September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மயானங்கள்

செல்வகதிரவன்
அதிகாலைப் பொழுது. தெருவில ஜன நடமாட்டங்கள் தொடங்கி விட்டன. இரு சக்கர வாகனங்களின் ஓட்டம்.. அவை எழுப்பும் ஒலிகள் காதுகளைப் பிளந்தன. இந்த நேரத்தில் வாகனங்களை எடுத்துக் கொண்டு எங்குதான் போவார்களோ? தெருவில் அவரவர் வீடுகளில் வாசற் பெருக்கும் சத்தம்.. தண்ணீர் தெளிக்கும் சத்தம் முதலியன காதுகளை முற்றுகையிட்டன. வழக்கம்போல் படுக்கையை விட்டு எழுந்தார் பரமசிவன். எழுந்தவுடன் கைபேசியை அழுத்தினார். நேரம் மணி ஐந்தரை எனக் காட்டியது.
இனி எழுந்து பல் துலக்கி விட்டு மனைவி தருகிற மணமான காபியைப் பருகிவிட்டு நாளிதழ்களை வாசிக்க வேண்டும். செய்தித் தாள்களை படித்து முடித்ததும் காலைக் கடனை முடித்து நடைப் பயிற்சிக்குப் போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது பாதியில் நண்பர் தேவராஜன் இணைந்து கொள்வார். கல்குறிச்சி பாலம் வரை வாக்கிங் போய் திரும்புவார்கள். இது பணி ஓய்விற்குப் பிறகு இவர்களால் பின்பற்றப்படும் நடைமுறை ஆயிற்று.
விரிப்பை மடித்து வைத்துவிட்டு கட்டிலை விட்டு எழுகின்ற போது பரமசிவனின் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தபோது நண்பர் தேவராஜன் அழைப்பில் இருந்தார். இந்த நேரத்தில் இவர் கூப்பிடுறார்னா ஏதோ இழப்புச் செய்தியாகத்தான் இருக்கணும். எந்தப் புண்ணியவான் காலமாகிட்டாரோ.. என்று கவலைகள் கவ்வ தேவராஜனுடன்பேசினார்.
வணக்கம் தேவராஜன். ஏற்கனவே ரெண்டொரு தடவ இந்த நேரத்தில கூப்பிடுறபோது சோகத் தகவலத்தான் சொன்னீங்க, இன்னைக்கும் அப்பிடித்தானா..?
ரெம்பச் சரியாச் சொன்னீங்க. ஒங்க கணிப்பில சின்ன மாற்றம் மரணத்தகவல் இல்ல, மரணத் தகவல்கள் சொல்லப் போறேன்..
தகவல்களா?
ஆமாம்..கன்னார் தெருவில நம்ம கனகராஜோட அப்பா..அழகர்கோயில் தெருவில தாசில்தார் தணிகாச்சலத்தோட தம்பி..ரெண்டு பேரும் இறந்திட்டாங்களாம்..
ரெண்டு பேரும் ரெம்ப முக்கியமானவுங்க.. நம்ம குடும்ப லெவல்ல அன்னியோன்யமாப் பழகுனவுங்க..
பொதுவாக பரமசிவனும் தேவராஜனும் துக்க வீடுகளுக்குப் பேருக்குப் போய் தலையைக் காட்டி விட்டு வருவோர் கிடையாது. தகவல் தெரிந்ததும் மாலையுடன் போய் இறந்தோருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு இறந்தவர்களின் உறவுகளிடம் இழப்பை விசாரித்துவிட்டு ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் துக்க வீட்டில் அமர்ந்துவிட்டுக் கிளம்புவார்கள். இறந்தோரின் இறுதி நிகழ்ச்சி எத்தனை மணிக்கு என்பதனைத் தெரிந்து அந்த நேரத்திற்கு மீண்டும் துக்க வீட்டுக்கு வந்து, இறுதி ஊர்வலத்தில் கலந்து அடக்கம் முடியும்வரை காத்திருப்பார்கள். `அய்யாமார்கள் எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க’ என்ற மயானப் பணியாளர் குரல் கேட்ட பிறகே அவ்விடத்தை விட்டுக் கிளம்புவார்கள்.
பரமசிவம், தேவராஜன் இருவரும் கிராமத்தை விட்டு வந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் துக்க வீட்டைப் பொறுத்தவரை மண் வாசனை அவர்களை விட்டு இன்று வரை மறையவில்லை. கிராமிய மரபுகளை அப்படியே கடைப்பிடித்து வருகிறார்கள். பெரும்பாலான கிராமங்களில் இன்றும் அப்படித்தான் யாராவது இறந்து விட்டால், நாற்று நடல்-களை எடுப்பு-கதிர் அறுப்பு-கோயில் காரியங்கள் முதலியனவற்றை ஒத்திவைத்து விடுவார்கள். இறந்தவர் வீட்டாரோடு சண்டை சச்சரவு தகராறு ஏதாவது இருந்தாலும் பகைமையை மறந்து விடுவார்கள். கிராம ஜனங்கள் முழுதும் துக்க வீட்டுக்குப் போய் விடுவார்கள். அங்கு போய் சும்மாவும் இருக்க மாட்டார்கள். இயன்ற வேலைகளை இழுத்துப் போட்டு ஆளுக்கொன்றாகப் பார்ப்பார்கள். அன்று எந்த வீட்டிலும் சோறு சமைத்தல் இருக்காது. அடக்கம் முடிந்து வரும் வரையில் தண்ணீர், காபி தவிர வேறெதுவும் அருந்த மாட்டார்கள்.
இன்று எதிர்பாராத விதமாக ரெண்டு சாவுங்க நடந்துபோச்சு. யார் எத்தனை மணிக்கு எடுக்கப் போகிறாங்கங்கிற விசயம் போய் விசாரித்தால்தான் தெரியும்…யோசித்தவாறு தேவராஜன், பரமசிவன் வீடு நோக்கிப் போனார். நண்பரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பரமசிவன்.
வாங்க தேவராஜன்.. இப்படியே பஜார் பக்கம் போயி மாலைகள் வாங்கிட்டுப் போவோம்.
சரி, சரி.. அப்பிடியே செய்வோம். யார் யார் எத்தன மணிக்கி எடுக்க ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம் விசாரிச்சிங்களா?
விசாரிச்சேன். தாசில்தார் தணிகாச்சலத்தோட தம்பிய மத்தியானத்துக்குள்ள எடுத்திடுராங்க. கனகராஜோட அப்பாவ எடுக்க மூணு மணி ஆகுமாம். இதுல இன்னோரு சங்கதி ஒளிஞ்சிருக்கு..
என்னது?
தணிகாச்சலம் பிற்படுத்தப்பட்டவரு.. கனகராஜ் மிகவும் பிற்படுத்தப்பட்டவரு. ரெண்டு பேருக்கும் வெவ்வேற மயானம். ஒரு சுடுகாட்டுக்குப் போய்ட்டு அப்பறம் அடுத்த சுடுகாட்டுக்கு வரணும்..
நாட்டுல எவ்வளவோ சேஞ்சஸ் வந்துட்டுது. இந்த ஊர்ல சாதிக்கு ஒரு சுடுகாடுங்கிற சிஸ்டத்த மட்டும் மாத்தாம வச்சிருக்காங்க. மக்களும் யோசிக்கிறதில்ல. சர்க்காரும் சரியான நடவடிக்கை எடுக்கிறதில்ல..
முதலில் கனகராஜ் வீட்டுக்குப் போய் மாலை போட்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். அங்கு விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்தார்கள். இறுதி ஊர்வலம் தொடங்குகிற நேரத்தை தெரிந்து கொண்டார்கள். அதன் பிறகு மீண்டும் பஜார் வந்து.. தணிகாச்சலத்தின் தம்பிக்காக இரண்டு மாலைகள் வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய் மரியாதை செலுத்தினார்கள். அங்கும் இறுதி நிகழ்ச்சி குறித்து தெரிந்து கொண்டார்கள். இருவரின் இறுதி ஊர்வலத்திற்கும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கால இடைவெளி இருந்தது. தேவராஜனும் பரமசிவமும் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர்.
மீண்டும் மாலையில் ஆற்றங் கரையில் இருக்கும் இரண்டு மயானங்களுக்கும் போய் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஆற்றில் இரண்டு கரைகளையும் தொடுகிற அளவில் தண்ணீர் போயிற்று. ஆற்றில் இறங்கிக் குளித்தனர்.
தேவராஜன்.. இதுல ஒண்ணு கவனிச்சீங்களா.. மனுசன் செத்த பெறகும் சாதி பாத்து வெவ்வேற மயானத்தில அடக்கம பண்ணுராங்க, இல்ல எரிக்கிறாங்க. இறுதிச் சடங்க முடிச்சிட்டு வந்து ஒரே ஆத்துலதான குளிக்கிறாங்க. இன்ன சாதிக்கு இந்த ஆறுன்னு இல்ல.. இந்த சாதி இந்த ஆத்தில அந்தப்பக்கம் குளிக்கணும்னு வரையரை எதுவும் பண்ணினதில்ல..
அட நீங்க ஒண்ணு..உயிரோட இருக்கும்போது ரயில்ல, பஸ்சுல ஒண்ணாத்தான் ஒக்காந்து போறாங்க. சாதியா பாக்குறாங்க? தொலைதூர ரயில்கள்ல போகும்போது சாப்பாட்டக் கூட பகிர்ந்து சாப்பிடுறாங்க. ஓட்டல்ல சாப்பிடும்போது சமையக்காரங்க எந்த சாதின்னு கேட்டுட்டா சாப்பிடுறாங்க? புத்தி கெட்ட ஜனங்களுக்கு செத்த பெறகு மட்டும் சாதிக்கு ஒரு மயானத்தில பொதைக்கிறத இல்ல எரிக்கிறத மாத்த மனசு வரமாட்டேங்கிது. எந்த நாட்டுலயாவது இப்பிடி ஒரு அவலம் இருக்குதா..?
ஆத்ம நண்பர்களான தேவராஜன், பரமசிவம் இருவரும் ஆற்றில் குளித்தவாறு இப்படி உரையாடினர். உரையாடல் பிறர் செவிகளிலும் விழுந்தது. கேட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து இனியும் தனி மயானம் தேவை இல்லை என்று முடிவெடுப்பார்களா..? அப்படியே முடிவெடுத்தாலும் அதனை செயல்படுத்த சாதி சங்கத்தார் அனுமதிப்பார்களா..?
மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக இந்த சமாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் பதிய வைத்தால் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இதற்கு விடிவுகாலம் பிறக்க வழி வகை செய்ய மாட்டார்களா..?
–என்கிற எண்ணம் மட்டும் இருவர் மனதில் இழையோடத் தவறவில்லை.
(99445 09530 – [email protected])

Spread the love