ப எப்படி இருக்கா?” என்று கேட்டாள்.
“ரெண்டு நாளா காய்ச்சல்ல இருக்கா, புள்ள சுருண்டு கிடந்தத பார்த்து உயிரே போயிடுச்சு” என்றாள். “மீனா எப்படி இருக்கா?” என்று தணிந்த குரலில் அஞ்சுகம் கேட்க..”அந்த பொறம்போக்குகிட்ட அடியும் வாங்கிட்டு, வட்டிக்காரனுங்க பேச்சைக் கேட்க முடியாம சாகுறா, அவ்ளோ அசிங்கம் அசிங்கமா பேசுறானுங்களாம். இந்த புள்ள ராகினி மட்டும் இல்லைன்னா அவங்க பேசின வார்த்தைக்கு செத்திருப்பம்மானு மடியில படுத்துட்டு அழுவுறா!” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னாள்.
“இப்ப என்னடி பண்ணப் போறா பணத்துக்கு?” என்று வினவினாள் அஞ்சுகம். “அவதான் இன்னும் எயுனூறுக்கும் எட்னூறுக்கும் பாத்திரம் கழுவிக்கிட்டு, துணி தொவச்சிக்கிட்டு இருக்கா. இந்த பரதேசி வேற போதையில அவனுங்களத் திட்டி வேற வச்சிருக்கான். அவனுங்க வட்டியோட அசல் பதினஞ்சு ஆயிரத்தை எடுத்து வச்சாத்தான் ஆச்சுன்னு சொல்லிட்டானுங்க. காலையில போயி அவனுங்கட்ட கெஞ்சி கேட்டு வந்திருக்கேன், இன்னைக்கு சாயங்காலம் ரெண்டாயிரம் தந்துடுறேனு. என்ன நெனச்சாங்களோ போய் எடுத்துட்டு வான்னு சொல்லிட்டாங்க” என்று நிலைமையை அஞ்சுகத்திற்கு உணர்த்தினாள்.
மாலை மங்க ஆரம்பித்தது, பூக்கூடையை இடுப்பில் தூக்கி வைத்துக்
கொண்டு, பார்வதிக்கு எந்த ஆறுதலும் சொல்ல முடியாமல், “என்னான்ட இருந்துச்சுன்னா எடுத்துக் கொடுத்திருப்பேன்…” என்று துக்கம் அடைத்த தொண்டையிலிருந்து சொன்னாள் அஞ்சுகம்.
“எனக்கு தெரியாதாடி உன்ன!” என்று அன்பாகப் புன்னகைத்துப் பூ வியாபாரத்திற்கு அஞ்சுகத்தை வழியனுப்பி வைத்தாள் பார்வதி. இரண்டாயிரத்திற்கு வழியை யோசித்தபடி அமர்ந்திருந்தாள் பார்வதி. மீனாவிற்கு பதினோரு வயது இருக்கும்போதே பார்வதியின் கணவன் இறந்துவிட்டார்.. தனியாளாய் நின்றபோது அவளுடைய நம்பிக்கையாக இருந்தது, அவள் கணவனின் மீன் பாடி வண்டி. துவக்கத்தில் அவள் பெரிய பெரிய பெட்டிகளைக் கூட மூன்று அடுக்கு வைத்தாலும் இழுத்துக் கொண்டு போய் சேர்த்துவிடுவாள். அந்தப் பகுதியில் யார் வீட்டு நிகழ்ச்சிகளிலும் உதவிக்கு செல்வது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகள் வரும் போது, வண்டியை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு அதற்கான வாடகையை மட்டும் வாங்கிக் கொள்வாள். வயதானபின் வண்டியின் வாடகையை மட்டுமே நம்பி இருந்தாள்..
மீனாவை கல்யாணம் செய்து வைத்ததில் இருந்து மீனா அவள் கணவனால் பலமுறை விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறாள். அவள் வீட்டு சாப்பாட்டுக்கு பார்வதி கொடுக்கும் வண்டி வாடகைப் பணமே வழிசெய்தது. சமீபகாலமாக மீனாவிற்காகவும் ராகினிக்காகவும் இந்த ஐம்பத்தெட்டு வயதிலும் தானே வண்டியை இழுத்து கொண்டிருக்கிறாள். வட்டிக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்கு என்ன செய்வது? மீனாவிற்கு என்ன செய்வது? ராகினியின் மருத்துவச் செலவுக்கு எங்கே போவது? என்று தெரியாமல் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தாள் பார்வதி.
நேரம் செல்லச் செல்ல இதயத் துடிப்பு அதிகமானது. அந்த நேரம் அவள் வண்டியின் பெல் அடிக்கவும், வண்டியை நோக்கிப் பார்த்தாள். எதையும் சந்திக்கத் தயாராகி விட்டதுபோல் எழுந்து நின்றாள். இரவு ஏழு மணிக்கு மீனாவைப் பார்த்துக் கையில் சிறிது பணமும், குழந்தைக்குப் பழங்களும் பிஸ்கெட்டுகளும் கொடுத்தாள்.
“இதெல்லாம் இப்ப எதுக்குமா? வட்டிக் காசு கொடுக்கலனா அவனுங்க வந்து என்னென்ன கேப்பானுங்களோனு தெரியலையே” என்று படபடப்போடு சொன்னாள் மீனா.
அதெல்லாம் இப்போதைக்குக் கேக்க மாட்டாங்க, அடுத்த மாசத்துலருந்து எப்டியாச்சும் ஒழுங்கா குடுத்துக்கலாம்” என்ற பார்வதியை ராகினியும், மீனாவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். பார்வதி வீடு திரும்பினாள்.
இரவு நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய அஞ்சுகம், “ஏ! பார்வதி ஓன் வண்டி மாதிரியே இருந்தது.. ஒல்லியா ஒருத்தன் ஓட்டினு போனான்டி” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், வழக்கமாக நிறுத்தி வைக்கும் இடத்தில், பார்வதியின் மீன் பாடி வண்டி இல்லாததை கவனித்ததோடு, உணர்ச்சியற்றவளைப் போலிருந்த பார்வதியையும் பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள்.
( தொடர்பு எண் : 90876 58942)

Spread the love