September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வகுப்பறைக்குள்ளே ஒரு போட்டி..!

தேனி சுந்தர்
இரண்டாண்டுகளுக்கு முன்பு தேனியில் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது.. எங்கள் பள்ளி மாணவர்களுடன் நீட் தொடர்பாக நீங்கள் பேச வேண்டும். நீட் தேர்வு ஏன் வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே ஒருவர் பேசி இருக்கிறார். ஏன் வேண்டாம் என்ற கோணத்தில் நீங்கள் பேச வேண்டும் என்றனர்.
ஆஹா, எப்படியொரு வாய்ப்பு.. ஆனால் குழந்தைகளிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? உள்ளூர எண்ணங்கள்..! ஆனாலும் வேறுபட்ட கோணங்களில் உள்ள கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளியின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டக் கூடிய ஒன்று அல்லவா.. சம்மதித்து விட்டேன்..!
துணைக்கு நண்பர் தெய்வேந்திரனை அழைத்துக் கொண்டேன். பள்ளியின் தோற்றமும் கட்டிடங்களுமே நம்மை மிரட்டி விட்டன. ஒவ்வொரு எட்டையும் தயங்கித் தயங்கி எடுத்துவைத்து நடந்தோம். அலுவலகம் சென்றதும் கூட ஒரு ஆள் அனுப்பி வகுப்பிற்கு அழைத்துச் சென்றனர்.
பொதுபொதுவென பெருத்து, கன்னங்கள் சிவந்து, பெரிய சைஸ் பப்பாளிப் பழங்கள் போல இருந்தனர் குழந்தைகள். நான் பேசவில்லை. அவர்களோடு கொஞ்ச நேரம் உரையாடினேன். கொஞ்ச நேரம் விளையாடினேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் அந்த வகுப்பில் இரு மாணவர்களுக்கு வகுப்பறைக்குள்ளேயே ஒரு ஓட்டப் பந்தயம் வைத்தேன். ஒருவன் சமதளத்தில் ஓட வேண்டும். இன்னொருவன் குறுக்கே கிடக்கும் பெஞ்சுகளில் ஏறி இறங்கி, மறுபடியும் ஏறி இறங்கி ஓட வேண்டும். இருமுறை ஓடித் திரும்பினர். இருமுறையும் சமதளத்தில் ஓடிய மாணவனே வென்றான்.. இந்தப் போட்டி நியாயமானதா, சரியாகவும் முறையாகவும் நடைபெற்றதா..என்று கேட்டேன். இல்லையென்று மறுத்து விட்டனர்.
வகுப்பில் உயரமான மாணவன் ஒருவனையும் குள்ளமான மாணவன் ஒருவனையும் அழைத்து அதில் உயரமான மாணவனுக்கு ஒரு நாற்காலியும் கொடுத்து கரும்பலகைக்கு மேல் நான் வைத்துள்ள டஸ்டரை எடுக்கச் சொன்னேன். இப்போது நான் இவர்கள் இருவருக்கும் கொடுத்த வாய்ப்பு சரிசமமானதா என்று கேட்டேன். இல்லவே இல்லை என்று மறுத்து விட்டனர்.
மூன்றாவதாக ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் அனைவரும் இந்தப் பள்ளியில் அல்லது இதுபோன்ற வேறொரு தனியார் பள்ளியில்தான் கடந்த சில ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு பாடவேளைக்கு ஆசிரியர் வராமல் இருந்திருக்கிறாரா..? அவர் வராத நிலையில் நீங்களாகவே விளையாடி மகிழ்ந்த பொழுது ஏதேனும் உங்களுக்கு வாய்த்திருக்கிறதா என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள் இல்லவே இல்லை என்றனர்.. எனக்குத் தெரிந்த ஒரு அரசுப் பள்ளி இருக்கிறது, அங்கே இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். அதில் ஒரு ஆசிரியர் வாரத்தில் 4 நாட்கள் வேறு சில பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் சென்று விடுவார். வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் அங்கு இரண்டு ஆசிரியர்களும் இருப்பார்கள். அதுவும் ஐந்து வகுப்புகளுக்கும் சேர்த்து.! இப்போது அங்கு இரண்டு பேர் தேவையில்லை என ஒரு ஆசிரியரை தூக்கி விட்டனர். ஒரே ஒரு ஆசிரியர் ஐந்து வகுப்பு குழந்தைகளுக்கும்! இது போல தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர். வாழ்க்கை சமம் இல்லை. வாய்ப்புகள் சமம் இல்லை. வசதிகள் சமம் இல்லை. அந்தக் குழந்தைகளும் நீங்களும் சமமான ஒரு போட்டியில் களமிறங்கினால் அது நியாயமா.. அநியாயமா என்றேன்! அநியாயம் என்றனர் ஒத்த குரலில்..!
இதுவரை அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த நண்பர் எக்ஸ்கியூஸ் மீ சார்.. டைம் ஆச்சு..! என்றார்.. விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக ஏராளமான கார்கள் வரிசையில் நின்றிருந்தன. நண்பரின் டிவிஎஸ் 50 அவர்களுக்கு தொந்தரவில்லாமல் ஓரமாக நின்றிருந்தது. ரெண்டு மிதி ஓங்கி மிதித்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.. நல்ல மேடுதான்..திணறித் திணறி வண்டி மேலே ஏறியது.
(9047140584 – [email protected])
நன்றி : வண்ணக்கதிர்

Spread the love