September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மொழி உரிமை-மாநில உரிமைகள்

பிரதமர் மோடி மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று பேசுகிறார். சர்க்கரை என பேப்பரில் எழுதி வைத்திருந்தால் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு தயாரில்லை. தமிழ் மொழியின் மீது மோடிக்கு உண்மையிலேயே பாசம் இருந்தால் உயர்நீதிமன்ற வழக்காடுமொழியாகத் தமிழைக் கொண்டு வந்திருக்கலாமே? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்றுத் தர மறுப்பது ஏன்? மோடியின் உள்ளத்தில் இருப்பது சமஸ்கிருதத்தைத் திணிப்பதுதான். சமஸ்கிருதத்தை நேரடியாகத் திணிக்க முடியாத சூழலில் இந்தியை முதலில் திணிக்கின்றனர். பின்னர் சமஸ்கிருதம் திணிக்கப்படும்.
பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் எட்டு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு இடமில்லை என்பது அநீதி. இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இங்கே சாமானியர்களுக்குப் புரியாத ஆங்கிலத்தில்தான் வழக்காடுகின்றனர். அவர்களுக்கு நீதிபதி தமது வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினார் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள இயலாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 24 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. அங்கு எந்த மொழியில் வழக்குத் தொடர்ந்தாலும் அந்த மொழியில்தான் வழக்கு நடைபெறும். தீர்ப்பும் அந்த மொழியில் வழங்கப்படும். அந்த நடைமுறையை இந்திய ஒன்றியத்தில் கொண்டுவர எது தடையாக இருக்கிறது?
ஒரு மாநிலத்தின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாத தேர்தல் ஆணையம், ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்தத் தயார் என்கிறது. பாஜக-வைப் பொறுத்தவரை தேர்தல் என்று வந்துவிட்டால், அவர்கள் முதலில் கூட்டணி அமைப்பது தேர்தல் ஆணையத்திடம்; இரண்டாவது கூட்டணி அமலாக்கப் பிரிவிடம்; மூன்றாவதாகத்தான் அதனிடம் அடிபடியத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளிடம் கூட்டணி குறித்துப் பேசுவார்கள்.
பாஜக தனது இலக்கை அடைய எத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையிலும் ஈடுபடத் தயங்காது. ஒரே நாடு-ஒரே தேர்தல் என வந்துவிட்டால் அப்போது, மாநிலப் பிரச்சனைகள் குறித்து, மாநில உரிமைகள் குறித்துப் பேசப்படாது. பேசக்கூடாது. இந்திய அரசியல் சட்டம் தூக்கி வீசப்படும். பின்னர் மாநிலங்களுக்குத் தேர்தலே தேவையில்லை எனக் கூறி மாநிலங்களைப் பல துண்டுகளாகச் சிதைத்து அதைக் கண்காணிக்கும் பொறுப்பை பாஜக-ஆர்எஸ்எஸ் ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இது மோடியின் விருப்பம் அல்ல; ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பம்.
இதற்கு எதிராகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்..
-பேராசிரியர் அருணன்

Spread the love