August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

முற்றிலும் தனித்துவம் மிளிரும் அசலானதொரு கலைஞன்…

அஞ்சலி:

பிரதாப் போத்தன்
சோழ. நாகராஜன்


முற்றிலும் மாறுபட்டதொரு கலைஞன் பிரதாப் போத்தன் மறைவு என்பது கலையுலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்புதான். வெறும் பேச்சுக்காகச் சொல்வதல்ல… உண்மையிலேயே அவர் ஒரு முழு சினிமா கலைஞன்தான். சினிமாவில் அவர் செய்த சாதனைகள் அளவானவைதான். ஆனாலும், அபரிமிதத் தரத்தவை.


அவரது யதார்த்த பாணி நடிப்பு என்பது வேறெவரும் தொடமுடியாத தனித்துவமானது. அவர் நடித்த முதல் படம் மலையாளத்தில் வெளிவந்த ‘தகர’. முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரதாப். முழுக்க முழுக்க வெள்ளந்தியான அப்பாவி இளைஞன் பாத்திரம் அது. கொஞ்சம்கூட மிகை நடிப்பை அவரிடம் பார்க்க முடியாது. அது அவரின் முதல் படத்திலேயே தெளிவாகத் தெரிந்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அவர் பல மொழிப் படங்களிலுமாக 100-க்கும் அதிகமான படங்களில் நடித்தார். அவரது தனித்துவமான, மிகையில்லா நடிப்பு இறுதிவரை தொடர்ந்தது.


தமிழில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் சிறப்பானவை. சவால்கள் நிறைந்தவை. பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட நடிகரல்ல பிரதாப் போத்தன். நடிப்பில் ஒரு மாறுபட்ட துல்லியத்தை வெளிப்படுத்தியவர் அவர். தமிழில் நல்ல சினிமாவை முயன்ற இயக்குநர்கள் பிரதாப்பைப் பெரிதும் மதித்தார்கள். விரும்பினார்கள்.


கே.பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற சிறந்த இயக்குநர்களின் சிறந்த விருப்ப நடிகராக பிரதாப் இருந்தார் என்பது தற்செயலானதல்ல. அந்த அங்கீகாரம் அவரது தனித்துவ இயல்பு நடிப்புக்குக் கிட்டிய மதிப்பு. இந்த நிலையிலும் அவர் தன்னைப் பிறரைவிடத் துறுத்திக் கொண்டு வெளிப்படுத்திக்கொள்ள முயலாத இயல்பினராகவே இறுதிவரை இருந்தார்.


பாலசந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு, பாலு மகேந்திராவின் மூடுபனி, மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் பிரதாப் எனும் அசல்

நடிகனை அடையாளம் காட்டிய படங்களில் முக்கியமானவை. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் அவர் ஏற்ற அந்த டென்ஷன் டைப் நாடக இயக்குநர் பாத்திரத்தில் வேறு ஒருவரை நினைத்தே பார்க்க முடியாது. நாயகியை ஒருதலையாய்க் காதலித்துத் தோற்றுப்போகும் அவரது பாத்திரப்படைப்பில் அவரைப்போல இன்னொரு நடிகர் பொருந்திப்போவார் என்பதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. அதுதான் பிரதாப் எனும் அந்த அற்புதக் கலைஞனின் தனித்துவமான கலைத்திறன்.


அதுபோலத்தான் மூடுபனியில் அவர் ஏற்ற அந்த சைக்கோ பாத்திரமும் இயல்புமீறிய தனித்துவமானது. படம் முழுக்க அவரது போக்கை அந்த இறுதிக்காட்சி மாற்றிப்போடுமிடம், அப்போது அவர் உடைந்து அழும் காட்சி முற்றிலும் புதிய அனுபவத்தைப் பார்வையாளர்களிடத்தில் கடத்தியதை எளிதில் மறந்துவிட முடியாது.
தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டு, பிரதாப் மட்டுமே இப்படி நடிக்க முடியும் என்று எல்லோரையும் எண்ணவைக்கும் தருணங்களை அவர் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார்.


பிரதாப் போத்தன் தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலபேரி பாண்டி, லக்கி மேன் போன்ற படங்களை இயக்கினார். மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி, ஒரு யாத்ரமொழி முதலான படங்களையும், சைத்தன்யா என்ற தெலுங்குப் படத்தையும் இயக்கினார். ஒரு இயக்குநராகவும் அவரது தனித்துவக் கலை முயற்சி தொடர்ந்தது. சொல்லத் துடிக்குது மனசு படத்தின் கதை பிரதாப் எழுதியது. குரு என்ற இந்திப்படத்திலும் அவர் நடித்தார்.


முதன்முதலில் நடித்த ‘தகர’ படத்திற்கே சிறந்த நடிகர் விருதைக் கேரள மாநில அரசு (1979) அவருக்கு அளித்தது. அதே ஆண்டு அவர் நடித்த தமிழ்ப் படமான ‘அழியாத கோலங்கள்’ படத்திற்காகவும் அவருக்கு சிறந்த நடிகர் பரிசு கிடைத்தது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தை இயக்கியதற்காக சிறந்த புதுமுக இயக்குநர் தேசிய விருதை அவர் பெற்றார். இப்படி அவரைத் தேடிவந்த விருதுகளின் பட்டியல் நீளும். தனது இறுதிக் காலத்தில் விளம்பரப் படங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திவந்தார் பிரதாப்.


கேரளத்தின் திருவனந்தபுரத்தில் அவரது தந்தை கொளத்தின்கல் போத்தன் ஒரு தொழிலதிபர் ஆவார். பிரதாப் தனது 15 வயதிலேயே தந்தையை இழந்தார். அவருடன் உடன்பிறந்தோர் 5 பேர். அவரின் மூத்த சகோதரர் ஹரி போத்தன் கேரளத்தில் ஒரு மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளர். ஓவியத்தில் நாட்டமுள்ள பிரதாப் சென்னையில் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பின்

போதே நண்பர்களுடன் நாடகங்கள் நடத்துவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அந்த நாளில் சென்னையில் இயங்கிவந்த தி மெட்ராஸ் தியேட்டர்ஸ் எனும் ஆங்கில நாடகக் குழுவில் சேர்ந்து தனது நடிப்புக்கலையை வளர்த்துக்கொண்டவர் பிரதாப் போத்தன். ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் கலந்து நடத்திவந்த இந்தக் குழுவில் பிரபல கன்னட இயக்குநர் கிரிஷ் கர்னாடும் இருந்தார்.
இந்த ஜூலை 15 ந் தேதி சென்னையில் தான் குடியிருந்த அடுக்குமாடி வீட்டில் அவர் தனது இறுதி மூச்சை விட்டு, இறந்தபோது பிரதாப்புக்கு வயது 69. சினிமாவின் நுட்பங்களை அறிந்த வெகுசில கலைஞர்களுள் பிரதாப்பும் ஒருவர்.


உலகின் சினிமாக்களையெல்லாம் விரும்பி விரும்பிப் பார்க்கிற அவரது கலையுள்ளம் சினிமா குறித்து நிரம்ப ஞானம் வளர்த்துவைத்திருந்தது. கலையுலகில் இன்னும்கூட அவர் சாதித்திருக்கலாமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது…
நமக்கு விருப்பமான நல்ல இனிப்புப் பண்டத்தைக் குறைவாகச் சுவைத்த திருப்திக் குறைவோடுதான் அவரை நாம் வழியனுப்ப வேண்டியிருக்கிறது, திரும்பமுடியாத மரணத்தின் கோட்டைக்கு நிரந்தரமாக.

(98425 93924 – [email protected]))

Spread the love