September 30, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

முதுமை வ(மு)ழங்கிய புதுமைகள்..!

செல்வகதிரவன்
எண்பது வயது தொட்ட இந்திரா அம்மாளுக்கு அன்று ஏற்பட்ட ஆனந்தம் அளவிடற்கரியது. சந்தோசத் தன்மைகளை பறைசாற்றும் சகலமும் அவளது மனதிற்குள் புகுந்தன. விசயம் வேறொன்றும் இல்லை. பேரன் பொன்திருவரங்கன் கார் வாங்கியிருக்கிறான். நாளை அதில் பயணம் செய்து மதுரை போய் முக்கிய கல்யாணம் ஒன்றில் மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் கலந்து கொள்கிறாள். கல்யாணத்தில் வெகு நாட்களாக பார்க்காத பற்பல உறவுகளுடன் உரையாடுவதே ஒருவித தனி சுகம் அல்லவா..?
அந்தக் காலங்களில் இந்திரா அம்மாள் மகனின் சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்து மருத்துவமனைக்கும், மாரியம்மன் கோயிலுக்கும் போய் இருக்கிறார். பிறகு சற்று வசதி வந்தவுடன் டிவிஎஸ் 50-யில்.. அப்புறம் பைக்கில்..என்று ஏறிப் போனவளுக்கு நாளை பேரன் வாங்கிய ஏ.சி. காரில் பயணப்படப் போவதை நினைத்து பூரித்துப் போயிருக்கிறார்.
பேரனுக்கு பொன்திருவரங்கன் என்கிற பெயரைத் தேர்வு செய்ததே இந்திரா அம்மாள்தான். பொதுவாக மகன்வழி பேரக் குழந்தைகளுக்கு பெயர் யோசிக்கிற போது மருமகள் வீட்டாரைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இந்திரா அம்மாள் அப்படி இல்லை.. இறந்து போன தனது கணவர் பெயர் ரங்கையா, சம்மந்தியின்-அதாவது மருமகளின் அப்பா- பெயர் பொன்னையா இரண்டையும் இணைத்து பொன்திருவரங்கன் என்று புதுமையான பெயரை சூட்டச் சொன்னாள். இந்த பாணி இரு வீட்டாருக்கும் திருப்தியைத் தந்ததால் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இந்திராவின் ஜனநாயகப் பண்பை போற்றிப் புகழத் தவறவில்லை.
வாங்கிய காரை வீட்டில் நிறுத்த இடமில்லை வீட்டிற்கு பின்பகுதியில் ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றிருக்கிறது. மூன்று செண்ட் பரப்பளவு கொண்டது. நடுநாயகமாக ஆஞ்சநேயர் சிலை. அங்கேயே இடது பக்கத்தில் கோயில் அர்ச்சகருக்கு வீடு. வலது புறத்தில் பூச்செடிகள் நிறைந்த நந்தவனம். அதனருகில் சின்ன காலியிடம். இப்படியான அழகான தோற்றத்தில் கோயில் அமைந்திருக்கிறது. காரை அங்குள்ள காலி இடத்தில் நிறுத்த அர்ச்சகரிடம் அனுமதி கேட்டான் பொன்திருவரங்கன். கொஞ்சம் கூட யோசிக்காமல்.. தாராளமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்றதால் கார் கோயிலுக்குள் பாதுகாப்பாக நிற்கிறது.
ஆஞ்சநேயர் ஆலயத்தின் இப்போதைய அர்ச்சகர் நந்தகுமார் என்பவர். இந்த நந்தகுமாருக்கு பரம்பரை பாத்தியமுடைய கோயில்தான் இது. நந்தகுமாரின் பெற்றோர் காலம் தொட்டு இந்திரா அம்மாளுக்கு இந்தக் குடும்பம் பழக்கமானது. ஆலயம் போகும்போதெல்லாம் அன்னியோன்யமாக பேசிக் கொள்வார்கள். நோன்பு, சுமங்கலி பூஜை இத்தியாதி விசேடங்களுக்கு கூப்பிட்டு, பழம், பூ வெற்றிலை பாக்கு தருவார்கள். இந்திரா அம்மாள் வீட்டு விசேசங்களில் செய்யும் கேசரி, வடை, சுசியம் வகையறாக்கள் அர்ச்சகர் வீட்டுக்குப் போகும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் இவர்கள் கொடுக்கும் பலகாரங்களை அர்ச்சகர் வீட்டில் சாப்பிடுவது இல்லை.. அப்படியே வேலைக்காரிக்கோ துப்புறவுத் தொழிலாளிக்கோ தந்து விடுகிறார்கள் என்பது தெரிய வந்தது. இது தெரிந்தவுடனே மருமகள் மல்லிகா, பேரன் பொன்திருவரங்கன் இருவரும் ரௌத்திரம் ஆனார்கள். இந்திரா அம்மாள் அவர்களை அமைதிப்படுத்தினார்.
பொன்திருவரங்கன் ஆவேசப்பட்டான்.
“என்ன ஆச்சி சொல்ற? அந்த நந்தகுமாரு கடைவீதி டீக்கடையில டீக்குடிச்சிட்டு, கடைக்குப் பின்னாடி போய் திருட்டுத்தம் அடிக்கிறாரு,அது தப்பில்லையாம்.. நம்ம வீட்டுப் பலகாரத்த வாங்கிச் சாப்பிடுறது மட்டும் கூடாதாம்.. இது எந்த ஊரு நாயம்?..”
“அவுங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். இனிமே நாம வீட்டுல செய்யிற பலகாரங்கள கொடுக்காம இருந்து எதிர்ப்பக் காட்டுவோம். நேர்ல கேட்டு எதுக்கு பகைய உருவாக்குவானேன்..”
அதிகாலையிலேயே எழுந்து காரைக் கழுவி சுத்தப்படுத்தினான். முதல் நாளே காருக்கு பெட்ரோல் நிறைத்து விட்டான். கோயிலுக்குக் கிளம்ப ஆயத்தமானான். வீட்டில் அப்பா, அம்மா, மனைவி தயாராகிவிட்டார்கள். பொன்திருவரங்கனும் பதினைந்து நிமிச அவகாசத்தில் குளித்து ரெடியாகி விட்டான்.
போகலாமா..? கார எடுத்திட்டு வந்திடவா..? இல்ல ஆஞ்சநேயர் கோயில்ல போயி ஏறிக்கிடலாமா..?
எடுத்திட்டு வந்திடேன்.. எல்லாரும் அங்கே போகும்போது அந்த அர்ச்சகர் நந்தகுமாரப் பாக்க வேண்டியது வரும். வெளியூருக்கு முக்கியமான கல்யாணத்துக்குப் போறோம்.. ஒத்த பிராமணரைப் பாத்திட்டுப் போகக் கூடாதுன்னு சொல்வாங்களே..?
காரை எடுத்திட்டு வரச் சொன்னதற்கான காரணத்தை இப்படித் தெளிவுபடுத்தினார் பொன்திருவரங்கனின் அப்பா.
அம்மா அதை ஏற்கவில்லை.
“ஒத்தப் பிராமணர் மொகத்தில முழிச்சிட்டுப் போனா காரியம் உருப்படாதுன்னு நெனைக்கிறது சுத்த அபத்தம். யாரோ அந்தக் காலத்தில கிளப்பிவிட்ட அர்த்தமில்லாத நம்பிக்கை. சில பிராமணர்கள் எத்தனையோ மூட நம்பிக்கைகள அவுத்து விட்டிருக்காங்கள்ல.. வெதவ மொட்ட போடணும், வெள்ளப் புடவதான் கட்டணும், யாரும் வெளில வர்றபோது எதுக்க வரப்பிடாது.. இப்படி கணக்கில்லாத சங்கதிகள அள்ளி வீசிய இவுங்களுக்கு எதாவது நாம சொல்லணும்னு பிராமணர் அல்லாத பெரும் புலவர் ஒருத்தரு ஒத்தப் பிராமணர் எதுக்க வந்தாக் கெடுதல்னு கூறி அத ஜனங்கள நம்ப வச்சிட்டாரு. மத்தப்படி இதுல நெஜம் இருக்க வாய்ப்பில்ல. அதனால இந்தப் பழமொழிய எல்லாம் நம்ப வேண்டாம். நாம கோயிலுக்குப் போயி ஆஞ்சநேயர சேவிச்சிட்டு அங்க இருந்தே புறப்படுவோம்”
தெள்ளத் தெளிவா இந்திரா அம்மாள் தெரிவித்த அபிப்ராயத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு ஆஞ்சநேயர் ஆலயம் சென்றனர்.
கோயிலுக்குள் நழைந்ததும் அர்ச்சகர் நந்தகுமார் அனைவரையும்.. குறிப்பாக இந்திரா அம்மாளைப் பார்த்து நமஸ்கரித்தார். இந்திரா அம்மாளும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு காரில் கம்பீரமாக ஏறி அமர்ந்தாள்.
‘வயசானவங்க சாஸ்திர சம்பிரதாயத்தை பிடிச்சிட்டு பின் வாங்காம தொங்குவாங்க.. நம்ம ஆச்சி இந்த எண்பது வயதில முற்போக்காப் பேசுறாங்க’ என்கிற எண்ணம் இழையோட காரை ஸ்டார்ட் செய்தான் பொன்திருவரங்கன்.
(99445 09530 – [email protected])

Spread the love