May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும் காவிரியின்…3

ஐவி. நாகராஜன்


குப்பையையும் கழிவு நீரையும் கையாளத் தெரியாமல் நாம் நகரை விரிவாக்குவதால் அடையும் பலன்களை விட கெடுதல்களைத்தான் அதிகம் சந்திப்போம். வெளிநாடுகளில் தற்கால சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்கின்றனர். நாம் சிரமங்களைத் தாங்காமல் தற்காலிக தீர்வுகளைத் தேடி எதிர்காலத்தைத் தொலைக்கிறோம். அடுத்த சந்ததியை நினைவில் வைத்து இந்த நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். சென்னையின் அமைவிடம், புவியியல் அமைப்பு, கடல் மட்டத்திலிருந்து உள்ள உயரம் உள்ளிட்டவற்றை வைத்துதான் நாம் விரிவாக்கத்தை முன்னெடுக்க வேண்டும்
அரசியலிலும் அறிவியல் வேண்டும். அறிவியலிலும் அரசியல் வேண்டும். அரசியல்வாதிகள் அறிவியல் முறையில் சிந்திக்க வேண்டும். அறிவியல் அறிஞர்கள் அரசியல் ரீதியாக தீர்க்கும் வகையில் தீர்வுகளைக் கூற வேண்டும். அறிவியலும் அரசியலும் இணைந்து சென்னையைக் காக்க வேண்டும். இனியும் நீர்நிலைகளைக் கிழித்து சாலை அமைக்கக் கூடாது. நம்மால் எத்தனையோ மாடிக் கட்டடங்களைக் கட்ட முடியும். ஆனால் ஒரே ஒரு நீர்நிலையைக் கூட உருவாக்க முடியாது. சென்னையின் சொத்தே நீர்நிலைகள் தான். வடசென்னையில் கொசஸ்தலை, மத்திய சென்னையில் கூவம், தென் சென்னையில் அடையாறு என மூன்று ஆறுகள் உள்ள ஒரே இந்திய நகரம் சென்னைதான். அவற்றை இழந்தால் சென்னை தலைநகருக்கான தகுதியை இழக்கும்.
காவிரியைப் பொறுத்தவரை 200 ஆண்டுகளாக தடைகளுக்குள் முடங்கியும் முன்னேறியும் வந்திருக்கிறது. மொழிவாரி மாநில பிரிவுக்குப் பின் மொழிவாரி நதியாகவும் சுருங்கி பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. கர்நாடகா எப்போதுமே காவிரியை அடக்க நினைக்கிறது. தமிழகம் அதை அடையத் துடிக்கிறது. இதுதான் இப்போதைய பிரச்சனைகளுக்கான வேர். காவிரி ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. காவிரி சந்தித்த பிரச்சினைகளை கழுகுப் பார்வையில் பார்த்துவிட்டு குதிரைப் பாய்ச்சலில் தமிழகம் பயணிக்க வேண்டும். மன்னராட்சிக்குப் பின் சென்னை மாகாணத்தை பிரிட்டிஷ் அரசும் மைசூரை சமஸ்தானமும் ஆண்டன. அப்போதே கூட நதி நீர் பங்கீட்டில் பிரச்சினைகள் இருந்தன. பேச்சுகளும் இழுபறிகளும் தொடர்ந்த நிலையில் 1892-ல் உடன்பாடு எட்டப்பட்டது. (தொடரும்)


(தொடர்புக்கு : 9787368271 )

Spread the love