August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மனித வாசனைகள்

செல்வகதிரவன்,


காலை பத்துமணி. அந்த தாலுகா அலுவலகம் பரபரப்புடன் இயங்கத் தொடங்கியது. ஒரு விசாரணை நிமித்தம் ஆர்டிஓ அங்கு வருகிறார். அதனால் ஒன்பதரை மணிக்கே தாசில்தார் தணிகாச்சலம் ஆபீஸ் வந்துவிட்டார். ஆர்டிஓ வருகைக்கான முன்னேற்பாடுகளை செய்யும் வேலையில் முழுவீச்சுடன் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது ஆபீஸ் தொலைபேசி மணி அடித்தது. தணிகாச்சலம் எடுத்து ஹலோ என்றார். மறுமுனையில் ‘அய்யா! நான் ராஜபுரம் விஏஓ பேசுறேன். இங்க மெயின் ரோட்ல பஸ் மறியல் பண்ராங்க அய்யா..’
யார் பண்ரா? எதுக்குப் பண்ராங்க?
ராஜபுரம் கிராம ஆம்பள பொம்பள அத்தன ஜனங்களும் மறியல்ல இருக்காங்க.. அவுங்க ஊருக்குள்ள பஸ் வராம மெயின் ரோட்டுலயே போயிடுதாம்.
சரி.. மேல ஆர்டிஓ, கலெக்டர்கிட்ட பேசிட்டு என்ன செய்யணுமோ செய்வோம். அதுவரைக்கும் மறியல் பண்ணிக்கிட்டு இருக்கட்டும். இப்ப நாம ஒரு முடிவும் எடுக்க முடியாதில்ல..?
தாசில்தாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. ஆர்டிஓ ஆபீசு வர்றாரு. அவரக் கவனிக்கிறதா? மறியல் கும்பலப் பாத்துப்பேசுறதா..? நாமளா அங்க போனா.. ஒங்கள யாரு அங்க போகச்சொன்னது..? ஆர்டிஓ ஆபீசுக்கு வரும்போது அங்க எதுக்குப் போனீங்கன்னு கேப்பாங்க.
ஆபீஸ்ல ஆர்டிஓவுக்காக காத்திருந்தா, பப்ளிக் பிரச்சனையப் பாக்காம இங்க என்ன பண்ணுறீங்கன்னு கேக்கலாம். முன்னுக்குப் போனா கடி.. பின்னுக்குப் போனா ஒதைங்கிற பொழப்பாப் போச்சு.
சரி.. ஆர்டிஓ கிட்டப் பேசுவோம். அவரு என்ன உத்தரவு போடுறாரோ அதச் செய்வோம்..
ஆர்டிஓவை அலைபேசியில் அழைத்து விசயத்தை விளக்கினார் தணிகாச்சலம்.
“முதல்ல பப்ளிக் போராட்டத்தப் பாருங்க. கலவரமாகிடப் போகுது. அப்பறம் கலெக்டருக்கு மட்டுமல்ல, கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கும். ஆபீஸ்ல டெபுடி தாசில்தார வச்சு நான் என்கொயரிய கண்டக்ட் பண்ணிக்கிடுறேன். நீங்க ரெவின்யூ இன்ஸ்பெக்டரக் கூட்டிக்கிட்டு போலீசுக்கு இன்பாஃம் பண்ணிட்டு ஸ்பாட்டுக்குப் போங்க. பிரச்சன பெரிசாகாம பாத்துப் பேசி சுமுகமா முடிங்க” என்றார் ஆர்டிஓ.
சரிங்க சார்..!
நாய் பொழப்பாப் போச்சு நம்ம பொழப்பு என்று முணுமுணுத்தபடி அந்த ஏரியா ரெவின்யூ இன்ஸ்பெக்டர், பியூன் ஆகியோருடன் தாசில்தார் ஜீப்பில் ராஜபுரத்திற்குப் பறந்தார்.
ராஜபுரம் கிராமம் மெயின்ரோட்டில் நான்கு வழிச்சாலை போடும் வேலைகள் மும்முரமாக நடந்து முடிந்திருந்தன. சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு டவுனில் இருந்து வெகு சீக்கிரம் கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வருகிற நாளை ஜனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அந்த நாளும் வந்தது. ஆனால் எதிர்பார்த்தது நிகழவில்லை. நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்றாகிப் போயிற்று.
ஆம்; தனியார் பேருந்து, அரசுப் பேருந்து முதலியன ராஜபுரத்திற்குள் வரவில்லை. மெயின்ரோடு வழியாகவே விரைந்தோடின. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை வருகிற நகரப் பேருந்து மட்டும் கிராமத்துக்குள் வந்து போனது. அவசரத்திற்கு ஆட்டோவை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. பெட்ரோல் டீசல் உயர்வால் ஆட்டோ கட்டணம் கூடிக்கொண்டே போயிற்று. பத்து ரூபாய் பஸ் கட்டணம் என்பது ஐம்பது ரூபாய் ஆட்டோ சார்ஜ் என்றாயிற்று.
பதினோரு மணிவாக்கில் தாசில்தாரின் ஜீப் மறியல் பண்ணுகிற இடத்திற்கு வந்து நின்றது. ஜீப்பைவிட்டு தாசில்தார் இறங்கினார். அதற்கு முன்பே ரெவின்யூ இன்ஸ்பெக்டரும், பியூனும் ஜீப்பைவிட்டுக் குதித்தனர். இரண்டு பக்கமும் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. வழி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு எரிச்சலுடன் வாகனங்களில் மக்கள் காத்திருந்தனர். கோடை வெயில் அனலாய் கொதித்தது.
வாங்க, அந்த சமுதாயக் கூடத்தில போயிப் பேசலாம் என்றார் தாசில்தார்.
‘மூணு மணி நேரமா எரியிற வெயில்ல நிக்கிறோம். ஒங்களுக்கு ஒரு நிமிசம்கூட இந்த வெயிலத் தாங்க முடியல’..
கூட்டத்தில் ஒருவர் வெளிப்படையாக வார்த்தைகளை வீசியது தாசில்தார் காதில் விழவே செய்தன. இதையெல்லாம் பொருட்படுத்தினால் காரியம் கெட்டுப்போகும் என்றெண்ணி போராட்டக்காரர்களுடன் சமுதாயக் கூடத்திற்குள் நுழைந்தார் தாசில்தார்.
அனைவருக்கும் உட்கார இருக்கைகள் விஏஓ, தலையாரி முயற்சியில் ஏற்பாடாயிற்று. தாசில்தார் நடுநாயகமாக அமர்ந்தார்.
எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் திக்கித்திணறி ஒருவழியாக யோசித்து ‘பஸ் எதுவும் ஊருக்குள்ள வர்றதில்லையா?..’ என்று வினவினார். ஒட்டுமொத்தமாக ஓங்கிய குரலில் ஒவ்வொருவரும் பேச முயன்றனர்.
ஒவ்வொருவராப் பேசுங்க.. ரெவின்யூ இன்ஸ்பெக்டரின் உரத்த குரல் ஒலிக்க, வாய்ப்பை நழுவவிடாமல் பெருமாள் கோயில் அர்ச்சகர் பேச ஆரம்பித்தார்.
சார்! இந்த நான்குவழிச்சாலைய எப்போ திறந்துவிட்டாங்களோ அப்ப இருந்தே பிரைவேட் பஸ்ஸும், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் பஸ்ஸும் ஊருக்குள்ள வர்றதில்ல. இவாளும் என்னன்னமோ பண்ணிப்பாத்திட்டாக. கலெக்டரண்ட நேர்ல மனுக் கொடுத்திருக்காக. எல்லாம் கெணத்தில போட்ட கல்லாச்சே தவிர ஆக்சன் எடுக்கல. தெனமும் பெருமாளுக்கு பூஜை செய்ய அம்பது ரூபா ஆட்டோவுக்குக் கொடுத்திட்டு வர்றேன். தெனமும் இப்பிடி ஆட்டோசார்ஜ் கொடுக்க இந்த ஏழை பிராமணனால முடியுமா சொல்லுங்க. அதனால தாசில்தார் சார் எல்லா வண்டிகளும் ஊருக்குள்ள வந்துபோறதுக்கு அரேஞ்சு பண்ணுணிங்கன்னா ஒங்களுக்கு புண்ணியமாப்போகும்..
அடுத்து உள்ளூர் விவசாயி உக்கிரபாண்டி கோபம் கொப்பளிக்க தனது உள்ளக் குமுறலைக் கொட்டினார்.. ஓட்டுக் கேக்கும்போது மட்டும் ஓடிவர்றாங்க. அதச் செய்யிறோம் இதச் செய்யிறோம்னு அளந்துவிடுறாங்க. ஊருக்குள்ள பஸ் வராம மாசக்கணக்கில சிரமப்படுறோம்; ஏன்னு கேக்க நாதி இல்ல. எத்தன பெட்.டிசன் போட்டும். பிரயோசனம் இல்ல. வேற வழி தெரியாம கார்கள மறிச்சதுக்கு அப்பறம் ஓடி வர்றீங்க..
சரிப்பா! சீக்கிரம் முடி. அரசியல் பேசாத. மேல சட்ட போடாம துண்ட மட்டும் போட்டுக்கிட்டு வந்து. தாசில்தாரு பக்கத்தில நின்னுகிட்டு வாய்க்கு வந்ததப் பேசுற. தாசில்தாருன்னா ஒங்க வீட்டுக் கிள்ளுக்கீரைன்னு நெனச்சியா..என்று ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வார்த்தைகளைக் கொட்டினார்.
இதனைக் கேட்டு உஷ்ணமானார் உக்கிரபாண்டி.
என்ன ஆர்ஐ சார்! என்ன நெனச்சுக்கிட்டு இருக்கிங்க? அந்த அய்யரு கூட சட்ட போடாமத்தான் வந்திருக்காரு. அவரு சாமி! நான் சாமானியன்! அதான் இளப்பமா பேசறீங்க..
சரிப்பா, வா! உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வருது? ஊர் ஒலகத்தில எதுல வேறுபாடு இல்ல.. என்று ஆர்ஐ விடாமல் விவாதம் பண்ணத் தொடங்கினார்.
வாக்குவாதம் வேறு திசையில் பயணிப்பதைப் பார்த்து
‘சரிங்க; உக்கிரபாண்டி.. ஆர்ஐ சொன்னதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிடுறேன். பேச்ச முடிங்க. மத்தவுங்களோட அபிப்ராயத்தக் கேப்போம்’ என்று நிலவரம் கலவரமாகாமல் கட்டுப்படுத்தினார் தாசில்தார்.
மேலும் சில சங்கதிகளைத் தெரிவித்துவிட்டு பேச்சை முடித்தார் உக்கிரபாண்டி. பிறகு எல்லோரும் சுருக்கமாக கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அனைவரும் சொன்னதை தொகுத்துப் பார்த்தால் இன்னும் இரண்டு தினங்களுக்குள் ஊருக்குள் பேருந்துகள் வரணும். இல்லாவிட்டால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என்கிற தினுசில் கிராமத்தாரின் எண்ணங்கள் இருந்தன.
தாசில்தார் கைபேசி மூலம் ஆர்டிஓ, கலெக்டர், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசினார். வருகிற ஒண்ணாந்தேதி முதல் பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் வந்துபோகும் என்கிற உறுதியைக் கூறி ஜனங்களை சம்மதிக்கவைத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை எழுத்துவடிவமாக்கி கிராம முக்கியஸ்தர்கள், தாசில்தார், ஆர்ஐ ஆகியோர் கையெழுத்துப்போட்டு வழங்கிவிட்டு அதன் நகலை எடுத்துக் கொண்டு தாசில்தார் விடைபெற்றார்.
ஜீப்பில் வருகிறபோது என்ன சார்! அந்த கிராமத்தான்கிட்ட இவ்வளவு இறங்கிப்போய் இருக்கத் தேவை இல்ல சார் என்றார் ரெவின்யு இன்ஸ்பெக்டர்.
ஆர்ஐ தம்பி! ஒங்களுக்கு அனுபவம் பத்தாது. தாசில்தார ஜமீன்தாரா நெனச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சு..இன்னக்கி அவுங்கெல்லாம் தெளிவாகிட்டாங்க. தாசில்தார்ங்கிறது அவுங்களுக்கு சாதாரண மனுசன்தான். பெரிய பிரச்சனயத் தீர்க்க வந்திட்டு புதுசா வேறொரு பிரச்சனை முளைக்க நாம காரணமாகிடப்பிடாது. நீங்க தாசில்தாரா ஆகும்போதுதான் இது ஒங்களுக்குப் புரியும்..
வருவாய் ஆய்வாளராக இருந்து வட்டாட்சியாளனவர்தான் இந்த தணிகாச்சலம். அதனால் அவரின் அனுபவம் பளிச்சிட்டது.
(99445 09530 – [email protected])

Spread the love