May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும் காவிரியின்…4

ஐவி. நாகராஜன்


இரு அரசுகளும் தங்களின் சொந்த பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் கட்ட முனைந்தபோது 1910-ல் பிரச்சனை எழுந்தது. அதற்கு தீர்வாக 1924-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதன் விளைவாக. மைசூரு சமஸ்தானத்தில் கண்ணம்பாடி என்ற கிருஷ்ணராஜசாகர் அணையும் சென்னை மாகாணத்தில் ஸ்டான்லி அணை என்ற மேட்டூர் அணையும் கட்டப்பட்டன. ஒப்பந்தத்தில் நீர்ப்பங்கீடு, அணை விவகாரங்கள் பேசப்பட்டிருந்தன. 50 ஆண்டுகளுக்குப் பின் அனுபவத்தில் ஏற்படும் சிக்கல்களை இரு அரசுகளும் அலசி ஒப்பந்தத்தை மறுவரையறை செய்யவும் அதில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.


ஆனால் 50 ஆண்டுகளுக்கு பின் ஒப்பந்தம் போட்ட இரு அரசுகளும் இல்லை. காரணம், நாடு சுதந்திரம் பெற்றிருந்தது. மத்திய மாநில அரசுகள் மாறி மாறி வந்தன. சிறியதாக இருந்த மைசூரு சமஸ்தானம் மாநில எல்லையில் பெரிதானது. காவிரி பிரச்சனையை ஓட்டுப் பிரச்சனை ஆக்கியது. ‘ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது..அதனால் காவிரி நீர் எங்களுக்கே சொந்தம்’ என்றது கர்நாடகா. ‘மறுபரிசீலனைக்குத்தான் 50 ஆண்டுகள்.. ஒப்பந்தம் அப்படியே தான் உள்ளது’ என்றது தமிழகம். குறுகிய அரசியல் காரணமாக அதிக லாபம் தரும் மாநிலத்துடன் ஒன்றிய அரசு தன்னை பிணைத்துக்கொண்டது.


இரு மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹரங்கி, கபினி, சுவர்ணவதி என அடுத்தடுத்த அணைகள் கட்டப்பட்டன. பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள் சார்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. மாநில சீரமைப்பில் குடகு கர்நாடகாவுக்கும், கபினி கேரளத்திற்கும், காரைக்கால் புதுச்சேரிக்கும் சென்றன. இதனால் நீரில் பங்கு கேட்டு புதுச்சேரியும் கேரளாவும் வழக்குகள் தொடுத்தன. வழக்குகள் ஒருபுறம் நடக்க ‘காவிரி உண்மை கண்டறியும் குழு’ அமைக்கப்பட்டு இரு மாநிலங்களின் பாசனப் பரப்பு அளவிடப்பட்டது. தமிழகம் 25.80 லட்சம் ஏக்கரிலும் கர்நாடகா 6.80 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி செய்வதாக அந்த குழு அறிக்கை அளித்தது. அங்கு பாசனப் பரப்பை பெருக்கவும் இங்கு பாசனப் பரப்பை சுருக்கவும் கர்நாடகா திட்டமிட்டது. தமிழக அரசியலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததால் காங்கிரஸ், பாஜக ஒன்றிய அரசுகள் கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளும் சூழலை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது. (தொடரும்)


(தொடர்புக்கு : 9787368271

Spread the love