May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மாப்பிள்ளையான மரம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
மரம் ஒரு வரம் என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இங்கிலாந்தில் ஒரு மரம் இப்போது ஒரு வரனாக மாறியுள்ளது. லிதர்லாந்தில் ரிமோட்ஸ் வாலி பூங்காவில் உள்ள ஒரு பெரிய மரம்தான் கடந்த 2019 செப்டம்பர் 11-ம் தேதி மாப்பிள்ளையாக மாறியது.
கேட் கன்னிங்ஹாம் என்ற 34 வயது பெண்மணிதான் அந்த மரத்தைக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
எதற்காக இப்படி ஒரு கல்யாணம்? பூங்காவின் நடுப்பகுதி வழியாக ஒரு நெடுஞ்சாலையை உருவாக்க அதிகாரிகள் திட்டமிட்டார்கள். இதற்காக அங்கே உள்ள ஏராளமான மரங்களை வெட்டிச் சாய்க்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள். இதை எதிர்த்துதான் கேட், மரத்தைத் திருமணம் புரிந்துகொண்டார்.
அந்தப் பிரதேசத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இந்த சாலை நிர்மாணத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்கள். மரங்களை வெட்டுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்று ஒன்றுகூடி ஆலோசனை செய்தபோதுதான் இப்படி ஒரு யோசனை தோன்றியதாக இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான கேட் கூறுகிறார்.
பிரதேசவாசிகள் எல்லோரும் கேட், மரத்தை திருமணம் செய்துகொள்ளும் அபூர்வமான நிகழ்வைக் காண வந்திருந்தனர். கேட்டின் பாய் பிரெண்டும் அவரின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தார்.
மணப்பெண் வேடத்தில் அற்புதமான அழகுடன்இயற்கையை நேசிக்கும் கேட் திருமணவிழாவிற்கு வந்திருந்தார். திருமணச் சடங்குகள் முடிவடைந்தவுடன் கேட் தன் பெயருடன் மரத்தின் பெயரையும் சேர்த்து கேட் ரோஸ் எல்டெர் என்று மாற்றிக்கொண்டார்.
எல்டர் என்ற பிரிவைச் சேர்ந்த மரத்தைத்தான் கேட் திருமணம் செய்து கொண்டுள்ளார். மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக கேட் கூறுகிறார்.
மரங்களைப் பாதுகாக்க உலகில் எவ்வளவோ பேர் எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் பார்த்தீர்களா! நம்மைச் சுற்றிலும் உள்ள மரம் செடி கொடிகளையாவது அழிக்காமல் நாம் பாதுகாப்போம்.
(73390 89961 – [email protected])

Spread the love