June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

முழுக்க முழுக்க பெண் உருவாக்கத்தில் வியக்கவைத்த சினிமா…

 • சோழ. நாகராஜன்
  அவரது இயற்பெயர் திருவையாறு பஞ்சாபகேச ராஜலட்சுமி எனும் டி.பி. ராஜலட்சுமி. ஆனால், அந்நாளைய தமிழ் சினிமா ரசிகர்கள் அன்போடு அவரை எப்படி அழைத்தார்கள் தெரியுமா? சினிமா ராணி..என!
  தமிழ் சினிமா பேசத் தொடங்கியபோது வெளிவந்த முதல் படம் காளிதாஸ் (1931). அதன் நாயகி டி.பி.ராஜலட்சுமி. அதாவது, தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி அவர். அதுமட்டுமா? திரைத்துறையின் அந்நாளில் அவர் எடுத்த அவதாரங்கள் அநேகம். அவர் செய்த சாதனைகள் பல. அதனாலேயே அவரைத் தமிழ் ரசிக மகாஜனங்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
  1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம் மிஸ் கமலா. அதன் நாயகி டி.பி.ராஜலட்சுமிதான். அதுமட்டுமல்ல… மிஸ் கமலா படத்தின் கதை கமலவல்லி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கமலவல்லி நாவலை எழுதியது அதே டி.பி.ராஜலட்சுமி. மிஸ் கமலா படத்தின் திரைக்கதையை எழுதியது வேறு யாருமல்ல… டி.பி. ராஜலட்சுமியேதான். இன்னொரு சுவாரசியத் தகவல் வேண்டுமா? அந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் யார் தெரியுமா? அவரும் அதே சாட்சாத் டி.பி.ராஜலட்சுமிதான்.
  மிஸ் கமலா படத்தைப் பற்றிய வியப்புத் தகவல் இத்தோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. அதன் பாடல்களையும் அவரே எழுதி, படத்தின் இசையமைப்பையும் அவரே மேற்கொண்டார். படத் தொகுப்புப் பணி-எடிட்டிங்கும் அவரே செய்தார். இத்தனைக்குப் பிறகு அந்தப் படத்தின் இயக்குநர் யாரென்று கேட்பீர்களேயானால் அதற்கான விடையாகவும் இருப்பதும் டி.பி.ராஜலட்சுமிதான்.
  ஆமாம், மிஸ் கமலாவுக்கு இத்தனை பெருமைகள்! ஒரு நடிகை என்று அறியப்பட்ட பெண் கலைஞர் ஒருவர் அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் என்று அத்தனையையும் தன் தலைமேல் போட்டுக்கொண்டு அந்த நாளிலேயே அப்படியானதொரு துணிச்சலான சவாலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்.
  இயக்குநர் என்ற முறையில் தமிழில் மட்டுமல்ல… டி.பி.ராஜலட்சுமி தென்னிந்தியாவிலேயே முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்குரியவரானார். இந்தியாவில் அவர் இரண்டாமவர். (முதலாமவர், புல்புல் இ பரிஸ்தான் என்கிற பேசாப் படத்தை 1926 லேயே இயக்கிய ஃபாத்திமா பேகம் என்பவர் ஆவார்.)
  மிஸ் கமலா படத்தின் மூலக்கதையான கமலவல்லி ஒரு நாவலுக்குரிய அழுத்தமான கதையமைப்போடு இருந்தது. தமிழில் ஒரு முழுநீள நாவலை சினிமாவாக்கிய வகையிலும் இது முதல் முயற்சியாகும். மிஸ் கமலாவின் கதைச் சுருக்கம் இதுதான் :
  கமலாவும் கண்ணப்பனும் காதலர்கள். அவர்களின் காதலை ஏற்காத கமலாவின் பெற்றோர் அவளை ஒரு டாக்டருக்கு மணமுடித்து வைக்கின்றார்கள். முதலிரவிலேயே கமலா தனது கண்ணப்பனுடனான காதல் குறித்து கணவரிடம் கூறிவிடுகிறாள்.
  கணவர் அவர்களிருவரையும் தான் சேர்த்துவைப்பதாக உறுதி கூறுகிறார். மறுநாள் டாக்டர் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். தனிமையில் இருக்கும் கமலாவை அக்கம் பக்கத்தார்கள் பழித்துப் பேச, கமலா தனது பெற்றோர் வீட்டுக்கு அடைக்கலமாகப் போகிறாள்.
  அவளது பெற்றோர் இந்த நிலையில் அவளை ஏற்க மறுக்கின்றனர். காதலனிடம் செல்கிறாள். அவனோ அவள் இன்னொருவருக்கு மனைவி ஆகிவிட்டதைச் சொல்லி அவளைத் துரத்தி விடுகிறான். அதனால் மனமுடைந்த கமலா தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். அவளை ஒரு தம்பதியினர் காப்பாற்றி அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். அந்தத் தம்பதியினர் வேறு யாருமில்லை, கமலாவின் காதலனான கண்ணப்பனின் பெற்றோர்தாம்.
  தற்கொலை முயற்சியினால் உடல்நலக் குறைவடைந்த கமலாவுக்கு மருத்துவம் செய்ய வருகிறார் மருத்துவர். வந்தபின்தான் அவளுக்குத் தெரிய வருகிறது அந்த மருத்துவர் அவளது கணவர்தான் என்று. கமலாவின் நிலை அறிந்த அவர் தான் வாக்களித்தபடியே கண்ணப்பனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயல்கிறார். கண்ணப்பனுக்கும் இரக்கம் பிறக்கிறது. ஆனால் அதை விரும்பாத கமலா அங்கிருந்து வெளியேறி, ஒரு நாடோடி போல வேடமணிந்துகொண்டு, ஆடிப்பாடி பிச்சையெடுத்து வாழ்கிறாள்.
  நாடோடி உடையில் இருக்கும் கமலாவை வேறு யாரோ என்று எண்ணி அவளை விரும்பும் கண்ணப்பன் அவளுக்கு வாழ்வுதர முன்வருகிறான். தன் பெற்றோர் முன்னிலையிலேயே திருமணமும் செய்துகொள்கிறான். முடிவில் தனது நாடோடிப் பெண் வேடத்தைக் கலைத்து, தான்தான் கமலா என்பதை அவள் அறியச் செய்கிறாள். படம் சுபமாக நிறைவடைகிறது.
  இதில் இன்னொரு புதுமையையும் டி.பி.ராஜலட்சுமி புகுத்தியிருந்தார். பிரபல நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் ஒரு இசைக் கோர்வையைப் படம் பிடித்து ஒரு இணைப்பாக இந்தப் படத்தில் சேர்த்திருந்தார். ராஜலட்சுமியின் இத்தகைய சினிமா ஈடுபாட்டைக் கண்டு வியந்த ராஜரத்தினம் பிள்ளை இந்தப் படத்தின் இணைப்புக் காட்சியில் வாசித்ததற்கான ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டாராம். அது ராஜலட்சுமியின் மீதான ராஜரத்தினத்தின் மரியாதையின் அடையாளம் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ராண்டார் கை.
  இப்படி 1936-லேயே ஒரு அழுத்தமான கதைப் பின்னலோடும் புதுமைகளோடும் ஒரு சினிமாவை, பார்ப்போரின் ரசனையைக் கிளறிவிடுவதாக உருவாக்கி இருந்தது அந்த நாளில் முன்னெப்போதும் கண்டிராதது. அப்படியானதொரு தமிழ் சினிமாவை முழுக்க முழுக்க டி.பி.ராஜலட்சுமி என்ற ஒரு பெண் கலைஞர் தன்னம்பிக்கையோடு முயன்று உருவாக்கிச் சரித்திரம் படைத்தார் என்பதை இன்று நினைத்தாலும் அது வியப்பையே நம்முள் உண்டாக்குகிறது அல்லவா?
  (98425 93924 – [email protected])
  (நன்றி: தீக்கதிர்)
Spread the love