June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசுப் பள்ளி

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் பேணும் வகையில் மழைக்கால பாதுகாப்பு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் மழைக்கால நோய்களால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் தண்ணீர்தான். எனவே மாணவர்கள் காலையிலும் மதியமும் வெந்நீர் கொண்டு வந்து பருகுகின்றனர். அதற்கு உதவிடும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் எவர்சில்வர் தண்ணீர் கேன் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போதுமான அளவில் தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். 5000 ரூபாய் மதிப்பிலான எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை வேம்பாரைச் சேர்ந்த திரு வி.கே. ஜீன்ஸ் ரெக்ஸ் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மழையில் நனையாது பள்ளிக்கு வந்து திரும்பும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் குடை வழங்கப்பட்டுள்ளது. 3000 ரூபாய் மதிப்புள்ள குடைகளை வேம்பாரைச் சேர்ந்த திரு செ.அந்தோனி ராஜ் வழங்கியுள்ளார்.
ஈர நேரங்களில் வெறுங்காலோடு நடப்பதால் சேற்றுப்புண் உள்ளிட்ட பல மழைக்கால பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவைகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அனைவருக்கும் அவர்கள் விரும்பிய வண்ணமயமான காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. குமுதம் இதழ் புகழ் நகைச்சுவை எழுத்தாளர் திரு.கோவி கோவன் அவர்கள் 3000 ரூபாய் மதிப்புள்ள காலணிகள் வழங்கியுள்ளார்.
தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் அவர்கள் கண்காணிப்பில் மாணவர்கள் பாதுகாப்பாக மழைக் காலங்களிலும் பள்ளிக்கு தவறாது வந்து செல்கின்றார்கள்.
(94420 55358 – [email protected])

Spread the love