May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மூங்கில் பூக்காலம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
60 முதல் 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில் பூக்கும். ஒரே நேரத்தில் கூட்டமாக வளரும் இவை பூத்துக்குலுங்கும் காட்சி காடே பூ பூத்தது போல இருக்கும். இது காண்பதற்கு அபூர்வக்காட்சி. பூத்த பிறகு மூங்கில் கழிகள் உலர்ந்து அழிந்துபோகும். இந்த அரிசிமணிகள் முளைத்து மீண்டும் மூங்கில்கள் காடாக உருவாகவேண்டும் என்றால் பல ஆண்டுகளாகும். மூங்கில் அரிசி தாராளமாகக் கிடைப்பதுடன் எலிகள், பிராணிகள், பறவைகள் கூட்டமாக வந்து உண்டு மகிழும். இதை எல்லாம் சமாளித்து விளையும் மூங்கில் காடுகளை காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகள் நாசம் செய்யும்.
மூங்கில் பூத்தால் பஞ்சம் ஏற்படும் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஏராளமான அரிசி மணிகள் கிடைப்பதால் அதைக் கொறித்துத் தின்ன வரும் எலிகள், பெருச்சாளிகள் அவை தீர்ந்து போனவுடன் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும். இதனால் பஞ்சம் ஏற்பட்டு உணவுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே மூங்கில் பூத்தால் பஞ்சம் ஏற்படும் என்ற சொல்வழக்கு கிராமத்தவரிடையே ஏற்படக் காரணம்.
இந்த அரிசி மருத்துவ குணங்கள் நிரம்பியது. அரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் எல்லா பலகாரங்களையும் இதைப் பயன்படுத்தி செய்யலாம். இதன் விலை ஒரு கிலோ ரூ 400 முதல் 600 வரை. மூங்கில் அரிசிப் பாயசம் பிரபலமானது. இயற்கையின் அதிசயப் படைப்புகளில் ஒன்றான இவை கூடைகள், தட்டிகள், வீடு கட்ட நிலைத்தூண் போன்ற பல பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
உலகில் மிக வேகமாக வளரும் மரமும் இதுதான். புல்லாங்குழல் கொடுக்கும் மூங்கில்களுக்காக செப்டம்பர் 18 அன்று சர்வதேச நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அஸ்ஸாம், கேரளா உட்பட பல மாநிலங்களில் இவை தோட்டமாக வளர்க்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பாலோடு என்ற இடத்தில் உள்ள வெப்பமண்டல தாவரவியல் பூங்காவில் மூங்கில்களுக்காக ஒரு தனி ஆய்வுப்பிரிவு செயல்படுகிறது. வனவிலங்குகள் சாலையைக் கடக்க உதவும் பாலங்கள் கட்ட இவை பயன்படுகின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட இந்தியாவிலும் இதுபோன்ற கட்டுமானங்கள் உள்ளன. நைனிட்டால் தேசீய நெடுஞ்சாலை, தமிழ்நாட்டில் ஆனைமலை காடுகளில் சிறிய உயிரினங்கள் சீறிப்பாய்ந்துவரும் வாகனங்களால் மோதப்பட்டு உயிரிழப்பதைத் தடுக்க இந்த கட்டமைப்புகள் உதவுகின்றன.
(73390 89961 – [email protected])

Spread the love