September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ரெட் இங்க்

சிறுகதைத் தொகுப்பு – வெளியீடு: பாரதி புத்தகலாயம், விலை : ரூ.95/-
வகுப்பறை ஜனநாயகத்தை மையப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பு. தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் சக.முத்துக்கண்ணன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ரெட் இங்க்’ மூலம் சிறுகதை இலக்கியம் என்னும் பெருநதியில் சங்கமமாகியுள்ளார். பத்தே சிறுகதைகள் என்றாலும் ஆயிஷா நடராஜன் குறிப்பிடுவது போல் நம்மைப் பதறடிக்கும் சிறுகதைகள்.கதவுகளைத் திறக்கும் கதைகள்; வகுப்பின் கதவையும், பிஞ்சுகளின் மனக் கதவுகளையும்’ என்று ச.மாடசாமி குறிப்பிடுகிறார்.
வாசகர்களின் நெஞ்சக் கதவுகளையும் திறக்கும் கதைகளையே சக.முத்துக்கண்ணன் படைத்துள்ளார். வெள்ளைப்பூக்கள்’ கதையில் வரும் தாச்சி போல ஊருக்கு ஊர் ஒருத்தி இருக்கத்தான் செய்கிறாள் என்று சிறுகதைச் சிற்பி வண்ணதாசனின் மெச்சுதலைப் பெற்றுள்ளார் சக.முத்துக்கண்ணன்.அவனே சொல்லட்டும்’ சிறுகதை, ஆசிரியர்- மாணவர் உறவின் உன்னதத்தை உணர்த்திடும் கதை. சிறுவனின் வளர்ச்சி அடையாத வலது காலை தனது மடியில் வைத்து எண்ணெய் தேய்த்து நீவும் ஆசிரியரின் அன்பிற்கிணை ஏதும் உண்டோ? ஏன் டீச்சர் எங்களைப் பெயிலாக்கினீங்க என்று இத்தாலியச் சிறுவர்கள் கேட்கும் அதே கேள்வியை நீலப்பந்து’ கதையில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன் ராசாவின் பாட்டி கேட்கிறார். ராசாவை நான்காம் வகுப்பில் ஃபெயிலாக்கி பள்ளியிலிருந்து அநியாயமாக விரட்டிவிடுகிறார்கள். ஆம்; ரெட் இங்க் கொண்டு தேர்வுத்தாளைத் திருத்துவது என்பது பள்ளியை விட்டு துரத்துவதாக அமைந்து விடுகிறது. குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்தின் கொடூரத்தைச் சித்தரிக்கிறடிராப் அவுட்’ சிறுகதையில் சிறுவன் கார்த்திக் சந்திக்கும் துயரம் நெஞ்சைப் பிளக்கவைப்பதாகும். வகுப்பறை வன்முறை குழந்தைகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை ஜெயந்தி டீச்சர் கதை சித்தரிக்கிறது. தொடர்ந்து கதைகள் படைத்திட வேண்டும் என சக.முத்துக்கண்ணனை புதிய ஆசிரியன் இதழ் வாழ்த்துகிறது.
-பெ.விஜயகுமார்

Spread the love