முன்னாள் கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவு
முன்னாள் கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் ஏப்ரல் 29 அன்று காலமானார். பத்து ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்தவர் அவர் ஒருவரே. மிக எளிய குடும்பத்தில் பிறந்த அவர் கல்வி உதவித் தொகை பெற்றுத்தான் இளங்கலைப் பட்டம் வரை படித்தார். சைதை ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் பி.டி. பட்டம் பெற்று கோவை மாவட்டக் கழகப் பள்ளிகளில் பணியாற்றினார். ஆசிரியர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு உரிமைக்குரலை உரத்து எழுப்புவார். இளம் வயதிலேயே பெரியாரால் ஈர்க்கப்பட்டு கல்லூரிக்கு கறுப்பு அங்கியில் வருவார். அ.தி.முக.வின் முதல் சட்டமன்ற உறுப்பினர். கல்வி அமைச்சராக ஆசிரியர் சார்பிலேயே முடிவெடுப்பார். மேனிலை கல்வியைப் பள்ளிகளில் செயல்படுத்தியதோடு, தொழிலறிவு படிப்பைத் தொடர முடியாதவர்க்கு வாழ்வளிக்கும் என்று ஊக்குவித்தார். அவரது மறைவு ஆசிரியர் உலகிற்குப் பேரிழப்பாகும்.
ச.சீ. இராஜகோபாலன்
மூட்டாவில் பொறுப்பாளராக இருந்தபோது அரங்கநாயகம் அவர்களை நன்கு அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தலைவர் வெ.சண்முகசுந்தரம் அவர்களுடன் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட திரு. ஜெகதீசன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தீர்ப்பு கிடைத்தது. அன்று இரவு நானும் தலைவரும் அரங்கநாயகம் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். எங்களுக்கு ஆறுதலாக அவர் பேசியதை என்னால் மறக்க இயலாது. ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பொறுப்பாளர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்பார். 1981-ம் ஆண்டில் திருச்செந்தூரில் நடந்த மூட்டா மாநாட்டில் கலந்துகொண்டு ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் அருமையாகப் பேசினார். அவரது நினைவு எங்கள் நினைவுகளில் தங்கிவிட்ட ஒன்று.
கே.ராஜூ (முன்னாள் தலைவர், மூட்டா)
முன்னாள் கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் மறைவு

Spread the love
More Stories
நடக்கவோ… பறக்கவோ..
வகுப்பறைக்குள்ளே ஒரு போட்டி..!
தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் குழு… வரவேற்போம்!