June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும்,காவிரியின்..

ஐவி.நாகராஜன்
ஒவ்வொரு ஆண்டும் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டுமென 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை வழங்கியது. ஆனாலும் ஒன்றிய அரசு தீர்ப்பை உடனே அரசிதழில் வெளியிடவில்லை. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில் இடைக்காலத் தீர்ப்புக்குப் பின் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 13 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் அதையாவது வழங்க இந்த வெளியீடு உதவுமென தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் நம்பினர்.
அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது. கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை வைத்தது. உச்சநீதிமன்றமும் அந்த கோரிக்கையை ஏற்றது.
ஐந்தாண்டு பரிசீலனைக்குப் பின் 2018 பிப்ரவரி 16-ல் தனது தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். அதாவது நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பிலிருந்து 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின்படி பார்த்தால் கர்நாடகாவில் ஒரு இலட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். தமிழகத்தில் 89,000 ஏக்கர் பாசனம் இல்லாமல் தரிசாகும்.
எனவே தண்ணீர் குறைக்கப்பட்டது நமக்கான அநீதி என தமிழக விவசாயிகள் குமுறினர் என்றாலும் அந்தத் தீர்ப்பின் முக்கியமான அம்சம் நதி என்பது நாட்டின் சொத்து என்பதுதான்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒன்றிய அரசின் நீர்ப்பாசனத் துறை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைத்தது. நடந்து முடிந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புகளின்படி எல்லாம் நடந்தன என்றாலும் தீர்ப்புகளில் குறிப்பிட்ட அளவில் காவிரி நீர் மட்டும் வரவில்லை.
தொடரும்..
(தொடர்புக்கு : 9787368271)

Spread the love