September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

மணிப்பர்ஸ்

இரா.நாறும்பூநாதன்
என்ன அண்ணாச்சி.. ஒரு பர்ஸ் வச்சுக்கக்கூடாதா ?
ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுக்கும்போதுதான் அவன் இப்படிக் கேட்டான்.
இத்தனை வருஷத்தில் இதுவரை நான் பர்ஸ் வாங்கியதே இல்லை. ஒருவேளை இது அப்பாவிடம் இருந்து தொற்றியதாக இருக்கலாம். அப்பா சட்டைப்பையில் பர்ஸ் வைத்து நான் பார்த்ததே இல்லை. வெள்ளைச் சட்டையின் உள்பாக்கெட்டில் பணம் வைத்திருப்பார். நான் இதுநாள் வரை உள்பாக்கெட் வைத்த சட்டையே போட்டதில்லை. பிரமநாயகம் அண்ணன் ஜெமினி கணேசன் போடுவது போன்ற முழுக்கை சட்டையை மடித்து விட்ட மடிப்புக்குள் ரூபாயை வைத்திருப்பதுண்டு.
தமிழ்ச்செல்வன் கையில் வைத்திருக்கும் புத்தகத்தின் நடுப்பக்கத்தில் கசங்காமல் வைத்திருப்பார் ரூபாய் நோட்டுகளை.
இலஞ்சி அத்தான் சுவர்ப்பக்கம் பார்த்து திரும்பிக் கொண்டு, வேட்டியை விலக்கி விட்டபடி, கட்டம் போட்ட அண்ட்ராயரில் இருந்து ரூபாயை எடுத்து எண்ணுவார்.
பின்ன யார்தான் பர்ஸ் வைத்துப் பார்த்திருக்கிறேன் என்று யோசிச்சேன். கோர்ட் முருகன் தனது மரக்கலர் பர்ஸை பேண்ட்டின் பின்பாக்கெட்டில் இருந்து எடுப்பதை பார்த்திருக்கிறேன். எப்பவாவது ஜில்விலாஸ் கடையில் பஞ்சாட்சரம் குடிக்கும்போது பர்ஸைத் திறந்து காசு கொடுப்பார். பர்ஸ் இரண்டாய் விரியும்போது, ஒரு பக்கத்தில் அவரும் அவரது வீட்டம்மாவும் கறுப்பு வெள்ளையில் சிரித்துக் கொண்டு இருப்பார்கள் புகைப்படத்தில். அதில் முருகன் அண்ணனுக்கு கர்லிங் முடி குருவிக்கூடு மாதிரி அழகாய் இருக்கும்.
சில பத்து ரூபாய்கள்.. ஒரு ஐந்து ரூபா.. ரெண்டு ரூபாய் தாள்கள் சில.. மையத்தில் உள்ள பிரிவில் சில நாணயங்கள் தென்படும். பெரியவன் ஆனதும் இதமாதிரி அழகான பர்ஸ் வாங்கணும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டவன்தான்..அது எப்படி காணாமல் போனது என்றுதான் தெரியவில்லை.
ஒருமுறை, கழுகுமலை கோவில் வசந்த மண்டபத்தின் தூண் அருகில் கறுப்பு நிற பர்ஸ் ஒன்று ஓரமாய் கிடந்தது. பக்கத்தில் யாரும் இல்லை. யாரோ தவற விட்டிருக்கக்கூடும். எடுத்துப் பார்த்தேன். உள்ளே, அம்பது ரூபாய் தாள் ஒன்று.. பத்து ரூபாயில் ரெண்டு தாள்கள்.. சில நாலணா, எட்டணா நாணயங்கள்.. எம்.ஆர்.கோபாலன் பஸ் டிக்கெட் ஒன்று பச்சைக்கலரில் கசங்கிய நிலையில்.. விசாகத்திற்கு வந்தவர் போல.. பாவம் எங்கே நின்று கொண்டிருக்கிறாரோ? முகவரி ஏதும் இல்லை. கண்ணாடி பகுதியில், ஒரு வயசான தாத்தா, ஆச்சி சேர்ந்து உட்கார்ந்து இருக்கும் படம் இருந்தது. பர்ஸுக்கு சொந்தக்காரர் இவராக இருக்கும் என்று தோணவில்லை. அவரோட அப்பா அம்மாவாக இருக்கலாம். பர்சில் இருந்த ரூபாயை எடுத்து கழுகாசலமூர்த்தி கோவில் உண்டியலில் போட்டு விட்டுப் போனேன். வெளியே சில பிச்சைக்காரர்கள் வரிசையாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபோது, இவர்களுக்காவது சில்லறை மாற்றிப் போட்டிருக்கலாமோ என்று தோன்றியது. அடுத்தவர் பணத்தை எடுத்து நாம் தானம் வழங்கி புண்ணியம் சேர்த்து கொள்வதா.. அடப்போடா என்று மனசு சொல்லிக் கொண்டது.
பர்ஸை சற்று மேலே தூக்கிப் பார்த்தபோது, நடுப்பக்கத்தில் மெல்லிய ஓட்டை தெரிந்தது. பழசுதான் போல..
வேலைக்குச் சென்ற பிறகும், ரூபாய் நோட்டுகளை சட்டைப் பையில் வைத்தபடியேதான் இருந்தேன். நாராயணன் அழகான கைப்பை ஒன்று வைத்திருப்பார். அதில்தான் பணம், கர்ச்சீப், சின்னதான ஒரு சீப்பு.. எல்லாமுமே. அது கவசகுண்டலம் போல அவரோடு இணைந்தே இருக்கும். நானும் கொஞ்ச நாள் அப்படி ஒரு பையை வைத்துக்கொண்டு திரிந்தேன். ஒருமுறை, சாப்பிடும் மெஸ்ஸில் வைத்துவிட்டு வந்து விட்டேன். போயே போச்சு. அதன் பிறகு மீண்டும் சட்டைப்பையில்தான்.
எனது அறையில் இருந்த சேகர் விலை கூடின பர்ஸ் ஒன்று வைத்திருப்பான். லெதர் பர்ஸ் லேசான மஞ்சள் கலரில் இருக்கும். அவன் அதில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும் விதமே அலாதியாய் இருக்கும். லாண்டரி துணி தேய்த்துக் கொடுக்கும் மாரி வந்து நிற்கும்போது, எண்பத்து நாலு என்று சொல்லியவுடன், சேகர் பர்ஸைத் திறந்து கத்தை கத்தையாய் இருக்கும் நூறு ரூபாய் தாள்களில் இருந்து ஒன்றை எடுத்து நீட்டும் போது, வாயில் இருந்து வில்ஸ் சிகரெட் புகைந்து கொண்டு இருக்கும்.
“சில்லறை இல்லேண்ணே.. ”என்று மாரி சொல்லும்போது, “மீதியை எவன் கேட்டான்.. நீயே வச்சுக்கோ..” என்று சிகரெட்டை இழுத்தபடியே செல்வான் சேகர். முரட்டு ஜென்மம் அவன்..!
என்னோட பையன் ஒருமுறை ஊருக்கு வரும்போது அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் எடுத்து பணத்தை ஆட்டோக்காரரிடம் நீட்டும்போது தான் அவன் வளர்ந்த பையன் என்ற உணர்வு வந்தது. இவன் கூட பர்ஸ் வைத்திருக்கிறானே? கொஞ்சம் ஆச்சரியமாய்க் கூட இருந்தது. அவன் பர்சில் சில ரூபாய் நோட்டுகள், ஏடிஎம் கார்டுகள்.. கிரெடிட் கார்டு.. நாங்கள் மூவரும் இருக்கும் பழைய போட்டோ ஒன்று…
என்னவோ இவ்வளவு காலத்தை ஓட்டியாச்சு. இனிமேல் பர்ஸ் வைத்து எல்லாம் பழக முடியாது.
பணம் வைக்கும் பர்ஸுக்குள் ஒரு புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றியிருக்கும் என்ற கேள்வி மாத்திரம் இப்போது அடிக்கடி தோன்றுகிறது.
(96294 87873- [email protected])
( முகநூல் பதிவு )

Spread the love