September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

யூ ட்யூப் ப்ரூட்டஸ்!

டாக்டர் ஜி. ராமானுஜம்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எல்லாம் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ தெரிந்து கொள்வார்கள்.
இப்போதெல்லாம் பால் காய்ச்சுவதிலிருந்து, பாம் செய்வது வரை எல்லாவற்றையும் யூ ட்யூப் வீடியோவைப் பார்த்தே கற்றுக் கொள்கின்றனர். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு லிங்க் கேட்கிறார்கள்.
அந்தக் கோவிலில் பொங்கல் பிரசாதம் நன்றாக இருக்கும் என்றால் ‘லிங்க் இருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள்.
அலுவலகத்தில் ‘இன்னிக்கு மேனேஜர் நம்ம சுந்தரத்தை கடும் ரெய்டு விட்டார். நீங்க பாக்காமப் போய்ட்டீங்களே!’ என்றால் அதற்குக் கூட’ யூ ட்யூப் லிங்க் இருக்கா?’ என்கிறார்கள்.
கொரோனா காலத்தில் கல்வியும் யூ ட்யூப் மூலமாகவே நடைபெற்றது. பாடங்களை வீடியோவாக எடுத்து லிங்க்கை அனுப்பி வைப்பதுதான் வகுப்பாக நடைபெற்றது. நீண்ட கால லாக்டவுன் முடிந்து நேரடியாகப் பள்ளிக்குச் சென்றது குழந்தை ஒன்று. ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது காற்றில் விரல்களை நீட்டி எதையோ துழாவிக் கொண்டிருந்தது. ‘என்ன செய்கிறாய்?’ என ஆசிரியை கேட்டதற்கு ‘க்ளாஸ் புரியல, அதான் யீயரளந பண்ணிட்டு ரீவைண்ட் பண்ணிப் பார்க்கறேன்’ என்றதாம் குழந்தை.
இன்று எல்லோருமே ஆளுக்கொரு யூ ட்யூப் வீடியோ சேனல் துவங்கி எதையாவது செய்து காட்டி அல்லது பேசி வீடியோ போட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் பிச்சைக்காரர் ஒருவர் சிக்னலில் கார் நின்றபோது கதவைத் தட்டினார். ‘சில்லறை இல்லையே’ என்றதற்கு ‘அதெல்லாம் வேண்டாம் சார். என்னோட யூ ட்யூப் சேனல் இதான். அதற்கு சப்ஸ்க்ரைப் செய்து பாருங்கள். ஆட்டோமேட்டிக்காக எனக்குப் பணம் கிடைக்கும்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.
இப்படியே போனால் பத்து வருடங்கள் கழித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் ” எதிர்காலத்தில் என்ன ஆக விரும்பறீங்கன்னு கேட்டா நீங்க எல்லாருமே யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றீங்க. அதைப் பார்க்கறதுக்கு ஆள் வேண்டாமா? யாராச்சும் டாக்டர், இஞ்சினியர்னு படிக்கப் போறேன்னு வித்தியாசமா சொல்லுங்களேன்!!” எனச் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
கூட்டங்கள் பலவும் ஆன்லைனில் நடக்கின்றன. முன்புபோல் வெளியூர் போனேன், ட்ராஃபிக் ஜாம் என்றெல்லாம் சாக்கு சொல்ல முடியாது. எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டால்கூட ‘கேட்டார் பிணிக்கும் தகையவாம் கேளாரும் யூ ட்யூப்பில் பார்ப்பதாம் சொல்’ என்கிற புதுக்குறளுக்கு ஏற்ப கூட்டத்தின் மூன்றரை மணி நேர வீடியோவை அனுப்பி வைப்பார்கள்.
அதிகமான மக்கள் பார்ப்பது சமையல் வீடியோக்கள்தான். வெண்டைக்காய் செய்வதிலிருந்து வெந்நீர் போடுவது வரை எல்லாவற்றுக்கும் யூ ட்யூபே சரணம். அழகு நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் வசீகரமான பொலிவான முகங்களின் படங்கள் இருக்கும். அதை நம்பி உள்ளே சென்று வெளியே வருபவர்கள் முகம் ஆதார் அட்டையில் இருப்பதுபோல் அலங்கோலமாக ஆகியிருக்கும். அதுபோலத்தான் சமையல் வீடியோவில் காட்டப்படும் பண்டங்கள் ‘காதல் பரிசு’ திரைப்பட கமல்ஹாஸன் போல் அழகாக இருக்கும். ஆனால் அதைப் பண்ணிப் பார்க்கும்போது குற்றுயிரும் குலையுயிரும் ஆகி ‘குணா’ கமல்ஹாஸன் போல் ஆகி விடும்.
யூ ட்யூபைப் பார்த்துக் கொண்டே அறுவைசிகிச்சை செய்வதை விட அபாயகரமானது வீடியோ பார்த்துக் கொண்டே சமையல் செய்வது. சிலசமயம் பண்டங்களைப் பாதி செய்து கொண்டிருக்கும்போதே நெட் சிக்னல் இல்லாமல் போய்விடும். அதிலும் பீர்க்கங்காய் பிரியாணி, பிரண்டை அல்வா போன்று வழக்கமான சிலபஸ்சிலேயே இல்லாத ஐட்டங்களைச் செய்யும்போது. எப்படியோ தீப்பிடிக்கும் முன் அணைத்து விடுவோம்.
தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியைக் கட்டிப் போட்டு டைம் பாமையும் வைத்திருப்பார்கள். அருகிலேயே பாலகிருஷ்ணாவையும் கட்டிப் போட்டிருப்பார்கள். பாம் வெடிக்கச் சில நானோ வினாடிகள் மீதம் இருக்கையில் பாய்ந்து பல்லால் ஒயர்களைக் கடித்து வெடிகுண்டைப் புஸ்வாணம் ஆக்குவார் பாலகிருஷ்ணா. அது போல இருக்கும் நமக்கு.
அது மட்டும் அல்ல. இந்த யூ ட்யூப் வீடியோக்கள் எல்லாம் படு நீ…ளமாக இருக்கின்றன. அதிக நேரம் பார்த்தால்தான் அதிக வருமானம். அதனால் ஜவ்வாக இழுக்கின்றனர். ஒரு விஷயத்தைச் சட்டுன்னு சொல்லாம நீ..ட்டி முழக்குகிறார்கள்.
‘கொழுக்கட்டை செய்வது எப்படி ?’ என்ற வீடியோ பார்த்தால் பிள்ளையார் உருவான கதை, புராணம் எல்லாம் சொல்லிவிட்டு வணக்கம் போடுவதற்குக் கொஞ்சம் முன்தான் கொழுக்கட்டைக்கு வருகிறார்கள்.
‘நீராகாரம் செய்வது எப்படி’ என்ற பதினைந்து நிமிட வீடியோவில் அரிசியின் வரலாறு பதிமூன்று நிமிடம், சோறு வைப்பது பற்றி ஒண்ணே முக்கால் நிமிடம் சொல்லிவிட்டு.. கடைசி பத்து நொடிகளில் ‘இந்தச் சோற்றில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் காலையில் பார்த்தால் யம்மி நீராகாரம் ரெடி’ என்கிறார்கள்.
அதிலும் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல் யூ ட்யூப் நிறுவனம் ‘உங்கள் வீடியோவுக்கு நிறைய விளம்பரங்கள் வேண்டுமா? இவ்வளவு ரூபாய் கட்டி ப்ரீமியம் அக்கவுண்டுக்கு மாறுங்கள்’ என்று ஒரு புறம் சொல்கிறது. இன்னொரு புறம் ‘நீங்கள் பார்க்கும் வீடியோ விளம்பரங்கள் இல்லாமல் வர வேண்டுமா, அதற்கு இவ்வளவு ரூபாய் கட்டுங்கள்’ என்றும் சொல்கிறது.
இது போல் வீடியோ தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று தேடினால் அதற்கும் பல வீடியோக்களை வைத்திருக்கிறது.
அதெல்லாம் இருக்கட்டும். என்னுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீர்கள்!( யூ டூ ப்ரூட்டஸ் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது)
(9443321004 – [email protected] )

Spread the love