May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பருவநிலை மாற்றம்


அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஐபிசிசி அறிக்கை உலக நாடுகளை எச்சரித்திருக்கிறது.
பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த அதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைக்க வேண்டும் என 2015-ம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், உலக நாடுகள் புவி வெப்பத்தைக் குறைக்க கார்பன் வெளியீட்டைக் குறைக்க தீவிரம் காட்டவில்லை. இதன் காரணமாக உலகின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஐபிசிசி அறிக்கை தெரிவிக்கிறது.
புவி வெப்பமடையும் அளவு அதிகரிக்கும் போது, வெள்ளம், நிலச்சரிவு, கடும் மழை, காட்டுத்தீயை ஏற்படுத்தும் வெப்ப அலைகள், கடல் புயல்கள், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும். புவி வெப்பமயமாதலால் ஏற்கனவே பருவநிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை மேலும் உக்கிரமடைந்து அடிக்கடி இயற்கைச் சீற்றங்களால் பேரழிவிற்கு வழிவகுக்கும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி மக்கள் வானிலை தொடர்பான பேரழிவுகளால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளால் 12.3 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர். 420 கோடி பேர் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபை மதிப்பிட்டிருக்கிறது.
கார்பன் உமிழ்வில் 3-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா பருவநிலை அபாய குறியீட்டில் 7-வது இடத்தில் இருக்கிறது. 2005-ல் இருந்து 2030 க்குள் 33 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை கார்பன் உமிழ்வு குறைக்கப்படும் என இந்தியா உறுதியளித்திருந்தது. ஆனால் அதற்கான போதிய முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடியும். இது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இருத்தலையும் கேள்விக்குறியாக்கி விடும். எங்கோ யாருக்கோ ஆபத்துதானே என்று தமிழக மக்கள் நினைக்க வேண்டாம். நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் 12 நகரங்கள் உள்ளன சென்னை, தூத்துக்குடி நகரங்களும் அந்தப் பட்டியலில் வருகின்றன என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். கோடிக்கால் பூதமடா…
பேரா. ச.மாடசாமி
தோழர் ஜீவாவை நினைத்ததும், ‘கோடிக்கால் பூதமடா-தொழிலாளி கோபத்தின் ரூபமடா’ என்ற மின்னல் வரி உடனடியாக ஞாபகத்துக்கு வரும்.
என்னைப் பற்றிப் பிணித்த வார்த்தை-கோடிக்கால். ஆசிரியர் கூட்டங்களில் இந்த வரியை நான் அடிக்கடி சொல்வதுண்டு.
ஆசிரியர் பேச்சு என்ற ஒற்றைக் காலில் நிற்கும் வகுப்பறையின் மந்தைத் தனத்துக்கு மாற்று- கோடிக்கால்!
நடந்து சலித்த பாதையிலேயே கால் மாற்றாமல் நடந்து கடைசியில் வலித்த கால்களுடன் பணியை விட்டு வெளியேறிய ஆசிரியர் பலரும் அறிந்து கொள்ளாத உண்மை- கோடிக்கால்.
நீண்ட இடைவெளிக்குப் பின்- நீண்ட நீண்ட பெருமூச்சுகளுக்குப் பின்- பள்ளி திறக்கிறது.
கொரோனா- இதுவரை நாம் நடந்திராத அச்சம் கலந்த பாதை!
பாதையைக் கடப்பதற்கு பழைய இரண்டு கால்கள் போதுமா?
புதிய கால்களோடு ஆசிரியர் பயணம் தொடங்கட்டும்!
பயணத்தில் புதுப் புதுக் கால்கள் முளைத்து வளர்ந்தபடி இருக்கட்டும்.
ஆசிரியர் ஒவ்வொருவரும் கோடிக்கால் பூதம்!
(தொடர்புக்கு : 94441 64836)

Spread the love