January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பொதுத் துறையும் அரசியல் சட்டமும்

தாமஸ் ஃப்ராங்கோ (அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்)

அரசமைப்புச் சட்டத்தின் வலிமையானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியிலேயே உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் இந்தப் பாதுகாப்பில் தன் பங்கைச் செய்யக் கடமைப்பட்டால் மட்டுமே, அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாப்பானவையாக இருக்கும். – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அரசியலமைப்பை ஒவ்வொரு குடிமகனும் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை, பொதுத்துறை மற்றும் பொது சேவைகளுக்கான மக்கள் ஆணையத்தின் “தனியார் மயமாக்கல்-இந்திய அரசியலமைப்பிற்கு ஓர் அவமானம்” என்ற தலைப்பிலான இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதிர்ச்சி தரும் விபரங்கள்

பொருளாதார நிலை குறித்த அந்த ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் சுமார் 230 மில்லியன் மக்கள் (23 கோடி) வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 190 மில்லியன் (19 கோடி) மக்கள், அதாவது மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர்.15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 20 சதவீதம் பேர் மிக மோசமான உடல் நிலையிலும் உள்ளனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலையின்மை இப்போது 14 சதவீதத்தை தாண்டியுள்ளது. இப்போது டிஜிட்டல் அடைமொழியுடன் வருகின்ற கடனுதவி சுறாக்கள், எந்தவிதமான வரையறைகளும் இல்லாத கந்து வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. 2019-20  ஒரே ஆண்டில் மட்டும், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தற்கொலைகளின்

எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவின் கோடீஸ்வரர்களின் சொத்துக் குவிப்பில் எந்த குறையும் இல்லை.

தி எகனாமிஸ்ட் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2016 மற்றும் 2020-க்கு இடையில் 350 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் அவரது சக தொழிலதிபரான கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 750 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற பெரும் பணக்காரர்களும் ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தை 75 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர்.  நாட்டின் பொருளாதார நிலை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் இவை.

Spread the love