August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மூன்றாம்வெளி

ச.முத்துக்குமாரி


“டீச்சர் கரட்டாண்டி எப்படி பிடிக்கணும்னு தெரியுமா?”
“கரட்டாண்டினா என்னடா? “
“கரட்டாண்டினா… அதோ அங்க பாருங்க மரத்துல.. தெரியுதா? மரக்கலர்ல இருக்கே!”
“அட ஆமா. அத எங்க ஊர்ல ஓணான்னு சொல்வோம்.”
“இங்க கரட்டாண்டிதான் டீச்சர். “
“டீச்சர்… அவனுக்கு கரட்டாண்டி பிடிக்கறதுதான் வேலையே!” என்றது மற்றொரு குரல்.
“இல்ல டீச்சர்.. சும்மா சொல்லுது..”
“சரி, இங்க வா. கரட்டாண்டி எப்படி பிடிக்கறதுனு சொல்லு” என்றதும் குச்சி, கம்பியைக் கொண்டு தூண்டில் செய்து காட்டினான். கரட்டாண்டி கழுத்தில் எப்படி சுருக்கு போட்டுப் பிடிக்கவேண்டும் என விளக்கினான்.
எனக்கும், என் மாணவனுக்கும் நடந்த உரையாடல் இது. வகுப்பிற்கு வெளியே நடந்தது.
மேலே நடந்த உரையாடல்போல வகுப்பிற்குள் நடக்க வாய்ப்புள்ளதா? அப்படியே நடந்தாலும் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் இப்படி தாங்களாக வெளிப்படுவார்களா? அதற்கான நேரம் வகுப்பறையில் கிடைக்கிறதா?.. என பல கேள்விகள் எழுந்தவாறே உள்ளன. வகுப்பில் குனிந்த தலை நிமிராதவன், பாடத்தில் ஆர்வம் இல்லாதவன் என முத்திரை குத்தப்பட்ட மாணவன்தான் பொறுமையாக ஓணான் வகைகள், அவை ஊருக்குள் அதிகம் இருக்குமிடம், எப்படி பிடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்தான். ஆம். கற்றுத் தந்தான். வேட்டையாடும் திறனும், அதன் நுணுக்கமும் அவனது பேச்சிலும், உடல் மொழியிலும் வெளிப்பட்டது.
கொரோனோ காலத்தில் ஒன்றரை வருடங்கள் மாணவர்களின் நிலை அறிவதற்காக, ‘வீதி வகுப்பறை’ சென்றேன். அங்கு நான் ஆசிரியர் அல்ல, அவர்கள் மாணவர்களும் அல்ல. சக தோழியாக, அவர்கள் பேசும் கதைகளைக் கேட்பவளாக, அவர்கள் விரும்பியதைக் கற்றுத்தரும் வழிகாட்டியாக இருந்தேன். எனக்கு அது புதுப் பரிணாமம். அந்த ‘வகுப்பறை’ அவர்களின் வீடுகளுக்கு அருகில் இருந்தது. வேப்ப மரத்திற்கு அடியிலும், அங்கன்வாடி மையத்திலும் வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். நிறைய கதைகள் பேசினோம். அடுத்து பாடல்கள் பாடினோம். விளையாடினோம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சிறு குழுவாக நிறைய பேச ஆரம்பித்தோம்.
அவர்களின் ஆசைகள் வெளிப்பட ஆரம்பித்தன. அப்படி பேசும்போது ஒரு

மாணவன் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என தன் ஆசையை சொன்னான். மேலும் சிலர் சிலம்பம் குறித்த தங்கள் ஆர்வத்தை தெரியப்படுத்தவும், வெளியில் இருந்து சிலம்பம் கற்றுத்தர சிலம்பம் மாஸ்டரை ஊருக்குள் வந்து கற்றுத்தர ஏற்பாடு செய்தேன். இப்போதுவரை சிலம்பம் வகுப்பு நடக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள். மாவட்ட அளவில் பல பரிசுகள் பெறுகிறார்கள்.
நான்கு, ஐந்து மாதங்கள் போனது. பள்ளி திறப்பதற்கான அறிகுறி இல்லை. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு டிவியும் சலித்துப் போனது. கதைப் புத்தகங்கள் வேண்டும் என்றார்கள். புத்தகங்களைக் கொணர்ந்து சேர்த்தேன். கதைகள் வாசித்தனர். ஆர்வமாகப் பகிர்ந்தனர். மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டினர். பெற்றோர் சிலர் இவர்கள் படிப்பதைப் பார்த்துவிட்டு புத்தகங்கள் கேட்டு வாங்கிப் படிக்க ஆரம்பித்தனர். ஒன்றரை வருடத்தில் சில குழந்தைகள் 100 புத்தகங்கள் கூட வாசித்து முடித்திருந்தனர். அவர்களை நான் கண்டறிந்த இடமும் இதுதான்.
இந்த புத்தக வாசிப்பு வகுப்பில் ஏன் சாத்தியமில்லாமல் போனது? இப்படி வகுப்பிற்குள் மாணவர்கள் தாங்கள் விரும்பியதைக் கற்றுக்கொடுங்கள் என கேட்கும் சூழல் ஏன் உருவாகவில்லை? குறைந்தபட்சம் அதை வெளிப்படுத்த வகுப்பில் இடமும், நேரமும் ஏன் இல்லை?
நம் நாட்டில் வீடு, பள்ளி இரண்டுமே குழந்தைகள் மீது தங்கள் அதிகாரம் மற்றும் எதிர்பார்ப்புகளை திணிக்கும் இடங்களாக உள்ளன.
அவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை யாரோ எழுதிய பாடப் புத்தகங்கள்தானே தீர்மானிக்கின்றன? வகுப்பிற்கு அமைதியும், மதிப்பெண்களும் போதுமானதாக உள்ளன. நம் வீடுகள் கற்றலை பணம் சம்பாதிக்கும் கருவியாக மட்டுமே பார்க்கின்றன. இயல்பாகவே கற்றுக் கொள்ளும் ஆர்வமுடைய குழந்தைகள் பன்னிரண்டு வருட பள்ளிப்படிப்பில் எதையும் ஆர்வமுடன் கற்றுக்கொள்ளாமல் வெளியேறுகிறார்கள்.
இந்நிலையில்தான் வீடு,பள்ளி தாண்டி மூன்றாவதாக ஒரு இடத்திற்கான தேவை உருவாகிறது. அது மாணவர்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் இடமாக இருக்கும். அவர்கள் விவாதிக்கவும், முரண்படவும் தேவையான சுதந்திரம் மூன்றாம் இடத்தில் உண்டு. தேர்வுகள் இருக்காது. மதிப்பீடுகளும்தான். அதனால் இங்கு ‘மக்கு’, ‘புத்திசாலி’ என்ற முத்திரைக்கு அவசியமில்லை. வீடும், பள்ளியும் ஏற்படுத்திய தடைகளைத் தாண்ட இது உதவுகிறது. எவ்வித பாடத்திட்டமும் இங்கு இருக்காது. திட்டமிடலுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. அவர்கள் என்ன கற்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். பள்ளியின் வழக்கமான அடக்குமுறை, ஒழுக்கநியதிகள் இருக்காது. இடத்திற்கு இடம் இதன் தன்மை வேறுபடும். விதிகளுக்குள் அடைபடாது. பன்முகத்திறன்களை

வெளிக்கொணரும் யாரும் உள்ளே வரலாம். உரையாடலாம். குழந்தைகளின் சுதந்திரமான கற்றலுக்கு வழிகாட்டி ஒருவர் இருப்பார்.
ஏன் மூன்றாம் வெளி தேவை?
ஆண்களுக்கான மூன்றாம் வெளி நம் நாட்டில் நிறையவே உள்ளன. அதற்கான சுதந்திரமும், வாய்ப்புகளும் அவர்களுக்கு உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. ஆடி, தை மாதங்களில் கிராமப்புற பெண்கள் அதிகளவில் ஆதிபராசக்தி கோவிலுக்கு விரதம் இருந்து மாலையிட்டு போவார்கள். பெண்களே தனிப்பேருந்து ஏற்பாடு செய்து குழுவாக செல்வதைப் பார்க்கலாம். ஆண் துணையில்லாமல் போவார்கள். எப்போதும் வீட்டைச் சுற்றியே இயங்கும் பெண்களுக்கு கடவுள் பக்தி என்ற பெயரில் கோவில்களே மூன்றாம் இடமாக இருக்கிறது என்பதே உண்மை.
இங்கு குழந்தைகளுக்கான மூன்றாம் இடம் உள்ளதா?
“குழந்தைகள் வீடு, பள்ளியில் இருந்து விலகுவதன் மூலம் அவர்களின் ‘தினசரித் தன்மைகள்’ கரையும். பள்ளிக்கு மாற்றாக மூன்றாம் வெளியைச் சொல்லவில்லை. ஆனால் எவ்வித விதிகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் உட்படாத இடமாக ‘மூன்றாம் வெளி’ உருவாக வேண்டும். சாதி, மதம் என எல்லா அடையாளங்களையும் உடைக்கும் இடமாக அது இருக்க வேண்டும். அது முதல் இரண்டு இடங்களான வீடு, பள்ளியை பலப்படுத்தும்” என கல்வியாளர் பேரா. ச.மாடசாமி மூன்றாம் வெளி பற்றி குறிப்பிடுகிறார். பெரியவர்கள் நமக்கான மூன்றாம் இடத்தை தேடி நகர்ந்து விடுகிறோம். அதேபோல குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தை உருவாக்க வேண்டிய தேவையும், அவசியத்தையும் உணர்வோமா ???
(அரசுப்பள்ளி ஆசிரியர்-95007 05604)

Spread the love