June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

*மாரிதாஸின் வழக்கறிஞராக மாறிப் போனாரா நீதிபதி..?*

-சாவித்திரி கண்ணன் 

கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது.

மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக மாறி கேள்வி கேட்டு இருப்பதே சாட்சியாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி ஒரு விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில்,

”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’

என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ்.

இது ஒரு விஷக் கருத்தா இல்லையா? இது விஷக் கருத்து என்பதால் தானே போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை மாரிதாஸ் எடுத்துவிட்டார்? அப்படியானால், அதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கலாமே!

இந்த கருத்திற்கு எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால் அது எவ்வளவு பெரிய கொந்தளிப்பில் சென்று முடியும்?

இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, “அவரது ட்விட்டரில் முப்படைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது” என்ற வாதிட்டார்.

ஆனால், இந்த சப்ஜெக்டில் இருந்து வெளியேறியவராக திடீரென குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பியிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கூறுகிறார் என்றால், என்ன பொருள்?

ஒரு திருடனைப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினால், அவன் திருடியது உண்மையா என்பதை தீர விசாரிக்காமல், ”இன்னொருத்தனும் திருடி இருக்கானாமே அவனை ஏன்பிடிக்கலை? ஐந்து வருடத்திற்கு முன்பு கூட திருட்டு நடந்திருக்குதாமே” என்றால், அந்த இடத்தில் நீதிபதியானவர் குற்றவாளியின் சகாவாக வெளிப்படுவதாகத்தானே மக்கள் புரிந்து கொள்வார்கள்! மேலும் இவ்வளவு விஷமத்தனமாக டிவிட்டர் போட்ட மாரிதாஸின் வழக்கையே ரத்து செய்துள்ளார் நீதிபதி. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

இதே நீதிபதி தான் சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்திற்கு சங்கராச்சாரியார் பொது இடத்தில் மரியாதை கொடுக்க மறுத்த விவகாரத்திலும் வழக்கு தொடுத்தவரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி,  ”நீங்க யாரு,தமிழ் ஆர்வலரா? எங்கே, ஐந்து திருக்குறள் சொல்லுங்கள் பார்க்கலாம்…’’ எனக் கேட்டு சோதித்து குற்றம் கண்டார்.

தற்போது மாரிதாஸூக்காக பாஜக களம் காண்கிறது. ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கிறது. கட்சி அலுவலகத்தில் வாயில் துணிகட்டி அனைவரும் போராடுகின்றனர். தெருவில் இறங்கியும் போராடுகின்றனர்.

வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது..?

தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் உறுதியாக மாரிதாஸ் மீதான சகல குற்றங்களையும் நிரூபித்து உள்ளே தள்ளவில்லையானால் சட்டம், நீதி எதற்கும் மரியாதை இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாக அது வழி வகுத்துவிடும். 

-(அறம் இணைய இதழில் எழுதியதிலிருந்து)

Spread the love