September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மாணவர்களும் வாசிப்புப் பழக்கமும்

உமா
இந்த உலகம் பன்னெடுங்கால வரலாற்றை தன்னகத்தே பெற்று இன்று இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது. அறிவியல் வளர்ச்சிப் பரிணாமங்களின் பயணம்தான் மனித குல வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இவை குறித்தெல்லாம் நாம் ஓரளவேனும் புரிதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அவற்றைப் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாசிப்பதும் புரிந்து கொள்வதும் முக்கியமான ஒரு வழி எனலாம்.
கடந்த மாதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. பாட நூல்களைத் தாண்டி வாசிக்க வேண்டும் என்று ஒரு அணியும் பாடநூல்களை மட்டும் வாசித்தால் போதுமானது என்று மற்றொரு அணியும் பேசினர். நிகழ்விற்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களில் நானும் ஒருவர். பாடநூல் தாண்டி வாசிப்பது குறித்த “அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (அ3)” அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவே நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
நிகழ்ச்சியினை நெறிப்படுத்திய திரு. கரு. பழனியப்பன், அரசுப் பள்ளிகளில் வாசிப்பு குறித்து என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிப் பேசவே என்னை நிகழ்வுக் கூடத்திற்கு அழைத்திருந்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உண்மையாகவே அசத்துகிறார்களா என்பது அவரது கேள்வி. எனது விரிவான பதிலைத் தொடங்கினேன்.
ஆம்..ஆம் அசத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் வெளியில் தெரிவதில்லை. தற்போது ஆயிரக்கணக்கில் இருக்கும் அந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் என மாற வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வாசிப்புக்கு அணுக்கமாக இருக்கிறார்கள். காரணம், பாடநூல் தாண்டிய கல்வி அங்கு கிடைக்கிறது. கல்வி பெருமளவுக்கு தனியார்மயமாகிப் போனதன் விளைவுதான் கல்வியை பாட நூலுக்குள் மட்டும் தேடுவது என்றாகிப் போனது. பாடப் புத்தகங்களைப் படித்து அதிலுள்ள வினாக்களுக்குரிய விடைகளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெறுவது, அடுத்து வேலை வாய்ப்பு என தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இலக்கு நிர்ணயித்துக் கொண்டதைப் பார்த்து பெரும்பாலான பெற்றோர்கள் தரமான கல்வி என்பது பாடநூலைப் படித்து மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமே என நம்பத் தொடங்கி விட்டனர்.
விளைவு , காலங்காலமாக வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொடுத்து வந்த அரசுப் பள்ளிகளும் மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடநூல் வாசிப்புக்குள் தங்களைச் சுருக்கிக் கொள்ள ஆரம்பித்தன. பாடநூல்கள் நமக்கு வழிகாட்டும் குறிப்புகளை மட்டுமே பெற்றிருக்கும். உதாரணமாக, காந்தி, மார்க்ஸ், பெரியார், அண்ணா இவர்கள் அனைவரைப் பற்றியும் ஒரு சிறு பகுதி மட்டுமே பாடநூல் உள்ளடக்கத்தில் தரப்பட்டிருக்கும். அவற்றை மட்டும் வாசித்தால் ஒன்றிரண்டு மதிப்பெண்களைப் பெற முடியும். ஆனால் அவர்களோடு தொடர்புடைய நூல்களை பாட நூலுக்கு அப்பால் நாம் தேடி வாசிப்பவர்களுக்கு பரந்த அனுபவம் கிடைக்கும் என்பதுதான் வரலாறு.
பாடநூல் மட்டும் வாசித்தால் போதும் என்று நினைத்தால் வேலைக்கான மனிதர்களாக மட்டுமே நாம் உருவாக முடியும். மாறாக, பாட நூலுக்கும் அப்பால் பலவற்றையும் வாசிக்கும்போது நாம் சமூகத்திற்கான மனிதர்களாக வளர்கிறோம் என்பது புரிய வரும்.
புத்தகங்கள் வாசிப்பு என்பது 40 வயதுக்குப் பிறகு அல்லது பணி ஓய்வுக்குப் பிறகு என நாம் யோசித்தால் இன்றைய சமூகம் குறித்தான புரிதல் இல்லாமலேயே போய்விடும். குழந்தைகளுக்கு முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்களைத் தாண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். படக்கதைகள், ஓவியங்கள் என ஆரம்பித்து சிறுகதை, கட்டுரை, கவிதை, வரலாறு என எல்லாவிதமான புத்தகங்களையும் குழந்தைகள் வளர வளர அவர்கள் வாசிக்க அறிமுகப்படுத்துவதுதான் சிறப்பு. வெறும் புனைவுகளை மட்டுமே தராமல் அபுனைவுகளையும் வாசிக்கக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் வாசிக்க வைத்தால்தான் இன்று சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் உள்வாங்குவார்கள்.
அப்படி வாசிக்கும்போது சமீபத்தில் இந்தியாவில் ஓராண்டு காலமாக நடந்து முடிந்த விவசாயப் போராட்டம் ஏன் நடந்தது.. அதில் எத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டனர்..எத்தனை பேர் உயிர் இழந்தனர்.. என்பதையெல்லாம் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். இல்லையென்றால் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அது அவர்களை பாதிக்காது..நமக்கென்ன என்று கடந்து போய் விடவே வாய்ப்புகள் உண்டு. பாடங்களை மட்டும் கற்றுத் தேர்ந்தால், நான் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன், மாதா மாதம் சம்பளம் வருகிறது, தேவையான வசதிகள், வீடு, பைக், கார் எல்லாம் இருக்கு போதும் என்று நிறைவடைய வைத்துவிடும். ஆனால் அவ்வாறின்றி, சமூக உணர்வுகளை நமக்குள் விதைத்து வேரூன்றி வளரச் செய்வதுதான் பாட நூலைத் தாண்டிய வாசிப்பு.
நமது கல்வி முறை இத்தகைய மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றதா என்றால், ஆம் இருக்கின்றது. ஆனால் நடைமுறையில் பின்பற்றுவதில்தான் கோளாறு.
உதாரணமாக, கணக்குப் பாடப் புத்தகத்தைத் திறந்தால் ஒவ்வொரு தலைப்பு குறித்தும் ஆரம்பிக்கும் முன்பு அக்கணக்குப் பகுதியைக் கண்டு பிடித்த கணிதவியலாளர் உள்பட பல தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவற்றையெல்லாம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் கணிதத்தோடு தொடர்புடைய புத்தகங்களை மாணவர்கள் தேடுவார்கள். அவர்களுக்கான கனவுகள் உருவாக அந்தத் தேடல் உதவும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் சிலபஸ் முடிக்க முடியாது எனக் கருதி கணக்குகளை மட்டும் நடத்தி ஒரு விதமான அழுத்தத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடுகிறோம். அதனால் அவர்களிடம் கனவுகளே உருவாவதில்லை. நாம் எத்தனை கணித, அறிவியல் அறிஞர்களை வகுப்பறைகளிலிருந்து உருவாக்கி இருக்கிறோம் என்றால் நம்மிடம் பதில் இல்லை. இன்னும் கணிதத்திற்கு இராமானுஜம் ஒருவரையே சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
நமது கல்வி முறையில் அமைந்துள்ள மதிப்பீட்டு முறையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையைப் பயன்படுத்தி வாசிப்பை ஊக்கப்படுத்தும் செயல்களை அ-3 அமைப்பில் நாங்கள் செய்து வருகிறோம். வாசிப்பைப் பரவலாக்க கடந்த 4 வருடங்களாக சில முயற்சிகளைச் செய்து வருகிறோம். ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வழியாக வாசிப்பதற்கான பல வழிகளைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறது எங்கள் அமைப்பு.
தும்பி இதழ் போன்ற குழந்தைகளுக்கான மாத இதழ்களை அறிமுகம் செய்கிறோம். உலக அளவில் பெயர் பெற்ற சிறப்பான க்ரியா தமிழ் அகராதியை அரசுப் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்கிறோம். அரசுப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களே இந்த அகராதியைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிதி உதவியோடு க்ரியா பதிப்பகம், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றும் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இந்த அகராதியை வழங்கியுள்ளனர். அகராதி மட்டுமல்ல, 32 தலைப்புகளில் பல கதைப் புத்தகங்கள், மொழி பெயர்ப்பு நூல்களை வழங்கியுள்ளனர். குட்டி இளவரசன், டாக்டர் முத்துலட்சுமி, மால்குடி மனிதர்கள் , வண்ணத்துப்பூச்சிகள் இப்படி ஏராளமான புத்தகங்களை பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளனர் க்ரியா அமைப்பினர். மாணவர்கள் வாசிக்கிறார்கள், தாங்கள் வாசித்ததை மற்றவர்களிடம் பகிர்கிறார்கள்.
ஒரு உதாரணம், நான் பணிபுரியும் குரோம்பேட்டை பள்ளி மாணவிகள் பாட நூல்களைத் தாண்டி வாசித்து இன்று நல்ல வாசகர்களாக உருவானதோடு எழுத்தாளர்களாக மாற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் வாசித்து எழுதும் புத்தக அறிமுகங்கள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. நடிகர் சூர்யா ஒரு மாத இதழ் நடத்தி வருகிறார். யாதும் என்ற அந்த இதழில் ஒரு முறை பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி சிறுகதை பற்றிய கதை வெளிவந்திருந்தது. ஜெய்பீம் திரைப்படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவரான செந்தில் ஜெகந்நாதன் அதை எழுதியிருந்தார் . அந்தப் புத்தகத்தை எனது மாணவிகள் வாசித்து பின்னூட்டக் கருத்து எழுதினர். அதை நான் முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அது குறித்து ஞானவேல் அவர்களுக்கும் அனுப்பினேன், அதை அறிந்து அடுத்த மாத யாதும் இதழில், எனது பள்ளியைப் பாராட்டி மாணவியின் வாசிப்பைப் படமாகப் பகிர்ந்து சூர்யா தலையங்கம் எழுதியது மாணவிகளை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டியது.
இப்போதெல்லாம் உடனடியாகத் தலைப்பு கொடுத்து பேச-எழுத வைக்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் இந்த மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெறுகின்றனர். தங்கள் வாசிப்பால்தான் இந்த தன்னம்பிக்கை வளர்ந்ததாகவும் பகிர்கின்றனர். இப்படி வாசிப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது பல களங்களில் அவர்கள் பயணிக்கவும் தனித்து வெற்றி பெறவும் இந்த சமூகத்தில் தங்களுக்கான பொறுப்புகளைப் புரிந்து கொள்ளவும் உதவும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே குழந்தைகள் பள்ளிகளில் பாடநூல்களை வாசிக்கும் போதே இணைச் செயல்பாடாக , வேறு நூல்களையும் வாசிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு ஆசிரியர்களாகிய நாமும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் / கற்றனைத் தூறும் அறிவு’
-என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டால் இளைய தலைமுறை ஆரோக்கியமான முறையில் வளரும்.
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –

(99769 [email protected])

Spread the love