September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மொழிகளின் சமத்துவமே இந்தியாவுக்குப் பெருமை..!

மதுக்கூர் இராமலிங்கம்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசனுக்கு ஒன்றிய அமைச்சரிடமிருந்து ஒரு கடிதம் இந்தி மொழியில் வந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அவரவர் தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவர் பதில் எழுதினார். ஒன்றிய அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஒன்றிய அமைச்சரின் செயல் குறித்து வழக்குத் தொடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் அவரவர் தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். நீதிமன்றமும் அவரது கோரிக்கை நியாயமானது என ஏற்று, ஒன்றிய அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, ஒரு கடிதம் எழுதினார். அதுவும் இந்தியில் இருந்தது, இந்த அடாவடித்தனத்தை எப்படிப் புரிந்து கொள்வது..? முன்பு ஒருமுறை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆங்கிலத்தில் இருந்தது என்று சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது ஒன்றிய அமைச்சரின் செயலும். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இந்தி மொழித் திணிப்பு என்பதை ஒரு தலையாய பணியாகவே தொடர்ந்து செய்து வந்துள்ளனர். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழியைவிட தீவிரமாக சமஸ்கிருத மொழித் திணிப்பில் முனைப்பாக உள்ளனர். புதிய கல்விக்கொள்கையிலும்கூட தாய்மொழிவழிக் கல்வியைத் தள்ளி வைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசுவது இயல்பானதாகி விட்டது. இந்தி மொழி என்பதுகூட ஒரு இடைக்கால ஏற்பாடுதான் என்பதும் சமஸ்கிருத மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்பதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாடு. அதைத்தான் சிரமேற்கொண்டு மோடி அரசு செய்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்களும்கூட இந்தியில் இடம்பெறத் துவங்கிவிட்டன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிற குறுஞ்செய்திகள் கூட இந்தியில் உள்ளன. ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்காக அனுப்பப்படும் செய்தியை, சம்பந்தப்பட்ட அவர் புரிந்து கொள்ள முடியாத வகையில் அனுப்புவது எவ்வளவு பெரிய கொடுமை! அண்மையில் கூட உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் ஒன்றிய அரசின் அலுவல் மொழி மட்டும்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தி மொழியை திணிக்கத் துடிப்பவர்கள், இந்திதான் தேசிய மொழி, அதை படிப்பதில் உங்களுக்கு என்ன கேடு என்று கேட்கிறார்கள். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை வடமாநிலங்களிலிருந்து தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களுக்கு வேலைதேடிவந்துகுவியும்இளைஞர்களின்எண்ணிக்கை தவிடுபொடியாக்குகிறது. தேவையையொட்டி எந்தவொரு மொழியையும் படிப்பதில் தவறும் இல்லை, தடையும் இல்லை. வடமாநிலங்களுக்கு பணிக்குச் செல்லும் தமிழக இளைஞர்கள் எளிதாக இந்தியை கற்றுக் கொள்கின்றனர். இங்குள்ள இந்தி பிரச்சார சபாக்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக மக்கள் பலர் இந்தி கற்றுக்கொள்ளத் தயங்குவதே இல்லை. வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்பவர்கள் அங்குள்ள மொழியை கற்றுக் கொள்கின்றனர். அதேபோல, தமிழகத்திற்கு பணி நிமித்தமாக வரும் இளைஞர்கள் எளிதாக தமிழை பேசுகின்றனர். இதுதான் இயல்பானது.
ஆனால், இந்தி-இந்து-இந்தியா என்ற கோட்பாடு ஆபத்தானது. ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது பாரதியின் வாக்கு. பல்வேறு மொழிகள் பேசப்படுவது, பல்வேறு பண்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு. இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகளாகக் கருதப்பட வேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகபூர்வமானது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கக் கூடியது. இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படாதது கண்டனத்திற்குரியது.
நூற்றாண்டு கண்டுள்ள பொதுவுடமை இயக்கத் தலைவர் என்.சங்கரய்யா, இராஜாஜி தலைமையிலான அன்றைய சென்னை மாகாண அரசுப் பள்ளிகளில், இந்தி மொழித் திணிப்பை மேற்கொண்டதை எதிர்த்து, தன்னுடைய மாணவப் பருவத்தில் கருப்புக் கொடி காட்டியதன் மூலம்தான், தன்னுடைய பொது வாழ்வை துவக்கினார். அவர் பேசும் அனைத்து மேடைகளிலும் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக விளங்க வேண்டும்.. அன்னைத் தமிழை அரியணை ஏற்ற வேண்டும் என்று முழங்கத் தவறியதில்லை. 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையிலான அரசு, ஆட்சி மொழிச்சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து போது, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வுகளை அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் திருத்தம் கொடுத்தார். அதன் தேவை இன்று வரை உணரப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் தமிழக மாணவர்களுக்கு இந்தியிலேயே தரப்பட்டது. மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஆங்கிலத்தில் தரப்பட்ட வினாத்தாளில் பிழையான மொழிபெயர்ப்பு இருந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தோழர் டி.கே.ரங்கராஜன் வழக்குத் தொடுத்தார். அவரது வழக்கின் நியாயத்தை நீதிமன்றம் ஏற்றபோதும், மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பிரதமர் இந்தி மொழியிலேயே பேசியிருக்கிறார். அதன்பின் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழில் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்துதான் பிரதமரும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் 47 ஆண்டுகளாக இயங்கிவருகிற தமிழ் இருக்கை, எலோனியன் பல்கலைக்கழகத்தில் இயங்கிவருகிற மற்றொரு தமிழ் இருக்கை ஆகிய இரண்டில் ஏழு ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர்கள் நியமனம் இல்லை. மோடி பேசும்போது தமிழையும் திருக்குறளையும் ஓகோவெனப் பாராட்டிப் பேசுவார். அத்தனையும் நடிப்பு. தமிழ், தமிழர் வெறுப்பினை அடிநாதமாகக் கொண்டு இயங்கி வருபவைதான் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும். மூன்று சம்ஸ்கிருத நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. தமிழ் உட்பட ஐந்து செம்மொழிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை மொத்தம் 29 கோடி ரூபாய் மட்டுமே. அதே மூன்றாண்டுகளில் சம்ஸ்கிருதத்திற்கு செலவழித்த தொகை 643 கோடி ரூபாய். 130 கோடி மக்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே சமஸ்கிருதத்தை தங்கள் தாய்மொழி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தமிழகத்தில் பாஜகவினர், குறிப்பாக தமிழகத்தில் குடியேறியுள்ள வடமாநிலத்தவர்கள், இந்தியில் முழக்கங்களை எழுப்பினர். மொழி, இன, பண்பாட்டுத் தாக்குதலில் அவர்கள் இப்படித் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். மொழிவழி மாநிலங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சியையும் வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒன்றிய அளவில் அதிகாரக் குவிப்பும் மொழித் திணிப்பும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கும். மொழிகளின் சமத்துவத்திலேயே ஒற்றுமை வளரும் என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளும்போதுதான் இந்திய ஒற்றுமை வலுப்படும்.
(94422 02726 – [email protected])

Spread the love