September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும் காவிரியும்

ஐவி. நாகராஜன்
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு மைசூர் மாகாணம் தனி மாகாணமாகவே இயங்கி வந்தது. பின் கன்னட மொழி பேசிய மக்கள் வாழ்ந்து வந்த தமிழகத்தின் ஒரு பகுதி தற்போதைய மகாராஷ்டிராவின் ஒரு பகுதி என பல பகுதிகள் 1956-ல் மைசூருடன் இணைக்கப்பட்டன.
மாநில மறுசீராய்வு செய்ய நியமிக்கப்பட்ட எஸ்.கே. தார் கமிஷன் மொழிவாரி மாநிலப் பிரிவினையை ஏற்கவில்லை. சரித்திர, பூகோள அடிப்படையில் மாநிலங்களை மறுசீராய்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும் என வலியுறுத்தியது. இந்திய தேசிய காங்கிரஸ் 1948-ல் உருவாக்கிய ஜே.வி.பி என்ற ஜவர்ஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய மாநில மறுசீரமைப்பு குழுவும் மொழிவாரி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட்டி சிறீராமுலு 56 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போதைய பிரதமர் நேரு 1953-ல் இந்த பிரச்சனையை மீளாய்வு செய்யும் வகையில் ஃபசல் அலி தலைமையில் கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை அமைத்தார். இது 1956-ல் மாநில மறுசீராய்வு சட்டத்தை இயற்றியது. அதன்படி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
காவிரி உணர்வுபூர்வமான பிரச்சனையாகவே நீடித்து வருகிறது. ஆறுகள் ஒரு மொழி பேசும் மாநிலத்தில் உருவாகின்றன. ஆனால் அவைகள் கலக்கும் கடல் வேறொரு மாநில எல்லையில் உள்ளது. இந்த சூழலில் ஆறுகளை மொழிவாரி அரசுகள் கட்டுப்படுத்த நினைக்கின்றன. அதேபோல் நீர்ப் பங்கீட்டிலும் மொழி குறுக்கிட்டு பிரச்சனையை உணர்ச்சிகரமாக மாற்றி விடுகிறது. இதற்கு நதிகள் இணைப்புதான் தீர்வாக இருக்க முடியும் என பலராலும் பேசப்படுகிறது. கங்கை, காவிரி உள்ளிட்ட பிற நதிகளை இணைப்பதன் வாயிலாக காவிரி டெல்டா விவசாயிகளின் பாசன வசதி மேம்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நதிகள் இணைப்பை சுற்றுச் சூழல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர்.
இப்படி காவிரி பிரச்சனையில் முட்டல் மோதல்கள், பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன. நிரந்தரத் தீர்வு கண்டுபிடிப்பதற்கு மாறாக ஒன்றிய அரசுகள் அவற்றைத் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் தொடர்கிறது.
(தொடர்புக்கு : 9787368271)

Spread the love