September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ராஜபக்சேக்களின் வீழ்ச்சி

தேசிய வாதத்திற்கும் கூட ஒரு எல்லை உண்டு என்பதைத்தான் இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் ராஜினாமா உணர்த்துகிறது . கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற அவருடைய குடும்ப ஆட்சிக்கு எதிராகவும், நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு அரசியல் முத்திரையின் வீழ்ச்சியைக்  குறிக்கும் வகையிலும் வெடித்துக் கிளம்பிய மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியாக வன்முறை காட்சிகளுக்கு இடையில்தான் இது நடந்துள்ளது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தேசிய வீரன் என பெரும்பான்மை சிங்களவர்களால் போற்றப்பட்ட ராஜபக்சே தன்னுடைய பாதுகாப்புக்காக அவருடைய இல்லம் டெம்பிள் ட்ரீயை விட்டு வெளியேறி ஓட வேண்டியதாகிவிட்டது. இந்த அளவுக்கு மக்கள் திரண்டெழுந்து தன் ஆதரவு தளத்தையே மாற்றி அமைப்பார்கள் என அவர்  கற்பனை கூட செய்திருக்க முடியாது.
உணவு ,எரிபொருள் பற்றாக்குறை மற்றும்  அதன் கடும் விலை உயர்வால் அதனை விநியோகிக்க முடியாத நிலையால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோத்தபய உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகிக்கும் அனைத்து ராஜபக்சேக்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்த உதவிகள் மற்றும் மீட்பு நிதிகளின்  உதவியுடன் நாடு நெருக்கடியை சமாளிக்க முயன்றனர். போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கிய பிறகுதான் ஜனாதிபதி தன் மூத்த சகோதரரை பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிட வற்புறுத்தியிருக்கிறார். பிரதமரின் ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் மக்கள் உயிரிழப்புகள், படுகாயம் என்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்சேக்களின் பூர்வீக வீடுகள் உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்களின் இல்லங்கள் கலவரக்காரர்களால் குறிவைத்து தாக்கப்பட்டன. தீயிட்டு எரிக்கப்பட்டன.
மகிந்தாவின் ராஜினாமா மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை . அரசியல் ஸ்திரமற்ற தன்மை தொடர்கிறது. பிரதமராக பதவி ஏற்கும் எவரும் மக்கள் நம்பிக்கையை பெற்றவராக இருப்பதோடு நாட்டையும் நெருக்கடியிலிருந்து மீட்பவராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற ஒருவரை ஜனாதிபதி கோத்தபய தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியுடன் தொடர்புடைய எவரையும் தற்போதைய கோபமான நிலையில் மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோத்தபய ஜனாதிபதியின் கீழ் வரும் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பை ஏற்கனவே நிராகரித்துள்ளார். 3.50 பில்லியன் டாலர் அளவிற்கு உதவியை வழங்கிய இந்தியா இனி எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை இந்தச் சூழல் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆதரவை இழந்த ஒரு அரசிற்கு மேலும் தங்கள் ஆதரவைத் தொடரவும் முடியாது.. அதே சமயம் பற்றாக்குறைகள் நீடிப்பால் துயருறும் மக்களுக்கு உதவிகள் அனுப்புவதை நிறுத்தவும் முடியாது.
“இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் ஜனநாயக செயல் முறைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இலங்கை மக்களின் சிறந்த நலன்கள் எங்களை என்றும் வழிநடத்தும்” என்று இந்தியா அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தற்போதைய ஆட்சிக்கு அரசியல் ஆதரவு என்பதை காட்டிலும் மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதை இது வெளிப்படுத்துகிறது.
மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் ஒரு சூழ்நிலையில் தசை வலிமையை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தேசியவாதமும் பெரும்பான்மைவாத அணி திரட்டலும் என்றைக்குமே முடிவில்லாத ஒரு ஆதாரமாக நீடிக்காது என்பதே ராஜபக்சே மாதிரியானவர்களின் அழிவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி.

-மே 11 தி இந்து தலையங்கம் (தமிழில் கடலூர் சுகுமாரன்)

Spread the love