August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

யாருடைய குற்றம்?

லோ. விக்னேஷ்


அன்று பள்ளியின் ஸ்டாஃப் ரூம் முழுக்க ஒரே பரபரப்பு… ஆள் ஆளுக்குத் தத்தம் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.
“இதுங்கள்ளாம் எங்க படிக்க வருதுங்க? மாத்தி மாத்தி பொண்ணுங்க பின்னாடியும் பசங்க பின்னாடியும் சுத்துறதுக்குனே வருதுங்க… சனியனுங்க வெளியே போய் ஏதாவது பண்ணித் தொலைக்கட்டும். எவ்வளவு தைரியம் இருந்தா ஸ்கூல்லயே இந்த வேலையைப் பார்த்திருப்பாங்க?”
“இதுங்க வீட்ல இருந்து ஆளுங்கள வரச்சொல்லி டிசி கொடுத்து அனுப்ப வேண்டியதுதான் முதல் வேலை.”
இப்படி ஒவ்வோர் ஆசிரியரும் தங்களது ஆகச் சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்க, குழலி டீச்சர் மட்டும் நிதானமாக பேசத் தொடங்கினார்…
“மேடம் பிளீஸ், சார் கொஞ்சம் இருங்க..எல்லாரும் கொஞ்சம் நிதானமா யோசிங்க.

அவங்க ரெண்டு பேருமே பதினோராம் வகுப்பு படிக்கிற பசங்க… அவங்களுக்கு அவ்வளவுதான் புரிதல் இருக்கும். நம்ம மாதிரி இல்லையே? இதை எல்லாம் கடந்துதானே நாம வந்திருக்கோம்? அவங்கள கூப்பிட்டு உட்கார வச்சு வெளிப்படையா இந்த விஷயத்தைப் பத்திப் பேசிப் புரிய வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு. நாம ஏன் அதை செய்யக்கூடாது?”


உடனே ஆசிரியர் ஒருவர், “சும்மா இருங்க மேடம், அவங்க உங்க கிளாஸ் பசங்கன்னு காப்பாத்தப் பாக்காதீங்க. இன்னைக்கு இத சும்மா விட்டா எல்லா பசங்களும் இப்படியே கிளம்பிடுவாங்க. அவங்க வீட்டுக்கு சொல்லி இருக்கு.. வரட்டும், இனி இந்த மாதிரி எதுவும் நடக்காத மாதிரி பண்ணுவோம்”.


உடனே குழலி டீச்சர், “எப்படி சார் நடக்காம இருக்கும். நாம தான் கிளாஸ்ல பாலியல் கல்வின்னா என்னன்னே சொல்லித்தரதில்லையே? பசங்க பொண்ணுங்க கிட்ட பேசக்கூடாது, பொண்ணுங்க பசங்க கிட்ட பேச கூடாதுன்னு தானே ரூல்ஸ் போட்டு வச்சிருக்கோம்? அப்ப இப்படித்தான் நடக்கும். சொல்லப்போனா இதுக்கு நாமதான் பொறுப்பு என்றார்.


அதற்குள் ஆசிரியர்கள் அறைக்குள் வந்த தலைமை ஆசிரியர், “அந்த ரெண்டு கழுதையும் எங்க?” என்றார். “கிளாஸ்ல படிச்சிட்டு இருக்காங்க சார்” என்று குழலி டீச்சர் சொன்னதும், “அதுங்களுக்கு படிப்பு ஒரு கேடா? என் ரூம் வாசல்ல வந்து நிக்கச் சொல்லுங்க” என்று கடுகடுப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார். ஈஸ்வரியும் ராஜூவும் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர்.

ராஜூவுக்கு ஈஸ்வரி மீது மிகுந்த பிரியம். அவளோடு நட்பாக இருக்க அவனுக்கு மிகுந்த ஆசை. தான் அவளை காதலிப்பதாக அவனே நினைத்துக் கொண்டான். ஈஸ்வரி நன்கு படிக்கும் மாணவி, அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுபவள். ராஜூவும் நன்கு படிப்பவன்தான்.


ராஜூ, தான் காதல் என்று நினைத்துக் கொண்டிருந்ததை, நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்தைக் கிழித்துக் கடிதமாக எழுதி ஈஸ்வரியிடம் தண்ணீர் அருந்தும் இடத்தில் கொடுத்தான். ஈஸ்வரியும் என்னவென்று புரியாமல் பெற்றுக் கொண்டாள். திடீரென்று ஒரு கரம் ஈஸ்வரியின் கையில் இருந்து அதைப் பிடுங்கியது. பி.டி. சாரைப் பார்த்ததும் ராஜூவுக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவர் அதைப் பிரித்துப் பார்த்துப் படித்ததும் ராஜூவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஈஸ்வரி பதறிப் போனாள். பிறகு நடந்ததுதான் எல்லாம்.


விஷயம் கேள்விப்பட்டுப் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், தத்தம் பிள்ளைகளை சரமாரியாகப் போட்டு அடித்தனர். எதுவும் செய்ய முடியாமல் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் குழலி டீச்சர். தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றபோது ஈஸ்வரி, ராஜூ, அவர்களது பெற்றோர்கள் எல்லோரையும் சரமாரியாக திட்டித் தீர்த்துவிட்டு, “இவங்களை தண்டிக்காமல் விட்டால் இந்த பள்ளிக்கூடமே கெட்டுவிடும். இவர்களை வீட்டிற்கு அழைச்சிட்டுப் போங்க” என்றார். ‘பொம்பளப் புள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு சொன்னனே கேட்டியா?’ என்று ஈஸ்வரியின் அப்பா அவள் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.


ராஜூவின் பெற்றோர் தலைமை ஆசிரியர் காலில் விழச் சென்றபோது பி.டி. சார் தடுத்தார். “இந்த ஒரு முறை மன்னிச்சு விட்ருங்க சார். இவங்க அப்பா சென்ட்ரிங் வேலைக்கு போய், கையெல்லாம் காப்பு காச்சி வரது இவன் படிக்கணும்னுதான் சார்” என்று அழுது புலம்பினார் ராஜூவின் அம்மா.


ஈஸ்வரியின் பெற்றோரோ, ‘நீங்க டீசி கொடுங்க சார். எங்க புள்ளைக்குப் படிப்பெல்லாம் தேவையில்லை. இந்த அவமானமே எங்களுக்கு போதும்’ என்று கூறிவிட்டு ஈஸ்வரியை அழைத்துச் சென்றனர். ராஜூ நாள் முழுக்க, தலைமை ஆசிரியர் அறைக்கு முன் முட்டி போட்டபடியே இருந்தான்.


ஒரு வாரம் கழிந்தது. குழலி டீச்சர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில், மிஸ்.. என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஈஸ்வரி நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவள் பழைய ஈஸ்வரி அல்ல. புடவை கட்டி நெற்றியில் பெரிய பொட்டும், கழுத்தில் மஞ்சள் பூசிய தாலியுமாக முற்றிலும் வேறு ஒரு ஆளாக மாறி இருந்தாள்.
‘மிஸ், எப்படி இருக்கீங்க?’ என்றதும்தான் குழலி டீச்சர் நிதானத்திற்கு வந்தார்.

“டீச்சர்! எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அந்த பிரச்சனை நடந்து அஞ்சாவது நாளே எங்க வீட்ல எனக்கு எங்க மாமா பையன கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. எனக்குத் திரும்பவும் ஸ்கூலுக்கு யூனிஃபார்ம் போட்டு வந்து பெஞ்சில உக்காந்து படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு மிஸ், இனிமே அது முடியாதில்ல?” என்றதும் நெஞ்சம் உடைந்து நொறுங்கியதாய் உணர்ந்தார் குழலி டீச்சர்.


‘மிஸ் உங்கள ஒண்ணு கேக்கலாமா?’ என்றாள் ஈஸ்வரி.
‘கேளுமா!’
“படிக்கிற வயசுல ஸ்கூல்ல லவ் லெட்டர் கையில வாங்குனா தப்பு. அதே படிக்கிற வயசுல வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டா தப்பில்லையா மிஸ்? இது ஒண்ணுதான் எனக்கு புரியவே மாட்டேங்குது மிஸ். ஏன் மிஸ் இப்படி நடக்குது?”என்றதும் தேக்கி வைத்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், ஈஸ்வரியைக் கட்டிப்பிடித்து அழுதார் குழலி டீச்சர்.


சற்று தூரத்தில் இருந்து ஈஸ்வரியின் கணவன் இருசக்கர வாகனத்தில் இரண்டு முறை ஒலியை எழுப்பியதும், ” நான் போகணும் மிஸ், இதுக்கப்பறம் எப்ப பாப்போம் தெரியல. அடுத்தவாட்டி பாக்கும்போது பேசலாம் மிஸ், பை மிஸ்” என்று சொல்லி விடைபெற்றுப் போனாள் ஈஸ்வரி, வழியெல்லாம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.
ஒரு வழியாக வகுப்பறைக்குள் வந்த குழலி டீச்சர், கரும்பலகையைச் சுத்தமாக அழித்துவிட்டு, பலகையின் நடுவில் சாக்பீசால் ‘பாலியல் கல்வி’ என்று பெரிதாக எழுதிவிட்டு, மாணவர்களிடம் உரையாடலைத் தொடங்கினார்.

(9087658942 – [email protected])

Spread the love