September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ரேடியோ வழியாகக் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

உமா
கொரோனா தாக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கல்விச் சூழல் நினைத்துப் பார்க்க இயலாத வழி வகைகளில் பாதிப்பு அடைந்துள்ளதை வேதனைகளுடன் நாம் கடந்து வருகிறோம். ஆனால் ஆங்காங்கே மாற்று வழிகளைக் கையாளும் ஆசிரியர்கள் நம்பிக்கைப் பூக்களாக மலர்ந்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கதே. குழந்தைகளை நேரில் சந்தித்து கற்பித்து வரும் ஆசிரியர்கள், இணையவழியில் வாட்ஸ் அப் கல்வியை அளிக்கும் ஆசிரியர்கள் என பட்டியலிடலாம். இணைய வசதியற்ற குழந்தைகளுக்கு கற்றல் வெகு தூரமாகிவிட்டது. பாதுகாப்பற்ற இணையவழிக் கற்பித்தல் சூழலில் ஒரு மாற்றாக பாதுகாப்பான ஆன்லைன் கல்வி ரேடியோ வழியாக கடந்த 8 மாதங்களாக ஏராளமான மாணவர்கள் கற்று வருவது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இதை ஒரு செயல்பாடாக வடிவமைத்து தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வழிகாட்டி வருபவர் நமது கடலூர் மாவட்டத்தின் கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் கார்த்திக் ராஜா. அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி இடைவெளியை நிரப்பி வரும் இவரிடம் ஆன்லைன் கல்வி ரேடியோ குறித்து விபரங்களைக் கேட்டோம் நமது புதிய ஆசிரியன் இதழுக்காக.
ஆன்லைன் கல்வி ரேடியோ கருத்து எப்படி உருவானது ?
கல்வித் தொலைக்காட்சி வந்த பொழுதே என் மனதில் ‘கல்வி ரேடியோ’ என ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. ஆனால் அப்போது அதற்கான தேவையும் சூழலும் அமையவில்லை. அது மட்டுமல்ல, ரேடியோ என்பது பெரிய விஷயம், பொருட்செலவு அதிகம்,நம்மால் தனி மனிதராக இதைச் செய்ய முடியுமா என தவிர்த்து விட்டேன். ஆனால் இணையத்தில் ரேடியோ குறித்து தேடி வந்தபோது ஆன் லைன் வழியாக எளிய முறையில் ரேடியோ உள்ளது என்பதை அறிய முடிந்தது.
கொரோனா ஊரடங்கு வந்தபோது எனது பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கையாளக் கூடிய வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவை அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன். நவம்பர் மாதம் ஆன்லைன் கல்வி ரேடியோ வழியாக பாடம் நடத்தும் முயற்சியை ஆரம்பித்தேன். டிசம்பர் மாத இறுதி வரை அது பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. எனது பள்ளி மாணவர்களுக்கு அனுப்பும் வலையொலி ரேடியோ இணைப்புகளை பல ஆசிரியர் குழுக்களில் பகிர்ந்தேன். ஆசிரியர்கள் எங்கள் மாணவருக்கும் இது போல பயன்படுத்த உதவுங்கள் என்று கேட்க, மற்ற ஆசிரியர்கள் ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கும்போது நாம் ஏன் ஒரு குழுவாக செயல்படக் கூடாது என எண்ணி இணைந்தோம். ஜனவரி மாதம் www.kalviradio.com ஆரம்பித்து 1-8 வகுப்புகளுக்காக ஆன்லைன் கல்வி ரேடியோ வழியாகக் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்தோம். தற்போது தமிழகம் முழுவதும் சற்றேறக்குறைய 75 ஆசிரியர்கள் இணைந்து இப்பணியைச் செய்கிறோம் என்கிறார்.
மற்ற இணையவழிக் கல்வியிலிருந்து இது எப்படி மாறுபடுகிறது?
இதற்கு முதலில் பெரிய ஆன்ட்ராய்டு மொபைல் வேண்டும் என அவசியமில்லை. வசதியுள்ள பட்டன் ஃபோன் எனப்படும் மிகச் சாதாரண அலைபேசிகளே போதும். 4 ஜி.பி. ரேம், சேமிப்பு 120 ஜி.பி. என மிகப் பெரிய அளவு செலவு செய்து அலைபேசிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. இணைய வசதி அதிகம் தேவையில்லை. தினமும் கற்றல் செயல்பாட்டில் பல மணி நேரங்கள் ஈடுபட்டாலும் 100 எம்.பி. (அ) 200 எம்.பி-க்குள்ளேயே அடங்கி விடும். மாதம் முழுக்க பயன்படுத்தினாலும் கூட சில ஜி.பி. அளவுகள்தான் செலவாகும். அரசுப் பள்ளிக் குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்சினையே இணையவழிக் கல்விக்கான உபகரணங்களோ ரீசார்ஜ் வசதி செய்ய பொருளாதார வசதியோ இல்லாததுதான் . அதைத் தீர்க்கும் வகையில் இந்தக் கல்வி ரேடியோ செயல்படுகிறது. அதோடு நாள் முழுவதும் அலைபேசியின் திரையைப் பார்த்து கற்றலில் ஈடுபடுவதால் ஏற்படும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ரேடியோ மூலம் வழங்கப்படும் கல்வியில் இருக்காது. படிக்கிறோம் என்று ஃபோனை வைத்துக் கொண்டு ஏராளமான குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவது, பாலியல் சம்பந்தப்பட்ட இணைய தளங்களைப் பார்த்து தடம் மாறுதல் போன்ற வேறு சில பிரச்சினைகள் எழாது.


ஒலிபரப்பப்படும் பாடங்கள் குறித்து கூறுங்கள்..
பாடப்புத்தகங்களில் தரப்பட்டுள்ள பாடங்கள் கால அட்டவணைப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒலிபரப்பப்படுகிறது. அவை மட்டுமின்றி கதைகள், திருக்குறள், நன்னடத்தைக் கருத்துகள், பழமொழி, மதிப்புக் கல்வி என அனைத்தும் தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மாணவர் பங்கு பெறும் பகுதியும், மாலை 6 மணிக்கு ‘மின்மினிகள் மின்னும் நேரம்’ என்று அவர்கள் பேசி அனுப்புவதும் ஒலிபரப்பப்படுகிறது. இது மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமைகிறது. உற்சாகமாகப் பேசி அனுப்புகின்றனர்.
மேலும் சில செய்திகள்
மாணவர் உடல் நலம் பாதுகாக்கப்படுவது போலவே மன நலமும் இந்த ரேடியோவில் கற்பித்தல் முறையால் பாதுகாக்கப்படுகிறது. கேட்டல் திறன்தான் பிரதானம். கவனிக்கும் திறன் அதிகமாகிறது. ஆனால் அடிப்படைத் திறன்கள் அனைத்தும் பயிற்சியின் வழியே கொண்டு வரலாம். இடையிடையே விளம்பரங்கள் எதுவும் கிடையாது.
ஒலிபரப்பைக் கேட்கும்போது ஒலி அளவை அதிகமாக வைத்து வேறு வேலைகளைச் செய்து கொண்டு பாடல்கள் கேட்பது போல பாடங்களைக் கேட்கின்றனர். பெற்றோரும் கவனிக்க, கேட்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே இது பாதுகாப்பான கற்றலும் கூட. வாய்ப்புள்ள பெற்றோர்கள் மாணவருடன் சேர்ந்து பாடங்களைக் கேட்பதால் ஹோம் ஒர்க் செய்யும்போது மாணவர்களுக்கு பெற்றோர் உதவும் வாய்ப்பும் உண்டு. மேலும் இதில் ப்ளே லிஸ்ட் என்ற பகுதியை உருவாக்கி ஒலிபரப்பாகும் பாடப் பொருட்களை சேமித்து வைக்கும் வசதி உள்ளதால், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பக் கேட்க முடியும். பெற்றோர் தரப்பிலும் இந்த முறையில் கற்றல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்வித் துறையின் கவனத்திற்குச் செல்ல வேண்டும்
கல்வித்துறையின் ஒத்துழைப்பு கிடைத்தால் நுட்பமான திட்டமிடலுடன் அனைத்துத் தரப்புக் குழந்தைகளுக்கும் அடிப்படையான கற்றலை எடுத்துச் செல்ல முடியும். கால அட்டவணை மட்டும் மாணவர்கள் கையில் இருந்தால் போதுமானது. ஆன்லைன் கல்வி ரேடியோவைப் பொறுத்தவரை மலைப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் தடையில்லாமல் கிடைக்கும் என்பதால் மிகக் குறைவான சிக்னலே போதுமானது. அனைத்து மாணவர்களையும் கற்றல் சென்றடையும். கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் ஆசிரியர்கள் கற்பித்தலைத் தொடர, வலுவூட்ட, ஆர்வமூட்ட எனப் பல வழிகளில் கல்வி ரேடியோவைப் பயன்படுத்தலாம். நாங்கள் தற்போது 1 – 8 வகுப்புகளுக்கு தொகுப்பாக நிகழ்வுகளைத் தருகிறோம். கல்வித்துறை வழியாக நாம் இதை முன்னெடுத்தால் தனித்தனியாக ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தனித்தனி வகுப்புகளுக்கு மிகவும் ஆழமான கற்றல் பொருட்களை சிறப்பான முறையில் உருவாக்கித் தர இயலும்.
கொரோனா தாக்கம் பல புது முயற்சிகளைச் செய்ய பல்வேறு தளங்களில் மனிதர்களை முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர் கார்த்திக் ராஜாவும் அவரது குழுவினரும் கல்வித் துறையில் செய்துள்ள இந்த முயற்சி ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கற்றலுக்குள் கொண்டு வந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கல்வித்துறை கல்வி ரேடியோ முறையை சுவீகாரம் செய்து கொள்வது அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –
[email protected] – 99769 86098)
——————————————————————–
எப்படிச் சொல்வேன் ?!
வீட்டின் கொல்லைப்புறம்
துவைக்கும் கல் ஓரம்
தினமும் வைக்கும் கைப்பிடிச்சோறு,
கடந்த சிலநாட்கள்
இல்லையென்பதை,
தினமும் வந்து பார்த்து
ஏமாந்து திரும்பும்
அணிற்பிள்ளையிடம்…

பெருந்தொற்றுப் பரவலில்,
வேலையிழந்து வீட்டில் முடங்கி
உலை வைக்க இயலாத
என் பட்டினிக்கதையை
எப்படிச் சொல்வேன்.?!…
வி.சகாயராஜா (97904 71009)

Spread the love