May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும் காவிரியின்…1

ஐ.வி. நாகராஜன்

தன்னை அகழ்வாரைத் தாங்கிக்கொள்ளும் பூமியைப்போல உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொள் என பொறுமையைக் கற்பிப்பார் வள்ளுவர். நிலம் அமைதியின் இலக்கணம். சென்னை உருவான வாழ்விடம் அல்ல, உருவாக்கப்பட்ட வாழ்விடம். சென்னையின் வரலாற்றில் இன்றைய புறநகரங்கள்தான் அன்றைய நகரங்கள். சென்னையில் இருந்த நீர்நிலைகளின் எண்ணிக்கை 500-க்கும் மேல். அவை இன்றைய கட்டடங்களுக்குக் கீழ் போய் விட்டன. ஆரணி, பாலாறு, அடையாறு, கூவம், கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளின் உபரிநீரைத் தாங்கும் தாங்கல் ஏரியாகவும் கடலை விடக் கீழிருந்து நன்னீரை சக்தியால் தாங்கிப்பிடிக்கும் சதுப்பு நிலமாகவும்தான் ஒரு காலத்தில் சென்னை இருந்தது. யானையும் சமவெளி தண்ணீரும் ஒன்றுதான். இரண்டும் தம் மூதாதையர் பயன்படுத்திய பாதையை மறக்காதவை. அவை நினைத்தால் மனிதத் தடைகளை தூக்கி வீசிவிட்டுச் செல்ல முடியும். அந்தக் காட்சிதான் 2015-ல் சென்னையில் அரங்கேறியது. நாம் நீர்நிலைகளைத் தூர்த்தும் வழித் தடங்களை மறித்தும் கடலை நோக்கியும் நகரை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடலில் செயற்கைத் துறைமுகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் நகர உருவாக்கத்துக்கு முன் நீர்வழித்தடங்கள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவித்து விடுகின்றனர். வளர்ச்சிக்காகவும் அவர்கள் அவற்றை சீண்டுவதில்லை. அதனால் வெள்ளம், வறட்சி, புயல், மழை என அனைத்தையும் தாங்கும் அரணாக அவை உள்ளன. சென்னையில் 40 ஆண்டுகளுக்கு முன் 70 சதவீத நிலம் காலியாக இருந்தது. தற்போது 15 சதவீதம் கூட இல்லை. இதில் எப்படி மழைநீர் சேகரிப்பை சாத்தியப்படுத்துவது? சென்னையில் களிமண், மணல், பாறை என பலவித மண் அமைப்புகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஒரே மாதிரியான மழைநீர் சேகரிப்பு எப்படி சாத்தியமாகும்? ஒவ்வொரு வீட்டுக்கும் மழைநீர் சேகரிப்பு என்பதைவிட அனைத்து நீரையும் கால்வாய்கள் வழியாக ஒருங்கிணைத்து நிலத்தடி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பில் சேமித்து சுத்திகரிப்பதுதான் சரியாக இருக்கும். அதை அரசுதான் செய்ய வேண்டும். செய்யுமா?
(தொடரும்)

(தொடர்புக்கு : 9787368271 )

Spread the love